Published : 25 Dec 2017 03:45 PM
Last Updated : 25 Dec 2017 03:45 PM

பேட்டரி சைக்கிள்: பிராண்ட் அம்பாசிடர் சல்மான் கான்

வெ

கு விரைவிலேயே பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெல்லி எக்ஸ்பிரஸ் சாலையில் சைக்கிளில் செல்வதைப் பார்க்கலாம். டெல்லி–மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் சைக்கிளில் செல்வோருக்காக புதிதாக போடப்பட்ட பாதையில் சல்மான் கான் பயணிக்க உள்ளார்.

டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் வழிச்சாலையானது 14 லேன்களைக் கொண்டது. இதில் 2.5 மீட்டர் அகல வழித்தடமானது சைக்கிளில் செல்வோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 30 மாதங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய இத்திட்டப் பணி 14 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான லேன்களைக் கொண்டதும் இதுதான். சைக்கிள் ஓட்டிகளுக்காக பிரத்யேக லேன் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்குகிறார் சல்மான் கான்.

2015-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரூ. 7,566 கோடி மதிப்பிலான இந்த நெடுஞ்சாலை பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியபோது இந்த சாலை சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இருக்கும் என்று குறிப்பிட்டார். அதை மெய்ப்பிக்கும் வகையில் பேட்டரி சைக்கிள் உபயோகத்தை தொடங்கி வைக்க பிராண்ட் அம்பாசிடராக சல்மான் கானை நியமித்துள்ளது மத்திய அரசு.பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் சைக்கிளுக்கென பிரத்யேக பாதையை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படும் வாகனங்களைக் காட்டிலும் சுற்றுச் சூழல் காப்பு மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் சைக்கிள் ஓட்டுவதை பெருமையாக கருத வேண்டும். இதைப் பிரபலப்படுத்த பாலிவுட் நடிகர்கள் வர வேண்டிய அளவுக்கு வாகனங்களின் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்துவிட்டது. குறைந்த தூரங்களுக்காவது இனி சைக்கிளைப் பயன்படுத்தும் வழக்கம் மக்களிடையே அதிகரிக்கும் என்று நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x