Last Updated : 08 Dec, 2017 10:57 AM

 

Published : 08 Dec 2017 10:57 AM
Last Updated : 08 Dec 2017 10:57 AM

நீர்க்குமிழி: இந்திய மேடைப் புலி

நாடக நடிகர்கள்தான் ஆரம்பகாலத் தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்தார்கள். சில நாடகக் கலைஞர்கள் பிடிவாதமாக சினிமாவை வெறுத்தனர். ஆனால், சினிமாவின் வளர்ச்சி, நாடகத்தை நலிவடையச் செய்தது. வைராக்கியத்துடன் இருந்தவர்களின் பிடிவாதம் பின்னர் தளர்ந்து, அவர்களும் திரை நோக்கிப் படையெடுத்தனர்.

இன்னும் சிலர் நாடகம், சினிமா இரண்டையுமே இரு கண்களாகக் கருதினர். அதனால் சினிமாவில் நடித்துக்கொண்டே நாடக மேடையிலும் அரிதாரம் பூசி வந்தனர். தாய் வீடான நாடகம், அதன் குழந்தையான திரைப்படம் இரண்டுமே சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வளர்க்கச் சிறந்த ஆயுதங்கள் என்பதைக் கண்டறிந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. தொடக்கத்தில் நாடகக் கலைஞராகவும் பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டலத் தலைவராகவும் இருந்த அவர், நாடகக் கலைஞர்கள், அங்கிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைச் சுதந்திர இயக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார். சமரசம் ஏதுமற்ற தூய தலைவராக இருந்த சத்தியமூத்தி ஏற்படுத்திய தாக்கம், பெரும்பாலான நடிகர்களை காங்கிரஸ் இயக்கத்தில் இணைய வைத்தது. அப்படிப்பட்ட சத்தியமூர்த்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட சிறந்த நாடக, திரைநடிகர் கே.பி.கேசவன்.

கொள்கைப் பிடிப்பு

அன்றைய மதராஸ் ராஜதானியிலிருந்த பாலக்காட்டின் ஒரு பகுதியான ஒலவக்கோட்டில் பிறந்து வளர்ந்தவர் கே.பி.கேசவன். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த இவரை, பெற்றோர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்தனர். 1912-முதல் புகழ்பெற்று விளங்கியது மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி. ‘சதாவதானி’ கிருஷ்ணசாமி பாவலர் அதன் முக்கிய நாடக ஆசிரியர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற பின் அதிலிருந்து பல தலைசிறந்த நடிகர்கள் உருவாகி வந்தார்கள். அதற்குக் காரணம் நாட்டில் தேசிய இயக்கம் எழுச்சி பெற்றுவிட்ட அக்காலக் கட்டத்தில், புராண நாடகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாவலர் எழுதிய தேசிய நாடகங்கள் பெரும்புகழ் பெற்றன.

பாவலரின் ‘பதி பக்தி’, ‘கதர் பக்தி’, ‘பம்பாய் மெயில்’, ‘நாகபுரி கொடிப் போர்’போன்ற தேசிய நாடகங்களில் கதாநாயகனாக நடித்து திருவிதாங்கூர் முதல், மதராஸ், மைசூர் ராஜதானிகள்வரை புகழ்பெற்று விளங்கி மகா நடிகர்தான் கே.பி.கேசவன். இந்த நாடகங்கள் திரைப்படமானபோது அவர்தான் கதாநாயகன். அந்நாளில் விதேசித் துணிகளை அணிவதே கேவலம் என்று எண்ணி அவற்றை பொது இடத்தில் எரித்து சுதந்திர உணர்ச்சியை மக்கள் வெளிப்படுத்திய நிலைமை நாட்டிலே உருவானது. அதற்குத் தலைவர்களின் போராட்டத்துடன் கே.பி.கேசவன் நடித்த ‘கதர் பக்தி’ நாடகம் ஊட்டிய தேசிய உணர்வும் ஒரு காரணமாக இருந்தது வரலாறு. கணீர் குரலும் திருத்தமான உச்சரிப்பும் கம்பீரமான உடல்மொழியும் கே.பி.கேசவனுக்கு ‘இந்திய மேடைப்புலி’ என்ற பட்டத்தைக் கொண்டுவந்து சேர்த்தன.

சிறு வயதுமுதலே புராண, இதிகாச நாடகங்களில் நடித்து வளர்த்திருந்தாலும், ராஜபார்ட் நடிகராக உயர்ந்தபோது, தீரர் சத்தியமூத்தியைத் தலைவராக ஏற்றபின் மூட நம்பிக்கையைப் பரப்பும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை என்பதை இறுதிவரை கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த முதல் ‘லட்சிய நடிகர்’ என்று இவரைக் கூறலாம். “கலைஞர்கள் அனைவரும் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து கதர் அணியுங்கள்” என்று சத்தியமூர்த்தி வேண்டுகோள் வைத்தபோது, தனது காரின் இருக்கைகளுக்குக் கூட கதரை உடுத்தி அழகு பார்த்தார் கேசவன்.

திறமை மற்றும் அழகின் மொத்த உருமாக இருந்த கேசவன், திரையுலகில் சில படங்களில் மட்டுமே நாயகனாக நடித்துள்ளார். ஆனால், அந்தச் சில படங்களே அவரை நாடறிந்த நடிகராக மாற்றியிருந்தன. எவ்வளவு விரைவாக அவர் புகழ்பெற்றாரோ அவ்வளவு வேகமாக மறக்கப்பட்டவர். “இவரது வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னைப் புகழின் போதைக்கு அடிமையாகாமல் காத்தது” என எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருடன் நட்பு

கிருஷ்ணசாமிப் பாவலரை ஆசிரியராக ஏற்று நடிகர்களாக பாய்ஸ் குழுவில் வளர்ந்தபோது, கே.பி.கேசவனுடன் அங்கே நெருங்கிப் பழகியவர்களில் எம்.ஜி.ஆரும் அவருடைய அண்ணன் சக்கரபாணியும் அடங்குவர். அனைவருடன் இனிமையாகப் பழகுவதுடன் நில்லாமல், தன் ரசிகர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கவுரப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கேசவன், அவரது நாடகம் சிறிய ஊரில் நடந்தாலும் நிச்சயமான வசூலைக் குவித்தது.

பின்னர், திரையுலகில் அடிவைத்தபோது அவரது படங்களும் வெற்றிபெற்றன. கே.பி.கேசவன் ‘ராஜ்மோகன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தபோது, தனக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படி கேசவனிடம் உதவிகேட்டார் எம்.ஜி.ஆர். “ ராம்சந்தர்… உன் அழகுக்கும் நிறத்துக்கும் இந்த சினிமாவையே ஆளப்போறவன் நீ. ஒரு சீன் வேடமெல்லாம் உனக்கு வேண்டாம்” என எம்.ஜி.ஆரை உற்சாகப்படுத்துவார் கேசவன். அவர் கொடுத்த உற்சாகம்தான் பெரிய வேடங்களுக்காக நம்பிக்கையுடன் தன்னைக் காத்திருக்க வைத்தது என்று எம்.ஜி.ஆர் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்.

‘இரு சகோதரர்கள்’

மாடர்ன் தியேட்டர்ஸில் நடிகராக இருந்தபோது எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த ‘இரு சகோதரர்கள்’ படம் மிகப் பெரிய வெற்றிபெற்றிருந்தது. அந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். திரும்புகிற திக்கெல்லாம் கேசவனுக்குப் பாராட்டு மழை. அந்தப் படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைக் காண, , சென்னை அண்ணா சாலையில் இருந்த நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் காண, தன் முக்கிய நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சென்றார் கேசவன். எம்.ஜி.ஆரைத் தனது வலப்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டார்.

08chrcj_erusakothararkal

படத்தின் இடைவேளையின்போது, தங்கள் அபிமான நடிகர் கேசவன் வந்திருப்பதை அறிந்துகொண்ட மக்கள், அவரைப் பார்ப்பதற்காகத் திரண்டனர். அவரது பெயரைக் கூறி கூச்சலிட்டனர். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், எம்.ஜி.ஆரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இதன் பிறகு நடந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர், ‘சமநீதி’ என்ற பத்திரிகையில் இப்படி விவரித்து எழுதியிருக்கிறார்.

தலை கீழாய் மாறிய புயல்

“கேசவனைக் கண்ட மக்களின் ஆரவாரத்தைக் கண்ட நான், “இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக்கிறோமே என்று பெருமை கொண்டேன். படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து சூழ்ந்துவிட்டனர். சூழ்ந்துகொண்டவர்களை விலக்கிவிட்டு கே.பி.கே.வை அந்த மக்கள் கூட்டத்திலிருந்து மீட்டு, காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பிவைத்தேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. இந்தச் சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்குப் பின், சென்னை நியூ குளோப் தியேட்டருக்கு கே.பி.கேசவனும் நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தோம் அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

இப்போது இடைவேளையின்போது மக்கள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டத்திடமிருந்து என்னை மீட்டு, காரில் திணித்துப் பத்திரமாக அனுப்பிவைத்தார். காரின் பின் கண்ணாடி வழியே கேசவனைப் பார்த்தபோது மக்களில் ஒருவராக, சாமானியராக கூட்டத்தில் கரைந்துபோனார்.

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்குப் பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றைத் தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும் தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!” என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x