

‘Migrant people’ என்பதற்கும் ‘nomadic people' என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? - வாசகரே, ‘migrant people’ என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணத்தால் அவர்கள் வேறு இடத்துக்குச் செல்பவர்கள். ‘Nomadic people’ அல்லது ‘nomads’ என்றால் மாறி மாறி இடம்பெயர்வது அவர்களின் இயல்பாக இருக்கும். அவர்களுக்குக் குறிப்பிட்ட சொந்த இடம் என்று இருக்காது. தண்ணீர், உணவு, பிறவற்றுக்காக அவர்கள் இடம்பெயர்ந்துகொண்டிருப்பார்கள். ‘Migrants’ என்றால் புலம் பெயர்ந்தவர்கள். ‘Nomads’ என்றால் நாடோடிகள்.
***
‘ஆங்கிலம் அறிவோமே' பகுதியில் மண்வாசனை என்பது ‘petri-chor’ எனக் குறிப்பிடப்பட்டது. ரசாயன ஆய்வகங்களில் ‘petri-dish’ என சிறு வட்டமான கண்ணாடிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. ‘Petri-dish’ என்பது காரணப் பெயரா? எனக் கேட்கிறார் ஒரு வாசகர்.
‘Petri-dish’ என்பது ஆழம் குறைவான, வெளியிலிருந்து நன்கு பார்க்கக்கூடிய, மூடியோடு கூடிய ஒரு சிறு கிண்ணம்.
சோதனைச் சாலையில் இதில் ரத்தம், சிறுநீர், தண்டுவட திரவம் போன்றவற்றின் செல்களில் பாக்டீரியா, காளான் போன்றவை காணப்படுகின்றனவா என்று பார்ப்பார்கள். (இதை ‘blood culture’ என்பர்). ஜெர்மனி ஆராய்ச்சியாளர் ஜூலியஸ் ரிச்சர்ட் பெட்ரி என்பவரின் பெயரின் ஒரு பகுதி இதற்கு வைக்கப்பட்டுள்ளது.
***
ஒரு கேள்விக்கு ‘chopper’ என்பது ஹெலிகாப்டரைக் குறிக்கும் என்று விடை அளித்துள்ளீர்கள். ஹெலிகாப்டருக்கு ஏன் அந்தப் பெயர்? ‘heli-chopper’ என்பதுதான் ‘helicopter’ என்று மாறிவிட்டதா?'
இல்லை. ‘Helicopter’ என்பது ‘helico’ மற்றும் ‘pter’ என்று இரு பகுதிகளின் இணைப்பு. ‘Helico’ என்பது சுருள் வடிவத்தைக் (spiral) குறிக்கிறது. ‘Pter’ என்பது இறக்கைகளுடன் கூடிய என்பதைக் குறிக்கிறது.
***
‘Have a heart’ என்பதற்கு என்ன பொருள்? - அதானே, எல்லாருக்கும்தான் ஏற்கெனவே ஓர் இதயம் இருக்குமே என்கிறீர்களா? இது உணர்வு தொடர்பானது. இதயம் என்பது தொடர்ந்து ரத்தத்தை வெளியேற்றி, உள்வாங்கும் ஒரு பம்ப் என்கிறது அறிவியல். என்றாலும் இதயம் என்பது உணர்வுகள் தொடர்பானதாகவும் இங்குப் பார்க்கப்படுகிறது. ‘Have a heart’ என்பது கொஞ்சம் கருணையுடன் இரு, கொஞ்சம் மனிதாபிமானத்துடன் செயல்படு என்ற கோரிக்கையை வெளிக்காட்டுகிறது.
***
‘Nevertheless, Lest’ ஆகிய இரு சொற்களின் பொருள் என்ன? அவை ஒரே பொருள் கொண்டவையா? - நண்பரே, ‘Nevertheless’ என்ற சொல், 'இருப்பினும், என்றாலும், இருந்த போதிலும்' என்பது போன்ற பொருளை அளிக் கிறது. தேர்வு மிகக் கடினமாக இருந்தபோதும் அவன் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தால், ‘The examination was very difficult; nevertheless, he earned a good grade’ என்று கூறலாம்.
போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு வாரம் கொண்டாடப் பட்டிருக்கலாம். போக்குவரத்துப் போலீசார் தவறு செய்பவர்கள் மீது மிகவும் கடுமை காட்டி இருக்கலாம். ஆனாலும் விபத்துகள் நிகழ்கின்றன. இதனைக் குறிக்க ‘Nevertheless, accidents still occur’ எனலாம். ‘Lest’ - இல்லையென்றால் என்று அர்த்தம். ஒன்று நடந்துவிடக் கூடாதே என்று தடுக்க முயல்வது. விபரீதத்தைத் தவிர்க்கும் முயற்சி எனலாம்.
‘They hesitated to complain about the loud processions lest they will be branded as haters of a particular community.’ ‘Lest anyone doubt my story, I have brought documents to attest to its truth.’‘Nevertheless, lest’ ஆகிய இரண்டு சொற்களும் ஒருவிதத்தில் நேரெதிர் அர்த்தங்களை அளிக்கக் கூடியவை எனலாம். ‘Wear helmet. Lest you may lose your life’. ‘He wore helmet. Nevertheless he died in a road accident.’
சிப்ஸ்:
# ‘Post 1947’ என்றால்? - 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு
# ‘Waive’ என்றால்? - தள்ளுபடி செய்வது.
# ‘Aqueous humor’ என்பது? - கண்ணில் சுரக்கும் ஒரு வகை நீர் போன்ற திரவம். இதற்கும் நகைச்சுவைக்கும் தொடர்பு இல்லை.
- aruncharanya@gmail.com