திண்ணைப் பேச்சு 14: ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான் பூச்சிகளும்!

திண்ணைப் பேச்சு 14: ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான் பூச்சிகளும்!
Updated on
2 min read

நாளெல்லாம் பாடுபட்டு குழந்தை சேர்த்த திரவியம், ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான்பூச்சிகளும். குழந்தைக்குப் பெருமை பிடிபடவில்லை. அதற்குச் சொந்தமாக ஒரு காலி தீப்பெட்டியும் இரண்டு தட்டான்பூச்சிகளும் கிடைத்துவிட்டன. இதைவிட வேறு என்ன திரவியம் வேண்டும்?

தஞ்சை மாவட்டத்தில் ராஜகிரி, பண்டார வாடை, அய்யம்பேட்டை, அதிராம் பட்டினம் போன்ற ஊர்களிலிருந்து பர்மா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடு களுக்குத் திரவியம் தேடிச் சென்றவர்களின் அழகிய வீடுகளைக் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை பூட்டியே கிடக்கும்.

தெருக்களில் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கலைத்தபடி அக்காக்குருவிகள் கூவும். அவற்றின் கணவன்மார்களும் வாலிபப் பிள்ளைகளும் மாமன்களும் மச்சான்களும் தூரதேசம் போய்விட்டதுபோல் தோன்றும். கண்ணை விற்று சித்திரம் வாங்கிய தலைமுறை அது.

பால்யத்தின் பணக்காரர்கள்: பால்யத்தில் பளிங்கு (கோலிக்குண்டு) விளையாடும் சிறுவர்களிடம் யார் நிறைய பளிங்கு வைத்திருக்கிறார்களோ அவர்களே பெரிய பணக்காரர்கள். கால்சராயின் இரண்டு பக்கப் பைகளிலும் பளிங்குகள் குலுங்க கர்வத் தோடு அவர்கள் நடந்துவருவதைப் பார்க்க வேண்டுமே.

ஆஹா! வண்ணமயமான பளிங்குகள். அவற்றில் வெள்ளை உருண்டைக் கல் பளிங்கு எளிதில் கிடைக்காது. அதை வாங்க பத்துத் தீப்பெட்டிப் படங்களாவது செலவழிக்க வேண்டும். இதற்காகவே தீப்பெட்டிப் படங்கள் சேகரிக்கப்பட்டன. அதிகமான தீப்பெட்டிப் படங்களை கரன்சி நோட்டுக் கற்றைபோல் அடுக்கிவைத்துக் கொண்டு ‘சீன்’ போடும் சிறுவர்களுக்குத் தனிமரியாதை கிடைக்கும்.

சிகரெட் பெட்டிகளின் அட்டைகளும் கரன்சி நோட்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொப்பித்தலை போட்ட பாஸிங்ஷோ சிகரெட் அட்டைகளுக்கு கிராக்கி அதிகம். இவற்றைச் சகமாணவர்களிடம் கொடுத்து இலந்தை வடை, பொட்டுக்கடலை உருண்டை, பெப்பர்மின்ட் முட்டாயி, கமர்கட் எனப் பண்டமாற்றம் நடக்கும். ஓட்டை அரையணா நாணயங்களை அரைஞாண் கொடியில் கோத்து சிறுவர்கள் ஒட்டியாணம் அணிந்தார்கள்.

கிலுகிலுப்பையும் ஹோண்டா காரும்: குழந்தையாக இருந்த போது காலணாவுக்கு வாங்கிய கிலுகிலுப்பை தந்த மகிழ்ச்சியை, போன மாதம் வாங்கிய ஹோண்டா காரால் தர முடியவில்லை என்று குறைபட்டுக்கொண்டார் நண்பர்.

“ஏன் அப்படி?” என்று கேட்டேன்.

“நான் காருக்குக் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. ஞாபகம் வந்து தொலைக்கிறதே. ஒரே கவலையா இருக்கு. கார் கவலையத்தான் கொடுக்குது” என்றார்.

பாட்டி பரம ஏழை. குடிசைதான் அவர் வீடு. பள்ளி விடுமுறை நாள்களில் அங்குதான் போவோம். எனக்குப் பாட்டி வீடுதான் பணக்கார வீடாகத் தோன்றும். குடிசையின் கூரை இடுக்குகள் வழியே சூரிய வெளிச்சம் வட்டம் வட்டமாக வீட்டுக்குள் விழும். வீடு முழுவதும் வெள்ளிக்காசுகளை இறைத்ததுபோல் தோன்றும்.

சிறுவர் பட்டாளத்தில் சிலருக்குத் திடீர் செல்வாக்கு ஏற்பட்டுவிடும். ஒரு பையன் பையிலிருந்து எடுத்துக் காண்பித்த தபால் தலை ஆல்பத்தைப் பார்த்துத் திகைத்து விட்டோம். அன்று முதல் தபால்தலை சேகரிப்புப் பித்துப் பிடித்துக்கொண்டது. அழகழகான வெளிநாட்டு அஞ்சல் தலைகளைப் பரிமாறிக்கொண்டு, அவர வருக்கான ஆல்பத்தில் ஒட்டிவைப்போம்.

அயல்நாட்டு அஞ்சல்தலைகளின் அழகிய சித்திரங்களில் மனதைப் பறிகொடுப்போம். சோடாபாட்டில் மூடி காசுகளைக் கொடுத்து பொன்வண்டுகளை வாங்குவோம்.

குதிரை: நான் ஏழாம் வகுப்புப் படித்தபோது என்னிடம் ஒரு குதிரை இருந்தது. அந்த வயதிலேயே பொன்னியின் செல்வனை முழுவதுமாகப் படித்து முடித்துவிட்டேன். வந்தியத்தேவன் மாதிரி என்னிடமும் ஒரு குதிரை இருந்தால் வசதியாக இருக்கும் என்று தோன்றியது.

அதை வாங்கிவா, இதை வாங்கிவா என்று அம்மா என்னை அடிக்கடி கடைக்கு ஏவுவார். வாசலில் குதிரை கனைக்கும். அவ்வளவுதான். குதிரையில் ஏறி சிட்டாகப் பறந்துபோய் வாங்கி வந்துவிடுவேன். பள்ளிக்கூடத்துக்கும் குதிரையில்தான் போவேன். எல்லாருக்கும் முன்னால் அந்தக் கற்பனைக் குதிரையில் வீட்டுக்கு வந்துவிடுவேன்.

குழந்தை வைத்தியர்: தஞ்சாவூரில் பல ஆண்டுகளுக்கு முன்னால் கோபால்சாமி என்கிற குழந்தை வைத்தியர் இருந்தார். அவரே ஒரு குழந்தை மாதிரிதான் இருப்பார். வெள்ளை மஸ்லின் ஜிப்பா அணிந்த பெரிய குழந்தை, மற்ற குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கிற மாதிரி இருக்கும். அவர் பேசுவது குழந்தை பேசுவது போல இருக் கும். குழந்தைகளைத் தினம்தோறும் பார்த்துக்கொண்டிருந்தால் போதும், குழந்தையாகி விடலாம்.

சிரித்த முகங்கள்: காந்தியின் சிரிப்பு ஒரு குழந்தையின் சிரிப்பு போலவே இருக்கும். அதேபோல ரசிகமணி டிகேசியின் சிரிப்பிலும் குழந்தையின் சாயல் தென்படும். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவும் குழந்தை முகத்தோடு இருப்பார். எழுத்தாளரிடம் குழந்தைமனம் இருப்பது எழுத்திலும் வெளிப்பட்டுவிடும்.

கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’ கதையை வாசித்திருக்கிறீர்களா? குழந்தை மனம் கொண்டவரால்தான் அப்படி ஒரு கதை எழுத முடியும். நம்பிக்கை வறண்ட எழுத்து என்று வர்ணிக்கப்பட்ட புதுமைப்பித்தனின் எழுத்திலும் சிலநேரம் ஒரு குழந்தை எட்டிப் பார்க்கும்.

‘கடவுளும் கந்தசாமிபிள்ளையும்’ என்கிற அவரது கதையில் குழந்தை கடவுளிடமே, ‘வட்டாட வருதியா?’ என்று கேட்கும். ‘மகாமசானம்’ கதையில் மரணத்தைக் கண்டு பயப்படும் தந்தையிடம் மாம்பழத்தை மூக்கில் தேய்த்துக்கொண்டு வாசனையா இருக்கில்ல என்று கேட்கும். அதோடு கதை முடியும்.

தி.ஜானகிராமனின் ‘சிலிர்ப்பு’ சிறுகதை யில் பெரியவர்களுக்கு இல்லாத தாராள மனசு ஒரு பிஞ்சுக் குழந்தைக்கு இருப்பதாகக் காட்டியிருப்பார். அப்பாவிடம் அடம்பிடித்து தான் ஆசையாக வாங்கிய ஆரஞ்சுப் பழத்தை ரயிலில் எதிரில் தன்னுடன் பயணிக்கும் ஏழைச் சிறுமிக்குக் கொடுத்துவிடுவான். தெய்வம்தான் குழந்தை வடிவில் வந்துவிட்டதோ என்று நம்மைச் சிலிர்க்கவைக்கும் கதை அது.

கிளிஞ்சல்கள் போதுமே! - கவிஞர் நா.விச்வநாதன் குழந்தைகள் பற்றி இப்படி ஒரு கவிதை எழுதியிருந்தார்.

சமுத்திரக் கரையில்

ஒதுங்கும் கிளிஞ்சல்கள்

குழந்தைக்கு வைரங்கள்

காட்சிதானே நிஜவைரம்-

காண்பவன் குழந்தையானால்

கிளிஞ்சல்கள் போதுமே!

ஆம், குழந்தை மனம் வாய்த்துவிட்டால் காலி தீப்பெட்டி திரவியமாகிவிடும்! கிளிஞ்சல்கள் வைரமாகிவிடும்!

(பேச்சு தொடரும்)

- thanjavurkavirayar@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in