Published : 30 Jun 2014 14:06 pm

Updated : 02 Jul 2014 19:09 pm

 

Published : 30 Jun 2014 02:06 PM
Last Updated : 02 Jul 2014 07:09 PM

உலகிலேயே அழகான பெண் யார்?

பழையன கழிதலும், புதியன புகுதலும் ஃபேஷன் உலகிற்குப் பொருந்தாது. இங்கே பழையது, புதுப்பொலிவுடன் வருவது வாடிக்கை. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ஆடைகளும் அணிகலன்களும்தான் இன்று டிரெண்டாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. பாரம்பரியமும் நவீனமும் இணைந்த ஆடைகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் முதலிடத்தில் இருப்பது ‘குர்தி’. கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்துத் தரப்பு பெண்களாலும் இவை விரும்பி அணியப்படுகின்றன. மகளோடு போட்டி போட்டுக்கொண்டு அம்மாக்களும் குர்தி அணிந்து வலம் வருகின்றனர்.

குர்தியின் வரலாறு


பெண்களின் அபிமான உடையாகத் திகழும் குர்தி, வட மாநிலங்களின் பாரம்பரிய உடையாகப் பன்னெடுங்காலமாக இருந்து வந்தாலும் பஞ்சாப் மற்றும் ஜம்முவில் கி.பி. 19-ம் நூற்றாண்டில் பிரபலமாயின. மிகவும் தளர்வாகவும், உடலுக்குப் பொருந்தாமலும் அந்தக் காலத்தில் பெண்கள் அணிந்திருந்த குர்திகளுக்கு 1998-ம் ஆண்டு இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மோனிஷா ஜெய்சிங், புதுவடிவம் கொடுத்து மீண்டும் அறிமுகப்படுத்தினார்.

மறுவடிவமைத்த பின்னர் குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் எனப் பயணித்து வட இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது.

இன்று குர்தா இந்தியப் பெண்கள் விரும்பி அணியும் ஆடையாகத் திகழ்கிறது. பல வெளிநாடுகளிலும் இந்த உடையை பெண்கள் விரும்பி அணிகின்றனர். அனைவருக்கும் ஏற்ற விலை, பலதரப்பட்ட வகைகள், ரகங்கள் இவையே குர்திகளின் வெகுஜன மதிப்புக்குக் காரணம்.

“குர்தியை ஜீன்ஸ் பேண்ட் மீது போட்டுக் கொண்டால் மாடர்னாகவும் அதேசமயம் டீஸன்டாகவும் இருக்கும். பேரலல் பேண்ட் அல்லது லெகிங்ஸ் போட்டுக் கொண்டு துப்பட்டா போட்டுக் கொண்டால், பாரம்பரிய உடை ஆகிவிடும். அது மட்டுமின்றி குர்தி அனைத்து உடல் அமைப்புகளுக்கும் பொருந்தும் வகையில் வெவ் வேறு அளவுகளில் கிடைக்கிறது” என்று குர்தி புகழ் பாடுகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாஷினி.

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீமதியோ, கொட்டிக் கிடக்கும் வண்ணங்களையும் வகைகளையும் தன் குர்தி தேடலுக்குக் காரணமாகச் சொல்கிறார்.

“அணிவதற்கு எளிதாக உள்ளது. வெயில், குளிர், மழை என எல்லா தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ற நேர்த்தியான உடை குர்திதான்” என்று சிலாகிக்கிறார் ஸ்ரீமதி.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியான சஞ்சனாவோ, குர்திகளில் செய்யப்படுகிற பலவித வேலைப்பாடுகளைப் பட்டியலிடுகிறார். “குர்தி மிகவும் சவுகரியமான அதே சமயம் பாதுகாப்பான உடை. குர்தியில் நிறைய ரகங்கள் இருக்கு. காட்டன் எம்ப்ராய்டரி, காட்டன் பேட்ச் வொர்க், ராஜஸ்தானி காட்டன், ஜெய்ப்பூரி பிரின்ட், அகமதாபாத் குர்தி, ஜார்ஜெட் பிரின்ட், கோல்டு ஜரி பார்டர் என நிறைய வகைகள் இருக்கு” என்கிறார்.

“குர்தி எல்லாவிதமான விழாக்களுக்கும், நிகழ்ச்சி களுக்கும் பொருத்தமான உடை. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு சாதாரண குர்தி வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே சமயம் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கபடும் விலை உயர்ந்த குர்தி ரகங்களும் கிடைக்கின்றன” என்கிறார் சென்னையில் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீவித்யா.

குர்தியை நேர்த்தியாக அணிய

நாம் அணியும் ஆடைகள் நம் ரசனையைப் பிரதிபலிக்கின்றன. ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை வைத்தே அவரை மதிப்பிடுவார்கள். அதனால் ஆடைகளைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும். சரியான குர்தியைத் தேர்வு செய்யக் குறிப்புகள் தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் வினிதா.

ஸ்லீவ்

லைட் வெயிட் காட்டன் ஸ்லீவ்லெஸ் குர்திகள் கோடைக்காலத்தில் அணிந்து கொள்ள ஏற்றவை. இவை காலர் வைத்தும், காலர் இல்லாமலும் கிடைக்கின்றன.அலுவலகம், விழாக்கள், பயணம் ஆகியவற்றுக்கு ஏற்றவை ஆஃப் ஸ்லீவ் குர்திகள். இவை எண்ணற்ற வடிவமைப்புகளில் கிடைக்கின்றன.

குழந்தைகள், இளம்வயதினர், வேலைக்குச் செல்லும் பெண்கள் என அனைத்து வயதினரும் விரும்பி அணிவது ஃபுல் ஸ்லீவ் குர்திகளைதான் . ஃபுல் ஸ்லீவ் குர்திகள் தனிப்பட்ட தோற்றம் அளிக்கின்றன. த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் குர்தி, கண்ணியமான தோற்றத்தை அளிக்கும்.

உயரம்

குர்தி பொதுவாக முழங் காலுக்கு மேல் 4 முதல் 5 அங்குல உயரத்தில் இருக்க வேண்டும். ஆனால் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்தாவைச் சற்று நீட்டமானதாக்கிக் கொள்வது நல்லது. நீண்ட அல்லது முழங்கால் நீளம் கொண்ட குர்தியை ஜீன்ஸ் உடன் அணிவதை விட லெகிங்ஸ் உடன் அணிவது கச்சிதமாக பொருந்தும். ஃபார்மல் தோற்றத்தை அளிக்கும்.

கணுக்கால் நீளமுள்ள குர்திகளை விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அணிந்துகொண்டால் நேர்த்தியாக இருக்கும்.

குறுகிய மற்றும் இடுப்பளவு குர்தி உடன் ஜீன்ஸ் அணிவது மாடர்ன் தோற்றத்தை அளிக்கும்.

நிறம்

கறுப்பு, பச்சை, ஆரஞ்சு மற்றும் மல்டி கலர் குர்திகள்தான் இன்றைய ஃபேஷன். நீலம், வெள்ளை, க்ரீம் நிற குர்திகள் ஃபார்மல் தோற்றத்தை அளிக்கும். பளிச்சென்று காட்சியளிக்க, தெளிவான மற்றும் பிரகாசமான நிற குர்திகளைத் தேர்வு செய்யவும்.

குர்தியும், லெகிங்கும் ஒரே நிறத்தில் அணிவதைத் தவிர்க்கவும். இரண்டையும் முற்றிலும் எதிரெதிர் நிறங்ககளில் அணிந்தால் எடுப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்.

உடல் அளவுக்கும், நிறத்திற்கும் ஏற்ற ஒரு குர்தி, அதற்குப் பொருத்தமான ஜீன்ஸ் அல்லது லெகிங்ஸ் அணிந்து, கூடவே அவற்றுக்கு ஏற்ற ஃபேஷன் ஆபரணங்களோடு, மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் நீங்கள்தான் உலகத்திலேயே அழகான பெண்மணி.


தவறவிடாதீர்!

    குர்திஜீன்ஸ்ஃபேஷன்மாடர்ன்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x