Last Updated : 01 Dec, 2017 11:40 AM

 

Published : 01 Dec 2017 11:40 AM
Last Updated : 01 Dec 2017 11:40 AM

விடைபெறும் 2017: இளைஞர்களின் ஃபேஷன் அலப்பறைகள்!

வ்வோர் ஆண்டுமே ஃபேஷன் என்னும் பெயரில் இளைஞர்கள், யுவதிகள் புதிய டிரெண்ட்டை ஏற்படுத்துவது வாடிக்கை. இந்த 2017-ம் ஆண்டிலும் அப்படியான விநோத ஃபேஷன்களை இளைஞர்கள் ஆராதித்து ஆரத் தழுவியிருக்கிறார்கள். அவற்றில் சில ஃபேஷன்களைப் பார்ப்போம்:

மெக்கின்ஸ்

இளம் பெண்கள் மட்டும் லெக்கின்ஸ் அணியலாம்; ஆண்கள் அணியக் கூடாதா என்று யாரோ ஒரு புண்ணியவான் யோசித்ததன் விளைவுதான் ‘மெக்கின்ஸ்’. உடலில் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு மிகவும் டைட்டாக அணிந்துகொள்ளும் உடை இது. பாரிஸ், டோக்கியோ போன்ற நகரங்களில் இந்த உடைக்குக் கிடைத்த வரவேற்பு, இன்று உலகெங்கும் இளைஞர்களின் விருப்ப உடையாக இதை மாற்றியிருக்கிறது.

சாகிங் பேன்ட்

நம்ம ஊரிலேயே இந்த வகையான பேன்ட்டைப் பார்த்திருப்பீர்கள். இடுப்பில் நிற்காமல் நழுவி, உள்ளாடை தெரியும்படி பேன்ட்டை அணிந்துசெல்பவர்களைப் பார்க்கிறபோது, பெல்ட் போட்டால் குறைந்தாவிடும் என்னும் ரீதியில் முறைத்திருப்பீர்கள். உண்மையில் இது ஒரு வகையான ஃபேஷன். இந்த வகையான பேன்ட்டுக்குப் பெயர் சாகிங் பேன்ட். பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தாலும், இந்த ஆண்டு இந்த பேன்டுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறதாம். இந்த பேன்ட்டை அணியும்போது உள்ளாடைக்குப் பதில் ட்ரவுசர் அணிய வேண்டும் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் இளைஞர்கள்.

பிளாஸ்டிக் ஜீன்ஸ்

ஜீன்ஸ் பேன்ட்களைப் பிடிக்காத இளசுகள் நிச்சயம் யாருமே இருக்க மாட்டார்கள். முரட்டுத் துணியால் தயாரிக்கப்படும் ஜீன்ஸ் பேன்ட்களுக்குப் பதில் பிளாஸ்டிக்கில் ஜீன்ஸ் தயாரித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘கிளியர் பிளாஸ்டிக் ஜீன்ஸ்’ பேன்ட். வெளியே தெரியும்படியான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இந்த பேன்ட் தயாரிக்கப்படுகிறது. பார்வையாளர்களை ஈர்க்க முயலும் இளையோர் மத்தியில் இந்த ஜீன்ஸுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, இளம் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். ஆனால், இந்த வகை ஜீன்ஸுக்குச் சில நாடுகளில் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

மட்டட் பேன்ட்

‘கறை நல்லது’ என்ற விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில் சேறு படிந்திருக்கும் பேன்ட்தான் மட்டட் பேன்ட் (சேறு பேன்ட்). சுரங்கம், குவாரி, கட்டுமானப் பணிகள் போன்ற கடினமான பகுதிகளில் பணியாற்றுவோரின் உடை அழுக்காகவே காட்சியளிக்கும். அதையே ஃபேஷனாக்கி இந்த உடையைத் தயாரித்திருக்கிறார்கள். வழக்கமான ஜீன்ஸ் பேன்ட் அணிந்து போரடித்தவர்களுக்கு ஏற்ற உடை இது என்கிறார்கள் இளைஞர்கள். அழுக்கு ஜீன்ஸும் இந்த ஆண்டு ஃபேஷன்களில் ஒன்றாகிவிட்டது.

காது வளையம்

காதில் தோடு அணிவது, வளையம் போட்டுக்கொள்வது எல்லாம் புதிய ஃபேஷனா என்று நினைத்துவிடாதீர்கள். ஆப்பிரிக்கப் பழங்குடிகள் அணிந்த காது வளையம்தான் இப்போது வெளிநாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலம். இது வழக்கமான காது வளையம் அல்ல. இந்த வளையத்தை அணிந்துகொள்ள காதில் துளையிட்டு, வளையத்தின் அளவுக்கு ஏற்ப குடைய வேண்டும். கொஞ்சம் ரிஸ்க்கான கொஞ்சம் காஸ்ட்லியான இந்த ஃபேஷனுக்கு மேற்கத்திய நாடுகளின் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்போது ஆசிய நாட்டு இளைஞர்கள் மத்தியிலும் இந்தக் காது வளையத்துக்கு மவுசு கூடியிருக்கிறது. எங்க ஊரு பாட்டிகள் போட்ட பாம்படத்தையே ஃபேஷனா மாத்திட்டீங்களேப்பா!

Cowboy bootsகவ்பாய் பூட்ஸ்

‘கவ்பாய்’ ஸ்டைல் பூட்ஸ்களுக்கு இந்த ஆண்டு இளையோர் மத்தியில் ஆதரவு கூடியிருக்கிறது. ‘இந்திய மகாராஜா ஸ்டைல் பூட்’ என்றழைக்கப்படும் இந்த பூட்ஸ்களுக்கு மெக்சிகோ இளையோர் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்திருக்கிறதாம். பார்ப்பதற்குக் கம்பீரத் தோற்றத்தைத் தருவதால் இந்த வகையாக பூட்ஸ்களை விரும்பி அணிகிறார்களாம். குறிப்பாக, இளம் பெண்கள் விரும்பும் பூட்ஸ்களில் இதற்குதான் முதலிடம்.

வுட்டன் சன் கிளாஸ்

இந்த ஆண்டு இளைஞர்கள் மிக அதிகம் விரும்பி வாங்கிய பொருட்களில் வுட்டன் சன் கிளாஸ் எனப்படும் மர மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். வழக்கமாகத் தயாரிக்கப்படும் மூக்குக் கண்ணாடி அல்ல இது. கண்ணாடியின் பிரேம்கள் முழுக்க முழுக்க மரத்தாலானவை. தங்கம் முதல் பிளாட்டினம்வரை கண்ணாடி பிரேம்களில் பலவகையான வெரைட்டிகள் இருந்தாலும், இந்தக் கண்ணாடிக்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்போது மர வகைகளுக்கு ஏற்ப சந்தைகளில் வுட்டன் சன் கிளாஸ்கள் வரத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x