Last Updated : 08 Dec, 2017 11:07 AM

 

Published : 08 Dec 2017 11:07 AM
Last Updated : 08 Dec 2017 11:07 AM

வேட்டையாடு விளையாடு 12: மிருணாள் சென் இயக்கிய தெலுங்குப் படம்!

1. மிருணாள் சென் இயக்கிய தெலுங்குப் படம்!

1970, 80-களில் இந்தியா முழுக்க மாற்று சினிமா அலை இருந்தபோதும் தெலுங்கு சினிமாவில் மட்டும் அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தெலுங்கு சினிமாவில் எடுக்கப்பட்ட மிகச் சில மாற்று முயற்சிகளில் ஒன்று ‘ஒக்க ஊரி கதா’. பிரபல இந்தி எழுத்தாளர் முன்ஷி ப்ரேம் சந்தின் ‘கஃபான்’-ன் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு மிருணாள் சென் தெலுங்கில் எடுத்த திரைப்படம் இது.

வறுமை, ஏழைகளை மேலும் ஏழைகளாக்கும் மது போதை ஆகிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சினிமாவை, மிருணாள் சென் தெலங்கானா பகுதியில் படம்பிடித்தார். குடிகாரத் தந்தை, மகனாக வாசு தேவ ராவ், நாராயண ராவ் ஆகியோர் நடித்தனர். பிரசவத்தில் மருத்துவ வசதியில்லாமல் இறந்துபோகும் மருமகள் கதாபாத்திரத்தில் நடனக் கலைஞர்கள் உதய் ஷங்கர், அமலா ஷங்கரின் மகள் மமதா ஷங்கர் நடித்தார். இந்துஸ்தானி புல்லாங்குழல் கலைஞர் பண்டிட் விஜய ராகவ ராவ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கு மொழிக்கான தேசிய விருதை வென்ற ஆண்டு எது?

 

2. ஹாலிவுட்டில் தடம் பதித்த சசி கபூர்!

ங்கிலப் படங்களில் நடித்ததன் மூலம் சர்வதேசக் கவனம் பெற்ற ஓம்பூரி, நஸ்ருதீன் ஷா, அமிதாப் பச்சன், இர்ஃபான் கான் போன்றவர்களுக்கு முன்னோடி சமீபத்தில் காலமான சசி கபூர். ஹெர்மன் ஹெஸ்யேயின் புகழ்பெற்ற சித்தார்த்தா நாவலின் திரைவடிவத்தில், அந்தணக் குடும்பத்தில் பிறந்து சமணனாக மாறி, வாழ்வின் அர்த்தத்தைத் தேடும் இளம் சித்தார்த்தனாக நடித்தவர் சசி கபூர்.

08CHRCJ_SASI_ ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் சசி கபூர்

கோன்ராட் ரூக்ஸ் இயக்கத்தில் ‘சித்தார்த்தா’ என்ற பெயரிலேயே இந்த அமெரிக்கப்படம் 1972-ல் வெளியானது. முழுக்க முழுக்க வட இந்தியாவிலும், பெரும்பகுதி பரத்பூர் மகாராஜாவின் அரண்மனைகளிலும் உருவாக்கப்பட்டது. ஸ்வென் நைக்விஸ்டின் கவித்துவமான ஒளிப்பதிவு இப்படத்துக்காக இன்றும் கொண்டாடப்படுகிறது.

வியட்நாம் போருக்குப் பின்னர் நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்திருந்த அமெரிக்க இளைஞர்களிடையே சித்தார்த்தன் என்ற இளைஞனின் ஞானத்துக்கான யாத்திரை பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. சித்தார்த்தனுக்கும் தாசி கமலாவுக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகளை கஜூரோஹா சிற்பங்களின் தாக்கத்தில் கோன்ராட் ரூக்ஸ் எடுத்திருந்தார். இந்தியாவில் அக்காலகட்டத்தில் அந்த சர்ச்சைக்குள்ளான காட்சிகளில் நடித்த இந்திய நடிகை யார்?

 

3. பாக்யராஜ் செய்த மறுஆக்கம்

பாலிவுட்டின் அறிவியல் புனைவுப் படமான ‘மிஸ்டர் இந்தியா’, இன்றும் சிறந்த பொழுதுபோக்கு சினிமாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1987-ல் வெளியான படங்களில் தேசிய அளவில் அதிகபட்ச வசூலைக் குவித்த படம் இது. இரும்புக்கை மாயாவியைப் போல் கையில் கட்டியிருக்கும் தங்கக் கடிகாரத்தைத் தடவினால் உருவம் மறைந்து பல சாகசங்களில் ஈடுபடும் நாயகனாக அனில் கபூர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவிக்குப் பெரும் புகழ் கிடைத்தது. ‘பாண்டிட் குயின்’ மூலம் சர்வதேச கவனத்தைப் பின்னால் பெற்ற சேகர் கபூர் இயக்கிய ‘மிஸ்டர் இந்தியா’, இந்திய சினிமா நூற்றாண்டின்போது சிறந்த நூறு இந்தியத் திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது. நாயகனாக அனில் கபூர் ஏற்ற மிஸ்டர் இந்தியா கதாபாத்திரம் அமிதாப் பச்சனால் மறுக்கப்பட்டது.

08CHRCJ_mr.india ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் அனில் கபூர், ஸ்ரீதேவி right

பாலிவுட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர் கூட்டணியான சலீம்-ஜாவேத் இணைந்து எழுதிய கடைசி திரைப்படம் இது. லக்ஷ்மி காந்த் பியாரேலால் இசையமைத்த பாடல்கள் மூலம் இந்தியாவையே அதிரவைத்த இப்படம் தமிழில் இயக்குநர் கே. பாக்யராஜால் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அந்தப் படம் எது?

4. இந்தியாவை அதிரவைத்த நடிகர்!

துரை முருகன் டாக்கீஸ் தயாரித்து அந்நாளைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து 1941-ல் வெளியான திரைப்படம் ‘அசோக் குமார்’. மாமன்னர் அசோகர் தொடர்புடைய பவுத்தக் கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. கர்னாடக இசை மேடைகளிலும் சினிமாவிலும் பிரபலமாக இருந்ததால் தியாகராஜ பாகவதர் செய்த தாமதத்தையும் மீறி படம் வெற்றிபெற்றது.

ராஜா சந்திரசேகர் இயக்கிய இந்தப் படத்தில் இளவரசன் குணாளனாக பாகவதரும், அவருடைய தாய், தந்தையாக கண்ணாம்பா மற்றும் நாகையாவும் நடித்தனர். தமிழில் கண்ணாம்பாவுக்கு இரண்டாவது படம் என்பதால் தெலுங்கில் எழுதி வைத்து வசனங்களைப் பேசினார் கண்ணாம்பா. இப்படத்தில் எம்ஜிஆர் சிறிய வேடத்தில் எம். ஜி. ராமச்சந்தர் என்ற பெயரில் நடித்தார். இப்படத்தில் புத்தராகச் சிறிய வேடத்தில் நடித்து பின்னர், சந்திரலேகா வழியாக இந்தியாவையே அதிரவைத்த நடிகர் யார்?

5. சினிமா பற்றிய ஆவணப்படம்

சினிமாவின் நூற்றாண்டை முன்னிட்டு மோஹ்சன் மக்மல்பஃப் 1995-ல் ஒரு டாகு டிராமா எடுத்தார் . ஒரு புதிய படத்துக்காக நடிகர், நடிகையர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து, முகவரி தரப்பட்ட இடத்துக்கு ஆயிரக்கணக்கான பேர் வருகின்றனர். கிட்டத்தட்ட அங்கே ஏற்படும் கலவரச் சூழ்நிலையை அமைதிப்படுத்தி, நடிகர், நடிகையரை நேர்காணல் செய்வதுதான் இப்படம். உண்மைக்கும் புனைவுக்கும் இடையிலான எல்லைகள் மயங்குவதை அற்புதமாக வெளிப்படுத்தும் ஆவணப் படைப்பு இது. சினிமா இயக்குநருக்குள்ள சக்தி, அதிகாரத்தை வெளிப்படுத்தும் இப்படம், சினிமாவில் நடிக்க, சிரிக்கவும் அழவும் காத்திருக்கும் எத்தனையோ பேரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த பதிவாக இருந்த இப்படத்தின் பெயர் என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x