Published : 23 Dec 2017 09:39 AM
Last Updated : 23 Dec 2017 09:39 AM

தோடியில் அசத்திய சேஷகோபாலன்

நா

கஸ்வரத்தில் தோடி ராகத்தை கேட்கக் கேட்க டிஎன்ஆர் நினைவு வருவதுபோல, கூடவே டிஎன்எஸ் (அதாவது டி.என்.சேஷகோபாலன்) நினைவும் வந்துவிடுகிறது. காரணம் அவர் நடித்த திரைப்படம் அது. சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவில் கடந்த வாரம் சேஷகோபா லன் முக்கியமாக எடுத்துக்கொண்ட ராகம் தோடிதான்.

ஆலாபனையில் தன் கற்பனையை மட்டுமல்லாது, திறமையையும் குழைத்துக் கொடுத்தார். மேல் ஸ்தாயி யில் சஞ்சரிக்கும்போது, பழைய எடுப்பான குரல் வந்து சற்று அசத்தியது. மனி தர் அத்தனை எளிதாக விட்டுக்கொடுப்பதாக இல்லை என்பது புரிந்தது. தோடியின் குழைவுகளும், பிடிகளும் அவர் கைவசம் வந்த பிறகு, கொஞ்சம் சுருதி பேதம் செய்து மீண்டும் தோடியில் தரை இறங்கினார்.

தோடியில் என்ன பாட்டு பாடப் போகிறாரோ என்ற ஊகத்தில் ரசிகர்கள் இருந்தபோது, தியாகராஜரின் ‘கத்தனுவாரிகி’யை எடுத்துக்கொண்டார். (தெய்வம் உண்டென்று உரைப்போர்க்கு ‘உண்டு, உண்டு’ என்று முறையிடும் பெரியோர்களின் பொன்மொழி கள் இன்று பொய்யாகிவிட்டனவோ? என்று தியாகராஜர் கேட்கிற கீர்த்தனை). ‘பத்து தபக பஜியிஞ்சே’ என்ற வரிகளை சரணத்தில் இருந்து தேர்ந்தெடுத்து, நிரவல் செய்தார் டிஎன்எஸ்.

பின்னே திரும்பி சைகை செய்து, மகன் கிருஷ்ணாவையும் இணைத்துக் கொண்டார். தந்தையின் இசையில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த கிருஷ்ணா, வாய்ப்பை விட்டுவிடவில்லை. ஆலாபனையில் விட்டுப்போன சங்கதிகளை எல்லாம் நிரவலில் நினைவுபடுத்தினார் சேஷகோபாலன். அப்புறம் என்ன? சுவரங்கள்தான்! சுவரங்கள் என்றால், சேஷகோபாலனிடம் கணக்கு-வழக்கு இல்லாமல் இருக்குமா? பக்கவாத்தியக்காரர்களிடம் அந்த கணக்கு-வழக்கை முடித்துக்கொண்டார். கைதட்டலையும் பெற் றுக்கொண்டார்!

கச்சேரியைத் தொடங்கிய போது கானடா ராகத்தில் ‘சுவாமின் கஜமுக விபோ’ பாடிவிட்டு, பூர்ணசந்திரிகா ராகத்தில் ‘சங்க சக்ர கதா பாணிம்’ என்று நிரவலும், சுவரமுமாக ஒரு வலம்வந்தார். அடுத்து, ‘நீலாஜன சமாகலாபம் ரவிபுத்ரம்’ என்று சமஸ்கிருத சுலோகத்தை விருத்தமாகத் தொடங்கியபோது, சட்டென்று புரியவில்லை, அது சனி பகவான் மீதான சுலோகம் என்று. ‘சாயா மார்த்தாண்ட சம்பூதம் சனீச்சரம்’ என்றபோது நன்றாக உறைத்தது. சனிப் பெயர்ச்சி காரணமாக பொருத்தமாக இருக்குமே என்று தேர்ந்தெடுத்தார் போலும். அதை உறுதிசெய் வது போல, முத்துசாமி தீட்சிதரின் ‘திவாகர தனுஜம்’ என்ற நவக்கிரக கீர்த்தனை.

‘பாஹி ராம ஜூடஜக’வை தொடர்ந்து, துள்ளிக் குதித்து வந்தது கதனகுதூகல ராகத்தில், ‘ஆஞ்ச நேய பரிபாடலினம்’. ‘ரகுவம்ச சுதா’ கேட்டிருப்போம். அதே மெட்டு, அதே மீட்டர் (கதனகுதூகலத்தை அதன் கோலாகலத்துக்காகவே ரசிக்கலாம்).

மார்கழியில் திருப்பாவை பாடாமல் இருக்கலாமோ? ஹிந்தோளத்தில் ‘அன்னவயல் ஆண்டாள்’ முன்னுரையாகப் பாடிவிட்டு, தொடர்ந்து ‘ஆழிமழைக் கண்ணா’வைப் பொழிந்தார். ‘பச்சைமா மலைபோல் மேனி’ பாடி, தில்லானாவில் முத்தாய்ப்பு வைத்தார்.

வயலின் வாசித்த விட்டல் ராமமூர்த்தி, மிருதங்கம் வாசித்த திருச்சூர் நரேந்திரன், கடம் வாசித்த மடிப்பாக்கம் முரளிக்கு கச்சேரி யின் வெற்றியில் பங்குண்டு. பாடகரின் நிறைகுறைகளைப் புரிந்துகொண்டு அனுசரித்து வாசித்தார்கள்.

(பி.கு. சபா கேன்டீனுக்கு வருகிறவர்கள் எல்லாம் கச்சேரிக்கு வருபவர்கள் அல்ல என்ற உண்மை பலருக்கும் தெரியாது. 10 பேர் கொண்ட வடமாநில குடும்பம், ரவா தோசையில் ஆரம்பித்து அத்தனை ஐட்டங்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டுப் புறப்பட்டபோது, ருசிதான் எத்தனை விதம் என்று உறைத்தது! நமக்கு செவிக்கு உணவு முக்கியம் என்றால், அவர்களுக்கு வாய்க்கு உணவு!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x