Published : 22 Jul 2014 10:10 AM
Last Updated : 22 Jul 2014 10:10 AM

மருந்தாகும் தாவரங்கள்

தமிழ் மருத்துவம் பற்றி பரவலான அறியாமை நிலவுகிறது. அதன் தொன்மை பற்றியும், நடைமுறைப் பயன்பாடு பற்றியும் கூற முடியுமா?

- சரண்யா, வில்லுக்குறி

தமிழ் மருத்துவம், பிற்காலத்திலேயே சித்த மருத்துவம் என்று அழைக்கப்படலானது. வேதக் காலத்துக்கும், வேதக் கால மருத்துவம் தொடங்குவதற்கு முன்பாகவும் தமிழர்களுக்கு மருத்துவ அறிவு இருந்தது. வேதத்தில் சதாயு புருஷஹா, அதாவது நூறு ஆண்டு வாழ்வு பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ‘போகர் ஏழாயிரம்' எனும் நூலில் கமல முனி 7,300 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், போகர் 300 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், திருமூலர் 1,000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தார்களோ, இல்லையோ, காயகல்பம் எனும் முறையைக் கொண்டு நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

‘போகர் ஏழாயிரம்' நூலின் ஆறாம் காண்டமாகிய சப்தக் காண்டத்தில் இதைப் பற்றிய விபரங்கள் கிடைக்கின்றன. சராசரி மனிதனைவிட அதிகக் காலம் வாழ்வதற்கான வழிகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. பிணி என்பது வேறு, நோய் என்பது வேறு என்ற நுண் பிரிவையும் அவர்கள் வைத்திருந்தனர்.

இது மட்டுமல்லாமல் வானசாஸ்திரத்தையும் அறிந்திருந்தார்கள். "வழிதரு திசையும் வரிதுநிலையை காயமும் என்றிவை சென்றிருந்து அறிந்தவர் போல" என்ற புறநானூற்று வரிகளால் தமிழர்களுக்கு அபாரமான கோள் அறிவு இருந்தது என்று அறிந்துகொள்ள முடிகிறது.

சூரியன் நோயைக் குணமாக்கும் என்பதை "சந்தனமும் கொழும் தன் கனல் நீருடனே கொங்கணர் செண்பகம் கொண்டு வணங்கிடுவேன்" என்ற சூரியனார் தோத்திரப் பாடல் மூலம் அறிய முடிகிறது. மேலும் பல நுணுக்கமான விஷயங்கள் சிவ வாக்கியர் யோகத்தில் உள்ளன. பழமொழிகள் மூலமும் மருத்துவத்தை வளர்த்து வந்தனர்.

சமயம், பண்பாடு, அன்றாட வாழ்க்கை ஆகிய அனைத்தின் மூலமும் மருத்துவத்தையும், தாவரத்தையும் போற்றினர். தமிழர்கள் செடிகொடிகளைப் போற்றியதைப் போல், உலகத்தில் எந்த மக்களும் போற்றியதில்லை. தங்கள் குழந்தைகளுக்குப் பத்மா, தாமரை, முல்லை, செண்பகம், மல்லிகை என்றே அதிகமும் பெயர் வைத்தார்கள்.

நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பெயரிட்டனர். இவை செடிகளின் பெயர்கள் என்பதை நினைவுகூர வேண்டும்.

இலக்கணத்தில் ஈரசைச் சீர்களுக்கும் மூவசைச் சீர்களுக்கும் முறையே தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்று செடிகளின் பெயர்களையே சூட்டினர். இறை வழிபாடு என்று எடுத்துக்கொண்டால் சிவனுக்குக் கொன்றை, தும்பை, திருமாலுக்குத் துளசி, முருகனுக்குக் கதம்ப மாலை, பிள்ளையாருக்கு அருகம்புல், அருகக் கடவுளுக்கு அசோகம், புத்தருக்குத் தாமரை, பார்வதிக்குக் குவளை, காளிக்கு அரளி என்றே சூட்டினர்.

எதிரிகளின் பசு மந்தையைக் கவர்ந்து வருவதை வெட்சி என்றனர். போருக்குச் செல்வதை வஞ்சி என்றனர். எதிர்த்து வருவதைக் காஞ்சி என்றனர். மதில் காத்து நிற்பதை நொச்சி என்றனர். மதிலை வளைத்து முற்றுகையிடுவதை உழிஞை என்றனர். போர் புரிதலைத் தும்பை என்றனர். வெற்றி பெறுதலை வாகை என்றனர். பசு மந்தையை மீட்டுகொண்டு வருதலை கரந்தை என்றனர். இதைப் போல் எந்த மொழியிலும் நான் படித்ததில்லை.

தல விருட்சங்களை வைத்துச் செடிகளைப் போற்றினர். Epidemiological disorder-க்கு தல விருட்சம் சிறந்தது. வேம்பின் குணத்தை அவர்கள் அறிந்திருந்தனர்.

நல்லாதனார் என்பவர் திரிகடுகம் என்று தமது பாடல்களுக்குப் பெயர் சூட்டினார். இதுபோல் சிறுபஞ்சமூலம் என்று ஒரு பாடல் தொகுப்பும் உள்ளது.

இதைப் போல் திருக்குறளிலும் எண்ணற்ற மருத்துவப் பாடல்கள் உள்ளன. அரச மரத்தை ஒரு பெரிய மருத்துவ அடையாளமாகவும், அதில் உள்ள புல்லுருவியை மருந்தாகவும் பயன்படுத்தினர். ‘அரசமரத்தைச் சுற்றினாளாம் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்' என்பது தமிழ்ப் பழமொழி.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்பது போன்ற பழமொழிகள் நாலடியாரையும், திருக்குறளையும் குறிப்பது மட்டுமல்லாமல் ஆலம் குச்சியையும், வேலம் குச்சியையும் gingivitis பல் நோய்க்குப் பயன்படுகின்றன என்பதை அவர்கள் சொல்லியுள்ளனர்.

உடம்பை முறித்துக் கடம்பைப் போடு என்று சொல்லி வைத்தனர். கடம்ப மரக் கட்டிலில் படுத்தால் கைகால் வலி Chronic fatigue syndrome, Fibromyalgia போன்றவை வராது என்று அர்த்தம்.

இதைப் போல் தமிழரின் பெருமையை ஆயிரம் ஆயிரம் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழர் மருத்துவம் தலை சிறந்தது, நுணுக்கமானது, வணங்கத்தக்கது.

உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x