Published : 26 Sep 2017 11:17 AM
Last Updated : 26 Sep 2017 11:17 AM

மாணவர் மனம் நலமா? 02: கவனிக்க முடியும் என்று நம்புங்கள்!

படிப்பைத் தவிர எல்லாவற்றிலும் கவனம் அலைபாய்கிறது. படிப்பின்மீது கவனம் செலுத்த என்ன செய்ய வேண்டும்? –

- ராமகிருஷ்ணன், கடலூர்.

கல்வி, உளவியல், நரம்பியல் விஞ்ஞானம், மனநலம் போன்ற தலைப்புகளில், கடந்த 20 வருடங்களில் மிக அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட தலைப்பு ‘கவனம்’. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது, அந்த வகுப்பறை மற்றும் அவர் நின்று கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். பின்பு அதை உணர்கிறீர்கள். இது முதல்நிலை.

இரண்டாம் நிலையில், கொஞ்சம் மனதைக் குவித்து, அவர் எடுக்கும் பாடத்தினுள் கவனம் செலுத்துங்கள். இப்போது பார்ப்பதோடு, கேட்கவும் தொடங்குங்கள். ஸ்பாட் லைட்டை முதலில் எரியவிட்டு, பின்பு அதை ஒரு இடத்தில் ஃபோகஸ் பண்ணுகிற மாதிரி இதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில ஆய்வாளர்கள், கவனம் என்பது, “ஒரு சூம் லென்ஸை ஃபோகஸ் பண்ணுகிறமாதிரி” என்கின்றனர். ட்ரெய்ஸ்மென் ‘ஒருங்கிணைப்பு கோட்பாட்டின்’ மூலம் 1993-ல் கவனத்தை இவ்வாறு விளக்கினார்: சில விஷயங்களைத் தேர்வுசெய்து, அதை உணர்ந்து, அந்த இடத்தில் வரைபடம் போன்றதை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். அதற்குப் பெயர்தான் கவனம்.

மூளையின் முக்கியச் செயல்பாடுகளில் கவனமும் ஒன்று. இரண்டு அல்லது மூன்று விஷயங்களில் கவனம் செல்லும்போது, நமக்கு வேண்டியவற்றில் இருக்க வேண்டிய கவனம் சிதறுகிறது. கார் ஓட்டும்போது, அலைபேசியில் பேச ஆரம்பித்தால், கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும். வகுப்பறையில் பாடம் எடுக்கும் ஆசிரியரின் விரிவுரையிலிருந்து கவனம் சிதறாமல் இருப்பதற்கு, ஆர்வமும் வேண்டும்.

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விஷயங்களைக் கவனிப்பதற்கு கொஞ்சம் பயிற்சி தேவை.

கவனத்தை மேம்படுத்துவது எப்படி?

1. ஐந்து நிமிடம் கவனத்தோடு படிக்கப்போகிறேன் என்று நினைத்துக்கொள்ளவும். அவ்வாறு படித்த பிறகு 2 நிமிடங்கள் ரிலாக்ஸ் பண்ணவும். மறுபடியும் 5 நிமிடங்கள் கவனத்தைச் செலுத்தவும். பின்பு 2 நிமிடங்கள் ஓய்வு. இம்மாதிரி ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் பயிற்சி பெறவும். நாளடைவில், கவன நேரத்தை அதிகப்படுத்தவும்.

2. என்ன செய்யப்போகிறோம் என்பதைக் கற்பனையாக மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்கவும்.

3. கவனத்தைக் கெடுக்கும் விஷயங்களைக் குறித்துக் கொள்ளவும்.

4. பதற்றத்தை தவிர்க்க மூச்சு பயிற்சி பழகலாம்.

5. மன இறுக்கத்தைத் தளர்த்த உடற்பயிற்சி உதவும்.

6. சில நேரம் மனப்பாடம் செய்வதுகூடக் கவனத்தை மேம்படுத்தும். (நன்றாகப் புரிந்து படித்த பாடத்தைக்கூட மனப்பாடம் செய்யலாமே!)

7. அவசரமாக வாசிப்பதைத் தவிர்க்கவும்.

8. எப்போதும் ஆர்வத்தோடு இருக்கவும்.

9. நண்பர்களோடு இருக்கும்போது நம்முடைய கவனம் முழுமையாக இருக்கிறதல்லவா, அதே மாதிரி மற்ற இடங்களிலும் இருக்க முயலவும்.

10. “என்னால் முழுமையாகக் கவனிக்க முடியும்” என்று நம்புங்கள்.

11. கவனிக்க வேண்டிய விஷயங்கள் ‘உங்களுக்குப் பிடித்தவை’ என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

கஷ்டப்பட்டுக் கவனிப்பதைவிட, இஷ்டப்பட்டுக் கவனிப்பது பலன் தரும்.

பள்ளியில் தமிழ்வழியில் படித்த நான் தற்சமயம் கல்லூரியில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். என்னை யாராவது ஆங்கிலத்தில் திட்டினால், திரும்ப பேச முடியவில்லை. தாழ்வு மனப்பான்மையில் சில நேரம் தற்கொலை பற்றிக்கூட யோசித்திருக்கிறேன். மற்றவர்களிடம் பேச கூடத் தயக்கமாக உள்ளது.

- சாந்தி, கும்பகோணம்.

(பெயர் மாற்றப்பட்டுள்ளது)

ஆங்கிலம் என்பது ஒரு மொழி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள், ஆங்கிலத்தில் பேச சற்றுப் கூடுதலாக முயற்சி எடுக்க வேண்டும். நம்மைப் போன்ற மற்றவர்களால், ஆங்கிலம் பேச முடியும்போது, நம்மாலும் பேச முடியுமென்று நம்பத் தொடங்குங்கள்.

முதலில், மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதைக் கவனியுங்கள். கொஞ்சமாக பேசுங்கள், ஆங்கிலத்தில் வாசிக்க பழகுங்கள். சில நாட்கள் கழித்து, கேட்பதினையும், பேசுவதினையும், படிப்பதினையும் அதிகப்படுத்துங்கள்.அடிப்படை இலக்கணத்தினைப் பயிலுங்கள் உதாரணமாக, Third person singular ஆன He-க்கு, Do என்பதற்கு Does என்று வர வேண்டும் என்கிற விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும்.

கண்ணாடி முன்பு பேசிப் பாருங்கள், தன்னம்பிக்கை பிறக்கும். வாக்கியங்களை முழுவதுமாகப் படித்து, அதன் பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். முதலில் தமிழில் ஒரு செய்தியை வாசித்துவிட்டு ஏதாவது ஒரு ஆங்கில நாளிதழில் அதே செய்தியை வாசியுங்கள். புரியாத வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள். ஆங்கில தினசரியில் வரும், ‘Letters to Editor’ பகுதியை வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சுருக்கமாகவும், தெளிவாகவும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கும்,பேசுவதற்கும் அது மிகவும் பலனளிக்கும் என்று என்னுடைய ஆங்கிலப் பேராசிரியர் அடிக்கடி கூறுவார்.

புதிதாகத் தெரிந்துகொண்ட வார்த்தைகளை, நீங்கள் அடுத்த முறை பேசும்போது உபயோகித்துப் பார்க்கவும். வார்த்தை உச்சரிப்பு மிகவும் முக்கியம். மற்றவர்கள் ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்கிறார்கள்என்பதை கவனிக்கவும். சில சமயம் வார்த்தைகளை முக்கியமாக Noun போன்றவற்றைத் தவறாக உச்சரித்தாலும், வருத்தப்பட வேண்டாம். முன்பு இங்கிலாந்து சென்றிருந்தபோது, என்னுடைய ஒரு இனிஷியலான THIRUPAPULIYUR என்பதை ஒருவர் ‘கொத்துக்கறியாக்கி’ விட்டார்.

சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள், உச்சரிப்பில் முன்பின் இருந்தாலும், கவலைப்பட மாட்டார்கள். தைரியமாகப் பேசுவார்கள். தவறாகப் பேசிவிட்டாலும், அதற்காகக் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். யாருமே பிறந்தவுடன் நடந்துவிட முடியாது. விழுந்து, எழுந்துதான் நடை பழகுகிறோம். ஒரு அந்நிய மொழியைக் கற்றுக் கொள்வதும் இப்படித்தான். ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் குறுக்குவழிகள் கிடையாது. ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் போதும்.

சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் ஆங்கில செய்தி சேனல்களில், தவறாமல் செய்திகளைக் கேளுங்கள். அவர்கள் எப்படி ஒரு செய்தியைச் சொல்கிறார்கள், எந்த மாதிரித் தனித்தன்மையுடன் கூடிய உச்சரிப்புகளைக் கொண்டிருக்கிறார்கள், செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி ஆகியவற்றை உற்றுக் கவனியுங்கள்.

பின்பு பிரிட்டிஷ் செய்தி சேனல்களைப் பார்க்க ஆரம்பியுங்கள். அவர்களின் உச்சரிப்பு வித்தியாசங்களை அறிவதற்கு இம்முயற்சி பெரிதும் உதவும். ஆங்கிலப் பத்திரிகைகளையும், நாவல்களையும் படிக்க ஆரம்பியுங்கள். நாளடைவில், வித்தியாசமான அதே நேரத்தில் சரியான ‘idioms and phrases’-களை உங்களுடைய உரையாடல்களில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

இதற்காக, நீங்கள் தற்கொலை எண்ணங்கள் வரை சென்றிருப்பது தேவையில்லாத ஒன்று. முதலில், தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியேறுங்கள். நினைவில் கொள்ளுங்கள், எந்த மொழியும் பயிலக்கூடிய ஒன்றே.

‘மாணவர் மனம் நலமா?’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் டி.வி. அசோகன் (தொடர்புக்கு: tvasokan@gmail.com). வாசகர்கள் தங்களுடையப் படிப்புத் தொடர்பான உளவியல் சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ்,

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002,

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x