Published : 18 Dec 2017 10:00 AM
Last Updated : 18 Dec 2017 10:00 AM

அமெரிக்காவில் தடம் பதிக்கிறது சாங்யோங்

மெரிக்க சந்தையில் சிறந்த வரவேற்பைப் பெற்றுவிட்டாலே, சர்வதேச அளவில் தங்களது தயாரிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் என்று அனைத்துத் துறையினரும் கருதுகின்றனர். அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையினர் அமெரிக்காவை நோக்கி படையெடுப்பதே இதற்குத்தான்.

இப்போது அந்த வரிசையில் சேரப் போகிறது சாங்யோங். கொரியாவை சேர்ந்த இந்நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாங்கியது. இந்நிறுவனம் தற்போது எஸ்யுவி-க்களை அமெரிக்காவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவில் வெற்றிகரமான மாடலாகிவிட்டால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்த மாதிரி, அனைத்து நாடுகளிலும் அதற்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்று நிறுவனத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாங்யோங் மோட்டார் கார்ப்பரேஷனின் இயக்குநர் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அமெரிக்காவில் வாகனங்களை அறிமுகம் செய்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும்.

இதுவரையில் அமெரிக்காவில் சாங்யோங் நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்காவில் சந்தைப்படுத்தியதில்லை. இப்போது முதல் முறையாக எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம்தான் டெட்ராய்ட் நகரில் ஒரு ஆலையை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா திறந்தது. இந்த ஆலையில் ரோக்ஸர் எனப்படும் நெடுஞ்சாலை வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒருவேளை எஸ்யுவி-களை அறிமுகப்படுத்த திட்டமிட்டால் அது டெட்ராய்டில் உள்ள ஆலையின் ஒரு பகுதியை அசெம்பிளி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளும் என தெரிகிறது.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சாங்யோங் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிறுவன ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து வருவதை அடுத்து புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்காவில் தடம் பதிக்க முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x