Published : 04 Dec 2017 11:14 AM
Last Updated : 04 Dec 2017 11:14 AM

அலசல்: ஏற்றுமதியில் பெருமிதம்! உள்நாட்டில்…

ந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950-களில் மருந்துகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று உலகிற்கே மருந்துகள் சப்ளை செய்யும் நாடாக உயர்ந்துவிட்டது. மருந்து ஏற்றுமதி வருமானம் 5,500 கோடி டாலர் அளவுக்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதியில் அதிக வருமானம் ஈட்டும் முக்கிய 10 துறைகளில் மருந்துத் துறையும் உள்ளது. மருத்துவத் துறையின் வேலை வாய்ப்பும் கடந்த சில வருடங்களாக அதிகரித்து 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மருந்துகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் தயாராகின்றன. அமெரிக்காவின் பெடரல் டிரக்ஸ் சங்கம் (எப்டிஏ) அங்கீகாரம் பெற்று வெளிநாடுகளில் இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் உள்ளதும் இந்தியாவில்தான். அமெரிக்காவில் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளில் 20 சதவீதம் இந்திய நிறுவனத் தயாரிப்புகள்தான்.

சர்வதேச அளவில் இந்திய மருத்துவத் துறை வளர்ந்திருந்தாலும் உள்நாட்டில் இன்னமும் மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்காத நிலைதான் உள்ளது.

தாராளமயமாக்கலினால் சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்படும் விலைக்கு உள்நாட்டிலும் மருந்துகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவம் என்பது பெரும்பாலானோருக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. தேசிய சாம்பிள் சர்வே நடத்திய ஆய்வில் நகர்ப்புறங்களில் 82 சதவீத மக்களும், கிராமப் பகுதியில் 86 சதவீதம் பேருக்கும் மருத்துவ வசதி கிடைக்காத சூழ்நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

மருந்துகளின் விலை காரணமாக 68 சதவீத நகர்ப்புற மக்களும், 72 சதவீத கிராப்புற மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மருந்துகளின் விலையேற்றம் மக்களை பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்தே, மருந்துகளின் விலைகளை அவ்வப்போது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கிறது. ஆனாலும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாற்று வழிகளை எடுத்து விலை உயர்ந்த மருந்துகளை மட்டுமே மக்கள் வாங்கும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது

இதனாலேயே வசதி உள்ளவர்களுக்கு மருத்துவ வசதியும், வசதியற்றவர்கள் நோயில் அவதியுறும் சூழலும் நிலவுகிறது.

ஜெனரிக் மருந்துகள் எனப்படும் மூலக்கூறு மருந்து உற்பத்தியில் இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது. ஆனால் இத்தகைய மூலக்கூறு மருந்துகள் இங்கு சில்லரை விற்பனைக்கு அனுப்பப்படுவதில்லை. ஆனால் பிராண்ட் பெயரில் அதிக விலையில் விற்கப்படுகின்றன. உதாரணத்துக்கு குரோசின் பிராண்ட் பெயர். இதன் மூலக்கூறு மருந்து பாரசிட்டமால். பொதுவாக மூலக்கூறு மாத்திரை 10 கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ. 2.25. ஆனால் அது பிராண்ட் பெயரில் ரூ. 27-க்கு விற்கப்படுகிறது. ஆனால் இதைத்தான் பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

பொதுவாக மூலக்கூறு மருந்துகளை நான்கு ஆண்டுகள் வரை விற்பனை செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்கு போதிய வரவேற்பு இல்லாவிட்டால், அதன் உற்பத்தியை நிறுத்திவிடலாம். இதன் காரணமாக டாக்டர்கள் பெரும்பாலும் பிராண்ட் மருந்துகளை பரிந்துரைப்பதால் கால ஓட்டத்தில் மூலக்கூறு மருந்துகள் தயாரிக்கப்படுவதில்லை.

மூலக்கூறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் 1,800 பேர் எப்படி இதைக் கண்காணிக்க முடியும்.?

கடலில் நீர் அதிகம் இருந்தாலும் அது குடிக்க உதவாது. அதைப்போலத்தான் மருந்து தயாரிப்பில் இந்தியா முன்னிலை வகித்தாலும், அது அனைவரையும் சென்றடையாத கடல் நீரைப் போலுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x