Last Updated : 14 Apr, 2014 01:26 PM

 

Published : 14 Apr 2014 01:26 PM
Last Updated : 14 Apr 2014 01:26 PM

பாதைகளும் பயணங்களும்: உங்கள் பாதை எது?

நான் டாக்டராகப் போறேன் என்றான் வருண், நான் வக்கீலாகப்போறேன் என்றாள் அவன் அக்கா கிருத்திகா. நான் நடிக்கப்போகிறேன் என்றான் பக்கத்து வீட்டுப் பையன் ராஜா. பாஸ்கருக்குப் போலீஸாகணும்னு ஆசை. அவன் தங்கைக்கோ பெரிய ஆர்டிஸ்டா வர வேண்டும் என்று கனவு…

இவர்கள் வயது ஐந்து முதல் ஏழுவரை. “பெரியவனானதும் நீ என்னவா ஆகப் போற?” என்று வருணின் மாமா கேட்டதற்குப் பொடிசுகள் சொன்ன பதில்கள் இவை. எல்லாம் பளிச் பளிச்சென்று வந்த பதில்கள்.

பத்து வயதில் இதே கேள்வியைக் கேட்டால் இதே பதில்கள் வருமா? சொல்ல முடியாது. சிலர் தங்கள் பெற்றோரின் தொழிலைச் சொல்லக்கூடும். சிலர் வக்கீலிலிருந்து ஆசிரியர் அல்லது போலீஸிலிருந்து பைலட் என்று கட்சி மாறியிருக்கக்கூடும். பெரியவர்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

இதே கேள்வியைப் பதினைந்து அல்லது பதினாறு வயதில் எதிர்கொண்டால்?

இதே கேள்வியைப் பதினைந்து அல்லது பதினாறு வயதில் எதிர்கொண்டால்?

பதில் சொல்வது சுலபமல்ல. அதை அலட்சியப்படுத்துவதும் நல்லதல்ல.

ஏனென்றால் இந்த வயதில் ஒவ்வொருவரும் தனக்கான பாதை என்று ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருக்கும். பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடத்தை எடுக்கப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

அறிவியலா? வணிகமா? கணிப்பொறியா? தொழில்நுட்பக் கல்வியா? வரலாறு போன்ற பாடங்களா?

பத்தாவது முடித்த பிறகு ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் பாடமே அவரது எதிர்காலத் துறையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

இருபது வயதில் இந்தக் கேள்வி எழுந்தால்?

கொஞ்சம் சிக்கல்தான். இருபது வயதிற்குள் இந்தக் கேள்விக்கான விடையை ஒருவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். அதற்கு ஏற்றபடி தனது கல்லூரிப் படிப்பை அமைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

15 வயதில் சரியாக முடிவு செய்யாமல் பிறகு வருத்தப்பட்டவர்கள் பலர் உண்டு. தனக்கு ஏற்ற துறை எது, அதற்கு ஏற்ற படிப்பு எது என்ற தெளிவு பத்தாம் வகுப்பு முடியும்போதே இருக்க வேண்டும்.

அந்தத் தெளிவைப் பெற என்ன வழி?

அன்புச்செல்வனுக்கு 47 வயது. 23 வயதில் வேலைக்குப் போக ஆரம்பித்தார். இன்று நல்ல வேலை. கை நிறைய சம்பளம், வசதியான வாழ்க்கை…

எல்லாம் இருந்தும் அவர் மனத்தில் ஏதோ ஒரு வெறுமை. ஏதோ ஒரு அதிருப்தி. ஒரு ஏக்கம்.

நெடுநாள் யோசித்தார். நண்பர்களிடம் கலந்தாலோசித்தார். மனைவியிடம் விவாதித்தார். நீங்கள் ஒரு சைக்யாட்ரிஸ்டைப் பாருங்கள் என்றார் மனைவி. அன்புச்செல்வன் மனநல ஆலோசகரிடம் சென்றார். விரிவாகப் பேசினார்.

கடைசியாக அவருக்குப் புரிந்தது. தனது வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. வேலையை நன்றாகத்தான் செய்கிறார். பதவி உயர்வெல்லாம் வருகிறது. ஆனால் உள்ளூர அந்த வேலை அவருக்கு மகிழ்ச்சி தரவில்லை. அலுவலகம் என்றாலே அவரது ஆழ்மனதில் ஒரு கசப்பு இருக்கிறது. அதுதான் மன வெறுமையை ஏற்படுத்துகிறது.

அன்புச்செல்வன் மனநல ஆலோசகரை மீண்டும் சந்தித்தார். மேலும் விரிவாகப் பேசினார். தன் மனத்தில் இருந்ததைக் கொட்டினார். “பல ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு பாதையைத் தேர்வு செய்தேன். இன்று அந்தப் பாதையில் வெகுதூரம் வந்துவிட்டேன். இன்று நான் வெற்றி பெற்ற ஒரு மனிதன். ஆனால், அந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. திருப்தியைத் தரவில்லை. திரும்பிப் பார்க்கும்போது தவறான பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டேனோ என்று தோன்றுகிறது” என்றார்.

உங்கள் முன் பல பாதைகள் உள்ளன. அதில் பல பாதைகள் உங்களை வெற்றியின் கோட்டைக்கு அழைத்துச் செல்லும். உங்களுக்கான பாதை எது? எந்தப் பாதையில் உங்களால் திருப்தியாகப் பயணம் செய்ய முடியும்?

மாலதி எடுத்த முடிவு

மாலதி பிளஸ் 2 முடித்திருக்கிறாள். அவள் வகுப்பில் பலர் டாக்டருக்குப் படிக்கப்போகிறார்கள். அவளும் டாக்டருக்குத்தான் படிக்கப்போகிறாள். நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சியும் பெற்றுவிட்டாள்.

திடீரென்று அவளுக்குள் ஒரு கேள்வி. நான் எடுத்த முடிவு சரிதானா?

இந்தச் சமயத்தில் இது என்ன கேள்வி என்று மாலதி ஒதுக்கித் தள்ளவில்லை. கேள்வி பிறப்பது பதிலைக் காணத்தானே? கல்வித் துறை ஆலோசகர் ஒருவரைச் சந்தித்தாள்.

ஆலோசகர் பல கேள்விகள் கேட்டார். விரிவாகப் பேசினார். ஆலோசனையின் முடிவில் மாலதிக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

டாக்டர் தொழில் தனக்கு ஒத்துவராது என்பதுதான் அது.

பிறகு ஆழமாக யோசித்து ஒரு முடிவு எடுத்தாள். தன் இயல்புக்கும் திறமைக்கும் பொருத்தமான வேறொரு தொழிலைத் தேர்ந்தெடுத்தாள். அதற்கேற்றபடி படித்து முன்னேறினாள்.

மாலதி பின்னாளில் ஒரு ஆசிரியரானார். தன் வேலையை ரசித்துச் செய்தார். மாணவர்களுக்கும் அவரைப் பிடிக்கும்.

ஒரு வேளை மாலதி டாக்டராகியிருந்தால்? 15 ஆண்டுகள் கழித்து என்ன நினைத்திருப்பார்? தவறான பாதையில் பயணம் செய்துவிட்டேன் என்று நினைத்திருப்பாரா?

எப்படிச் சரியான முடிவை எப்படி எடுப்பது?

உங்களுக்கு ஏற்ற பாதை எது எது?

வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறை, தனக்குப் பிடித்த துறை, தனக்குத் திறமை உள்ள துறை…

இப்படிப் பல துறைகள். பல சாத்தியங்கள். பல பாதைகள்.

எது நமக்கான பதை?

சிந்திப்போம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x