

பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம் படுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்பத்துறை, ‘இன்ஸ்பயர்’ (INSPIRE) விருது வழங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு முதல் புத்தாக்க அறிவியல் ஆய்வு, ‘மானக்’ (MANAK) என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான ‘இன்ஸ்பயர் - மானக்’ விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
யார் விண்ணப்பிக்கலாம்? - 6-10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல், புதுமையான சிந்தனை கலாச்சா ரத்தை வெளிக்கொணர்வதே இந்த விருதின் நோக்கமாகும். இந்த வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட புத்தாக்கப் படைப்புகளை வெளிப்படுத்தும் மாணவர்களின் நேரடி வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 வழங்கப் படும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். மாணவர்களின் பெயர், வங்கிக் கணக்கு புத்தகத்தில் உள்ளதுபோல பதிவு செய்தல் மிகவும் அவசியம்.
முக்கிய அம்சங்கள்: விருதுக்கு விண்ணப்பிப்ப வர்களின் படைப்புகள் புதுமையாக இருப்பது அவசியம். தற்சமயம் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக இருக்கலாம். குறைந்த செலவில் தயாரான படைப்புகள், கையாள்வதற்கு எளிமையாக இருக்க வேண்டும். சென்ற ஆண்டு பயன்படுத்திய படைப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. படைப்புகளைப் பதிவுசெய்யும் மொழியைத் தேர்வுசெய்ய வேண்டும். பதிவுசெய்யும்போது ஒலி/ஒளி வடிவில் பதிவுசெய்யலாம்.
பள்ளிகள் என்ன செய்யலாம்? - பள்ளிகளில் பெறப்பட்ட யோசனைகளில் புதுமையான ஒரு படைப்பு, ஏற்கெனவே உள்ள படைப்பை மேம்படுத்துதல், நிகழ்கால சூழலில் உள்ள ஒரு பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் யோசனைகளைத் தேர்வு செய்யலாம். அனைத்து யோசனைகளையும் சேகரித்த பின்பு தலைமையாசிரியரும் மற்ற அறிவியல் ஆசிரியர்களும் கலந்தாலோசித்து சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த விருதுக்கு விண்ணப்பிப்போர் www.inspireawards-dst.gov.in என்கிற இணையதளத்தில் ஆகஸ்ட் 31க்குள் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு, https://rb.gy/6qx50 என்கிற இணைப்பைப் பார்க்கவும்.
- கட்டுரையாளர், இயற்பியல் பேராசிரியர், கோவை