Published : 11 Dec 2017 12:27 PM
Last Updated : 11 Dec 2017 12:27 PM

நஷ்டத்தை கணக்கிடாத வருமானம் சரியா?

நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமலேயே வருமானம் அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சியடைய முடியுமா? ஆனால் பொதுமக்களும் சரி அரசும் சரி நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பதை கொண்டாடுகிறோம், நஷ்டத்தை கணக்கில் கொள்ளாமலேயே.

தேசிய வருவாய் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் உற்பத்திசெய்யப்பட்ட அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை அவற்றின் சந்தை விலையில் அளவிடுவதால் கிடைக்கும் மொத்த மதிப்பாகும்! முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக இருந்தபோது நம்மில் பெரும்பாலானோரை அது கவலையில் ஆழ்த்தியது! ஆனால், இரண்டாவது காலாண்டில் அது 6.3 சதவீதத்திற்கு உயர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் அளித்தது! தேசிய வருவாயின் வளர்ச்சி விகிதம் அதிகரித்தால்தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை என்ற பொதுவான கருத்துதான் நம்மிடையே பரவலாகக் காணப்படுகிறது.

தேசிய வருவாயைக் கணக்கிடும் தற்போதைய முறையில், சுற்றுச்சூழலிலிருந்து பெறப்படும் அளவிடற்கரிய பயனுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பைக் கணக்கிடுவதில்லை.

உதாரணமாக, நீர் நிலைகளை எடுத்துக்கொண்டால் அவை நான்கு விதமான முக்கிய சேவைகளை வழங்குகின்றன: ஒன்று, வழங்கல் சார்ந்த சேவைகள். இதில், குடிநீர், பாசன நீர், தொழிற்சாலைகளுக்கான நீர் போன்ற பல வகைப்பட்ட நன்மைகள் அடங்கும். இரண்டாவதாக, சமச்சீர் சார்ந்த சேவைகள். இதில், நிலத்தடி நீரை சமன்செய்வது, வெள்ளத்தை சீர்செய்வது, பிராந்திய தட்பவெட்ப நிலையை சீர்செய்வது, பல்லுயிர் பெருக்கம் சார்ந்த சேவை போன்ற சேவைகளை உள்ளடக்கியதாகும்! மூன்றாவதாக, கலாசாரம் சார்ந்த சேவைகள். இதில், மனமகிழ் சேவை, சுற்றுலா சேவை மற்றும் மதம் சார்ந்த சேவைகள் அடங்கும். நான்காவதாக, இயற்கைக்கான ஊட்டச்சத்தை விளைவிப்பது, மண் வளம் காப்பது, மகரந்த சேர்க்கைக்கு துணைபுரிவது போன்ற இயற்கைக்கான அடிப்படை சேவைகள் அடங்கும். இந்த சூழல் சேவைகளைத்தான், பல கோடிக்கணக்கான நுகர்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் நாம் கணிசமாக பயன்படுத்துகிறோம்! ஆனால், இவை அனைத்தும் விலையில்லா சேவைகள் என்பதால் இவை தேசிய வருவாய்க்குள் வருவதே இல்லை. அதனால், இவற்றின் தேசிய மதிப்பு சரிவர தெரியாத காரணங்களினால் இவை அழிவுக்குட்படுத்தப்படுகின்றன!

இவற்றின் அழிவினால் ஏற்படும் பொருளாதார இழப்புகளுக்கு தகுந்தவாறு தேசிய வருவாயில் தகுந்த மாற்றங்களை செய்யத் தவறுவதால் தேசிய வருவாயை ஒரு நாட்டு நலனை பிரதிபலிக்கும் குறியீடாக கருதமுடியாது!

ஒரு விவசாயி ரூ. 1,00,000 மதிப்புள்ள பத்து தென்னை மரங்களை விற்று ரூ.1,00,000 மதிப்புள்ள ஒரு ஐந்து பசுக்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். தனிநபர் வருவாய்- செலவுக் கணக்கின்படி அவரின் சொத்து மதிப்பு ரூ.1,00,000 தான். இதையே, ஒரு அரசாங்கம் ரூ. 1,00,000 மதிப்புள்ள ஆற்று மணலை அள்ளி விற்று ரூ.1,00,000 மதிப்புள்ள ஒரு கணினியை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். இங்கு, அரசாங்கத்தின் சொத்து மதிப்பு ரூ. 1,00,000! ஆனால், மணல் விற்றது ஒரு வருவாயாகவும், கணினியின் மதிப்பை மற்றொரு வருவாயாகவும் சேர்த்து ரூ.2,00,000 மாகக் கணக்கிட்டால் அது தவறுதானே? உண்மையில், இயற்கை வளமான மணல் குறைவது ஒரு இழப்பாக கணக்கிடப்படவேண்டும்?

வளர்ச்சிக்காக காடுகளை அழிக்கும்போதும், நிலக்கரி மற்றும் கனிமங்களை வெட்டியெடுக்கும்போதும், நிலத்தடிநீரை உறிஞ்சும்போதும் அவை வருவாயாகவே கணக்கிடப்படுகின்றன. இது தேசிய வருவாய் உயர்வதாக ஒரு மாயையை ஏற்படுத்துகிறது! இயற்கை வளங்கள் நாட்டின் மூலதனங்கள். அவை வங்கியில் உள்ள வைப்புநிதி போன்றது. வைப்பு நிதியை எடுத்து வருவாயாக நுகர்ந்தால், அது விரைவில் தீர்ந்து போகும். வளர்ச்சிக்காக தங்களின் இயற்கை வளங்களை சார்ந்திருக்கும் பெருவாரியான மாநிலங்கள் இயற்கை வளங்களை சுரண்டி அதை தேசிய வருவாயாக காண்பித்துக்கொண்டிருக்கின்றன?

தேசிய வருவாயைக் கணக்கிடும்போது இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் வளங்களின் சுரண்டல்களை இழப்பாகக் கணக்கிடாமல் வருவாயாகக் கணக்கிடுவதால், தற்போது கணக்கிடப்படும் GDP ஒரு நாடு அல்லது மாநிலத்தின் நிலைத்த வளர்ச்சியை பிரதிபலிப்பதில் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது!

தேசிய வருவாய் எனும் மாயை

தேசிய வருவாயைக் கணக்கிடும் தற்போதைய முறையில் நீக்கவேண்டிய சில மதிப்புகளை சேர்த்துக்கணக்கிடுவதுதான் பிரச்சினை. உதாரணமாக, ரூ. 5000 மதிப்புள்ள ஒரு தோலினாலான பை தயாரிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதனால், தேசிய வருவாய் ரூ. 5000மாக உயரும்! ஆனால், அந்தப் பையைத் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவினால் ரூ. 1,000 மதிப்புள்ள சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழ்ந்துள்ளதாக வைத்துக்கொண்டால், உண்மையான தேசிய வருவாயின் மதிப்பு ரூ.4,000. இரண்டாவது பை தயாரிக்கும்போது சீர்கேட்டின் இறுதிநிலை மதிப்பு ரூ.2,000க்கு அதிகரிப்பதாகக் கொண்டால், GDP யின் இறுதிநிலை மதிப்பு 3,000 ரூபாய்க்கு குறைய வேண்டும். ஆனால், தற்போதைய நடைமுறையில் அது தொடர்ந்து ரூ.5,000-மாகவே கணக்கிடப்படுவதால் அது ஒரு தவறான வளர்ச்சிக்குறியீடுதான்.

சுற்றுச்சூழல் மாசுபடும்போது, இரண்டு விதமான இழப்புகள் நேரிடுகின்றன. ஒன்று, உற்பத்தி சார்ந்த இழப்பு. மற்றது, சூழல் சேவைகள் சார்ந்த இழப்பு. உற்பத்தி சார்ந்த இழப்பு என்பது சுற்றுச்சூழல் மாசுபடுவதனால் தேசிய வருவாயில் ஏற்படும் இழப்பாகும். உதாரணமாக, பாசனத்திற்கான நீர் மாசுபடுவதனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.100 கோடி மதிப்புள்ள விவசாய உற்பத்தி குறைந்தால், தேசிய வருவாயில் ரூ. 100 கோடி இழப்பு ஏற்படுவதாக கொள்ளவேண்டும். ஆனால், இந்த இழப்பு நீர் மாசுபடுவதனால்தான் ஏற்படுகிறது என்பதை தற்போதைய கணக்கிடும் முறையில் பிரித்துக்காட்டுவதில்லை. எனவே, நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தினால் ரூ.100 கோடி மதிப்புள்ள இழப்பை சரிக்கட்டலாம்.

மாசு மனிதனைத் தாக்கும்போது, பொருளாதார இழப்பை எவ்வாறு கணக்கிட்டு அதை தேசிய வருவாயில் பிரித்துக்காட்டுவது? மாசுபட்ட நீரை உபயோகிப்பதால் ஒருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும்போது அங்கு நான்கு விதமான இழப்புகள் ஏற்படுகின்றன. முதலாவதாக, பாதிப்புக்குள்ளானவரின் வருவாய் இழப்பு. இரண்டாவதாக, அவர் உற்பத்தி செய்திருக்கக்கூடிய பொருள் உற்பத்தி நிகழாமல் போவது. பாதிக்கப்பட்ட நபர் ஒரு மோட்டார் உதிரி பாகத்தை தயாரிப்பவராக இருப்பின், நோய்வாய்ப்பட்ட நாட்களில் அவர் சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள உதிரி பாகங்களை தயாரிக்க முடியாமல் போனால் தேசிய வருவாயில் ரூ. 10,000 இழப்பு ஏற்பட்டதாக கணக்கில் கொள்ள வேண்டும். இவை யாவும் நேரடி இழப்பாகும்!

மாசுவினால் ஏற்படும் உடல்நலச் சீர்கேட்டினால் ஒரு சில மறைமுக இழப்புகளும் ஏற்படுகின்றன! உதாரணமாக, இந்த உதிரிபாகம் கிடைக்கப்பெறாத பட்சத்தில் மோட்டார் உரிமையாளர் ஒரு சரக்கை நேரத்திற்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால், அந்த சரக்கைச் சார்ந்த மற்ற தொழில் உற்பத்தியும் பாதிக்கப்படலாம்! இந்த மறைமுக இழப்பை எளிதில் அளவிடமுடியாது.

மூன்றாவதாக, நோய்வாய்ப்பட்டவரின் மருத்துவ செலவு. இதில், மருத்துவருக்கு, மருந்து மாத்திரைகளுக்கு, அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகளுக்கு மற்றும் மருத்துவமனைக்கான போக்குவரத்து செலவு அனைத்தும் அடங்கும்! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, நோய்வாய்ப்பட்டவர் தன்னுடைய தனிப்பட்ட பணத்திலிருந்து செலவு செய்ய நேரிடும். இதுவே அரசு மருத்துவமனையெனில், இந்த செலவு பொதுமக்கள் வரிப்பணத்திலிருந்து மேற்கொள்ளப்படும்.

நான்காவதாக, நோய்வாய்ப்பட்டவரின் உறவினர்களுக்கு ஏற்படும் வருவாய், பொருள் உற்பத்தி மற்றும் இதர செலவுகள் சார்ந்த இழப்புகள்! இதுவே நோய்வாய்ப்பட்டவர் இறக்கும்பட்சத்தில், தேசிய வருவாயில் ஏற்படும் மேற்கண்ட இழப்புகள் நிரந்தரமானதாகி விடுகின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பை ஒரு தோராயமாகக்கூட அளவிட்டு அதை தேசிய வருவாயில் பிரித்துக்காட்ட இதுவரை நமது அரசுகள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

சுற்றுசூழல் சம்பந்தமான இழப்புகள் மட்டுமின்றி, அவை சார்ந்த சில செலவுகளையும் தன்னகத்தே சேர்ப்பதால் உண்மையான ஜிடிபியின் மதிப்பு மிகைப்படுத்தப்படுகிறது! உதாரணமாக, ஒருவர் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகும்போது அதை சரிசெய்வதற்கான மருத்துவ சேவைகளையும், மாத்திரை மருந்துகளையும் சந்தையில் வாங்குவதால் ஜிடிபி மதிப்பு அதிகரிக்கிறது. அதிகமானபேர் நோய்வாய்ப்படின், ஜிடிபி அளவும் அதிகரிக்கும்! நோய் அதிகரிப்பதால் தேசிய நலன் அதிகரிக்குமா?

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கும்போது தேசிய வருவாய் அதிகரிப்பது ஒரு மாயையே. எனவே, சுற்றுச்சூழல் இழப்பையும், அது சார்ந்த செலவுகளையும் கணக்கிட்டு அவற்றை தற்போதைய தேசிய வருவாயிலிருந்து கழிக்கும்பட்சத்தில், உண்மையான, மிகைப்படுத்தப்படாத தேசிய வருவாயைக் கணக்கிடமுடியும்.

தீர்வு

உலக வங்கியின் ஆராய்ச்சிப்படி, 2013-ம் ஆண்டிற்கான இந்தியாவின் தேசிய வருவாயில் சுற்றுச்சூழல் சார்ந்த இழப்புகள் 5.7 சதவீதமாக, அதாவது சுமார் 3.75 லட்சம் கோடி ரூபாயாக, கணக்கிடப்பட்டது! இதை வேறுவிதமாக கூறவேண்டுமென்றால், சாதாரணமாக தேசிய வருவாய் 5.7 சதவீதமாக உயரும்போது சுற்றுச்சூழல் இழப்பைக் கழித்தால் அதன் உண்மையான மதிப்பு வெறும் பூஜ்யமே!

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது, சுற்றுச்சூழல் இழப்பை தடுப்பதன் மூலமாகவே தேசிய வருவாயை 5.7 சதவீதம் உயர்த்த முடியும் என்பதுதான். எனவே, தேசிய வருவாயை பசுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அளவில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில், மணல் அள்ளுவது, நீர், காற்று மற்றும் நிலம் மாசுபடுவது, காடுகள் அழிவது, பல்லுயிர் பெருக்கம் பாழ்படுவது மற்றும் இதனால் ஏற்படும் உற்பத்தி மற்றும் உடல் நலனில் ஏற்படும் இழப்பின் மதிப்பைக் கணக்கிட்டு மாநில மற்றும் தேசிய வருவாயில் தகுந்த மாற்றங்களை கொண்டுவருவதன்மூலம் அதை பசுமை வருவாயாக (green GDP) மாற்ற முடியும். அதுவே மாசற்ற, நிலைத்த வளர்ச்சிக்கான வழிகாட்டியாகும்!

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x