Published : 15 Dec 2017 10:54 AM
Last Updated : 15 Dec 2017 10:54 AM

‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்

“‘ரெமோ’ படத்தில் நடித்தபோது, எங்களை மீறி அந்தப் படம் அவகாசம் எடுத்துக்கொண்டது. அப்படத்துக்காக பத்து கிலோ எடை குறைத்து, மீசையை எடுத்தேன். அந்த நேரத்தில் வேறு எந்தவொரு படத்திலும் நடித்திருக்க முடியாது. அடுத்த ஆண்டில் கண்டிப்பாக இரண்டு படங்கள் வெளிவரும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். நான் எத்தனை படங்களில் நடிக்கிறேன் என்பதைத் தாண்டி என் படங்கள் எவ்வளவு வசூல் செய்தன என்பது முக்கியமாக இருக்கிறது” என்ற பாக்ஸ் ஆபீஸ் அக்கறையுடன் பேசத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்.

‘வேலைக்காரன்’ படத்தின் கதை பற்றி...

அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.

பல முன்னணி நடிகர்களோடு ஒரே படத்தில் நடிக்கும்போது உங்களுக்கான முக்கியத்துவம் குறையுமே?

இதில் கதைதான் நாயகன். அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் இருக்கும். அதுவும் முழுமையாக எனது கதாபாத்திரத்தின் பயணம்தான் படம். இப்படத்தின் மூலமாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஃபகத் பாசில் எப்படி ஒரு காட்சியைப் புரிந்துகொள்கிறார், எப்படி நடிக்கிறார் என்று உன்னிப்பாகக் கற்றுக்கொண்டேன். இம்மாதிரியான படங்களை திரையுலகின் அனுபவப் பாடமாகப் பார்க்கிறேன். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படியொரு முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.

திடீரென்று விளம்பரத்தில் நடிக்கப் போவதில்லை என்று அறிவிப்பதற்கான காரணம் என்ன?

விளம்பரங்கள் மூலம் மக்களிடையே ஒரு விஷயத்தைக் கொண்டுபோய்ச் சேர்கிறோம். ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி என்னை பாதித்தது. எதையுமே யோசிக்காமல் விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கி, அந்தப் பொருட்களால் யாராவது ஒருவர் பாதிக்கப்பட்டால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. அன்றைய தினம் விளம்பரம் மூலம் சம்பாதித்த பணமும் தவறாக தெரியும். அப்படி ஒரு எண்ணம் வந்தபோதே, உடனடியாக விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன். அதை ஏன் மேடையில் சொன்னேன் என்றால், அனைவரின் முன்பும் கூறிவிட்டேன். இனிமேல் நானே நினைத்தாலும் விளம்பரங்களில் நடிக்க இயலாது என்பதற்காகத்தான்.

15chrcj_Velaikkaran‘ரெமோ’ படத்தில் பெண்களைப் பின்தொடர்தல் குறித்துக் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தீர்களே. அப்போது என்ன நினைத்தீர்கள்?

‘ரெமோ’ ஒரு காமெடி படம். காமெடி படத்துக்குள் போய் ஆராய்ச்சி செய்வது தவறு. அதை அவ்வளவு சீரியஸாக எடுத்து விவாதித்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

நீங்கள் இதைத் தவிர்த்திருக்கலாமே என்று சொல்லியிருக்கலாம், சிலர் ‘சமுதாயத்தின் சீர்கேடு’ என்று குறிப்பிட்டு இருந்தார்கள். சிவகார்த்திகேயன் உங்கள் மீது குழந்தைகள் பார்வை நிறைய இருக்கிறது. இப்படிப் பண்ணாதீர்கள் என்று சொல்லியிருந்தால் என் தலையில் ஏறியிருக்கும். சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையில் அப்படத்தில் எதுவும் சொல்லவில்லையே. ‘ரெமோ’ மட்டும்தான் சமுதாயத்தின் சீர்கேடா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அந்தக் கேள்வி எழும்போது மொத்தப் பிரச்சினையும் என் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்கிறேன். பலரும் பார்க்கிறார்கள் என்பதால் இனிமேல் ரொம்ப கவனமாக இருப்பேன்.

‘ரெமோ’ வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கண் கலங்கினீர்கள். அப்பிரச்சினையிலிருந்து எல்லாம் வெளியே வந்துவிட்டீர்களா?

இன்னும் இருக்கிறது. பழைய மாதிரி அழாமல், சிரித்துக்கொண்டே சந்திக்கிறேன். முன்பு யாரெல்லாம் இப்படிப் பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். முன்பு ரொம்ப வருத்தப்பட்டேன், இப்போது பழக ஆரம்பித்துவிட்டது. தப்பு செய்தால் நடவடிக்கை எடுங்கள், ஆனால் அனைவர் மீதும் எடுங்கள்.

ஒரு படம் வெற்றியடைந்தவுடன் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

‘வேலைக்காரன்’படத்துக்குச் சம்பளம் குறைவாகதான் வாங்கியுள்ளேன். பொன்ராம் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு அட்வான்ஸ் மட்டும் வாங்கியிருக்கிறேன். 50 சதவீதம் படம் முடித்துவிட்டேன். அப்புறமாக வாங்கிக் கொள்ளலாம், தயாரிப்பாளரைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்ற எண்ணம்தான். ஆனால், இது ஆர்.டி.ராஜா சார் என்பதால் நம்பிக்கையாகச் சொல்ல முடியும். இதையே முன்னாள் படத்தின் தயாரிப்பாளர்கள் சரியாகச் செய்திருந்தால், அனைத்துத் தயாரிப்பு நிறுவனத்திலும் தொடர்ச்சியாக நடித்திருப்பேன். என்னுடைய மொத்த சம்பளத்தையும் வாங்கி 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட்டார்களே, அதைப் பற்றி ஏன் யாருமே பேசமறுக்கிறீர்கள் என்பது என் கேள்வி. சம்பளம் போக கடன் வாங்கி 50 லட்சம் கொடுத்தேன்.

வெளி தயாரிப்பாளருக்குப் படம் செய்ய மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இப்படியொரு விஷயம் நடந்தால் எப்படிப் படம் பண்ண முடியும். இத்தனைக்கும் என் படங்கள் மூலமாக லாபம் சம்பாதித்துவிட்டு கொடுக்கவில்லை என்னும்போது, நான் என்ன செய்வது? ஆகையால் இப்போது என் படத்தின் தயாரிப்பாளரைப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நாயகர்கள் சம்பளம் அதிகம், தயாரிப்பாளர்கள் யாரும் பணம் கொடுப்பதில்லை என்றும் சொல்லிவிட முடியாது

பாலா போன்ற இயக்குநர்களின் படங்களில் எப்போது உங்களைக் காணலாம்?

ஆசைதான். அப்படி நடித்தாலும் முழுக்கப் பொருட்செலவைக் குறைத்துதான் நடிப்பேன். அப்படங்கள் எல்லாம் முடிந்தளவுக்குச் சொந்த தயாரிப்பாக மாற்றிவிடுவேன். என்ன தவறு நடந்தாலும், அதற்கு நானே பொறுப்பு என்பது மாதிரி செய்துவிடுவேன். ஏனென்றால், எனது நடிப்பு ஆசைக்கு மற்றவரது பணத்தை வீணடிக்க விரும்பவில்லை. என் படத்தை நம்பிக்கையோடு விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள், அதை ரொம்ப மதிக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x