Published : 25 Dec 2017 03:47 PM
Last Updated : 25 Dec 2017 03:47 PM

மகிழ்ச்சி தரும் மருந்து விலை கட்டுப்பாடு

டந்த சில மாதங்களாக இந்திய மருத்துவ துறையின் மீது நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் விதமாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே பல்வேறு மருந்துகளுக் கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து முறைப்படுத்தியது. இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி, செயற்கை மூட்டு கருவி போன்றவற்றின் விலையிலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவ பயன்பாட்டுப் பொருட்களுக்கும் விலையை நிர்ணயம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மருத்துவ சேவைகளில் அன்றாடம் பயன்படுத்தும் ஊசிகள், சிரிஞ்ச், கையுறைக ளுக்கான விலையை ஆய்வு செய்து இவற்றை தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விலையை முறைப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் இந்திய சிரிஞ்ச் மற்றும் ஊசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, அவற்றின் உற்பத்தி அல்லது இறக்குமதி விலைக்கும் அதிகபட்ச விற்பனை விலைக்குமான இடைவெளியில் 75 சதவீதத்தை குறைப்பதற்கு முடிவு எடுத்துள்ளது. டிசம்பர் 24-ம் தேதியிலிருந்து இது அமலுக்கு வந்து உள்ளது. தற்போதுள்ள கையிருப்புகளில் இந்த குறைக்கப்பட்ட விலையை அச்சிட வேண்டும் என்றும், 2018-ம் ஆண்டு குடியரசு தினத்துக்குள் இதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட முடிவு செய்துள்ளது. இதனால் சிரிஞ்ச், ஊசி, கையுறை, இன்சுலின் பேனா ஊசி போன்றவற்றின் விலை கணிசமாக குறைய உள்ளது.

இதற்கு காரணம் என்பிபிஏ -வின் அதிரடி நடவடிக்கைதான். சமீபத்தில் குர்காவ்னில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலினால் 7 வயது சிறுமி இறந்துவிட்டார். இவருக்காக 1600 கையுறைகள், 660 சிரிஞ்சுகள் பயன்படுத்தப்பட்டதாக மருத்துவமனை கட்டணம் வசூலித்துள்ளது. இதில் 5மிலி சிரிஞ்ச் ஒன்றின் விலை ரூ.70 என்கிற அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதன் கொள்முதல் விலை ரூ. 15தான். இதனடிப்படையில் ஆய்வு செய்த என்பிபிஏ, மருத்துவமனைகளில் இந்த வகையில் பல முறைகேடுகள் நடப்பதை கண்டுபிடித்தது. இதன்பிறகுதான் மருந்து கருவிகள் உற்பத்தியாளர்களுக்கு, அதன் விலையை அச் சிட வேண்டும் என்கிற கட்டுப்பாட்டினை அளித்துள்ளது. நிறுவனங்கள் தாங்களாகவே விலையை முறைப்படுத்தவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்ததன் அடிப்படையில் இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளது.

எனினும் என்பிபிஏ மேற்கொள்ளும் இந்த விலை கட்டுப்பாடுகளை மருத்துவ துறை சார்ந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்த்து வருகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி டாலர் அளவுக்கு இவை பங்களிப்புகளை வைத்துள்ளன. இப்படியான கட்டுப்பாடுகள் ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளை பாதிக்கும் என்கின் றன. ஏற்கெனவே அறிவித்த விலைக் குறைப்பு நடவடிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ தொழில்நுட்ப கூட்டமைப்பு கேட்டு வருகிறது.

அதே நேரத்தில் மருத்துவத் துறை செயல்பாட்டாளர்கள் முன்வைக்கும் கருத்தும் கவனிக்கத்தக்கது. காப்பீடு மூலம் மருத்துவ செலவுகளை மேற்கொள்வதால், விலை அதிகரிப்பது மறைமுகமாக நடக்கிறது என்கின்றனர். இதனாலும் முறைப்படுத்துவது அவசியமாகிறது. மருத்துவத் துறையின் செயல்பாடுகளில் என்பிபிஏ செலுத்தும் அதிகாரம் மக்கள் நலனுக்கானதாக இருப்பதை நிறுவனங்களும் புரிந்து கொண்டால் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x