Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM

புத்தியுள்ள காகம்

காகங்கள், கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனம். காகங்களில் 40 வகைகள் உள்ளன.

காகங்கள் எந்தப் பருவ நிலையிலும் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழக்கூடிய தகவமைப்பு பெற்றவை. அண்டார்டிகாவில் மட்டும் காகம் காணப்படுவதில்லை.

ஒரு காகத்திற்கு தினமும் சராசரியாக 280 கிராம் உணவு தேவை.

காகங்கள் புத்திக்கூர்மை உடையவை. காகத்தின் அளவில் உள்ள உயிரினங்களோடு காகத்தை ஒப்பிடும்போது இதனுடைய மூளையே பெரிது.

காகங்கள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. மனிதர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அனுசரித்து வாழும். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் காகங்கள் சாப்பிடும்.

குளிர்காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கூட்டமாக இடம்பெயரும்.

மனிதர்களுக்கு அடுத்து அதிக புத்திக்கூர்மை கொண்டவை காகங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவு உண்பதற்காகவும் கூடு கட்டுவதற்காகவும் பல பொருட்களைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும் திறன் காகத்திற்கு உண்டு.

காகங்களுக்குப் பிரத்யேக மொழி உண்டு. பிராந்தியத்திற்கேற்ப அதன் மொழியும் மாறுபடும். கா..கா…வெனக் காகங்கள் போடும் சத்தம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டாம்.

கூட்டத்தில் உள்ள ஒரு காகம் இறந்துபோகும் நிலையில் இருந்தால், மற்ற காகங்கள் அனைத்தும் கா…கா…வெனச் சத்தமிட்டபடி அதைத் தாக்கிச் சாகடித்துவிடும்.

காகம் ஒரே துணையுடன்தான் வாழும். ஆண் காகமும் பெண் காகமும் முட்டைகளை முறைவைத்து அடைகாக்கும். சராசரியாக ஒரு நேரத்தில் 4 முதல் 7 முட்டைகளை இடும்.

மனிதர்களின் முகம் மற்றும் முகபாவத்தை வைத்தே அவர்களை எடைபோடும் திறன் காகங்களுக்கு உண்டு.

காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆசியா எனப் பல வகைகள் உள்ளன. காட்டுக் காகம் (அண்டங் காக்கை), வீட்டுக் காகம் ஆகியவை ஆசியாவில் உள்ள இனங்கள்.

மரங்களில் தங்கும் காகங்கள் பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழும்.

காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும். பாம்பு, எலி, தவளை உட்பட இறந்த எல்லாப் பிராணிகளையும் உண்ணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x