Last Updated : 21 Dec, 2017 07:44 PM

 

Published : 21 Dec 2017 07:44 PM
Last Updated : 21 Dec 2017 07:44 PM

ஊட்டியில் மையம் கொண்ட இயக்குநர்கள்!

டிசம்பர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது ஊட்டி. அங்கேபோய் இறங்கியதும் பளிச்சென்று கண்களில் பட்டன திரைப்படவிழா போஸ்டர்கள். படச்சுருள் தண்டவாளத்தில் வளைந்து நெளிந்து மேலேறும் மலைரயில் ஓவியத்துடன் ஒரு போஸ்டர். முக்காடிட்ட பெண்கள் முதுகில் மாட்டிக்கொண்டு தேயிலை பறித்து நிரப்பும் கூடை படச்சுருள்களால் நிரம்பிவழியும் ஓவியத்துடன் இன்னொரு போஸ்டர் என ஊட்டியின் முதன்மையான அம்சங்களை அவை கவனப்படுத்தின.

ஊட்டியின் சுற்றுலாப் பயணிகள் குவியும் முக்கியமான இடங்களில் ஒன்று தாவரவியல் பூங்கா. அதற்குச் செல்லும் சாலையான காடர்ன் ரோட்டில் இருக்கும் ‘அசெப்ளி ரூம்ஸ்’ திரையரங்கில்தான் ஊட்டி திரைப்படவிழா களை கட்டியிருந்தது. ‘தெற்காசிய குறும்படப் போட்டியுடன்’ கூடிய மூன்றுநாள் திரைப்பட விழாவின் முதல் நாளான டிசம்பர் 8 அன்று கேரளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த ‘கால் மார்க்ஸ்’(Call Marx) என்ற ஆறு நிமிடக் குறும்படத்துடன் காலை எட்டு மணிக்குத் தொடங்கியது.

திரையிடலை விஞ்சிய விவாதக் களம்

பாகிஸ்தான், இலங்கை, ஈரான் உள்ளிட்ட 8 தெற்காசிய நாடுகளிலிருந்து குவிந்த 1,400 குறும்படங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்டிருந்த 127 படங்கள் அட்டவணையில் குறிப்பிட்டிருந்தபடி சரியான நேரத்தில் திரையிடப்பட்டன. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி 6 மணிவரை திரையரங்கின் பின்னால் இருந்த கூட்ட அரங்கில் விவாதங்கள் களை கட்டின. முதல் நாள் நடந்த விவாத அரங்கில் திரைப்பட எழுத்தாளர் அஜயன் பாலா, எழுத்தாளர் சாரு நிவேதிதா, ஆவணப்பட இயக்குநர், கவிஞர் லீனா மணிமேகலை ஆகியோர் கலந்துகொண்டு பார்வையாளர்களுடன் தமிழ் குறும்படங்களின் தரம் குறித்தும் குறும்படங்களுக்கு இருக்கும் சுதந்திரம் குறித்தும் உரையாடினார்கள்.

இரண்டாம் நாள் விவாத அரங்கில் ஊடகப் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன், இயக்குநர் மிஷ்கின், எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கதை சொல்லும் கலை, குறும்படம் எனும் ஊடகம் வழியாகத் திரையுலகில் நுழைய விரும்பினால் தனிப்பட்ட முறையில் எப்படித் தயாரித்துக்கொள்வது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது ஆகிய தலைப்புகளில் உரையாற்றியதுடன் குறும்பட இயக்குநர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள். மூன்றாம் நாள் விவாத அரங்கு, குறும்படங்களை லாபகரமாக எப்படிச் சந்தைப்படுத்துவது என்ற கேபிள் சங்கரின் உரையுடன் தொடங்கியது.

அவரைத் தொடர்ந்து, ‘தமிழ் வணிக சினிமாவின் பாதிப்புடன் குறும்படங்கள்’ எடுப்பது தமிழ்க் குறும்படங்களைச் சர்வதேச அரங்கில் உயர்த்தாது என்று இசை விமர்சகர் ஷாஜி பேசினார். திரையிடலில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர் என்றபோதும் திரையிடலை விஞ்சும்விதமாக விவாத அரங்கம் மூன்று நாட்களிலும் நிரம்பி வழிந்தது. இருக்கைகள் நிறைந்ததால் நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இரண்டு மணி நேரமும் நின்றுகொண்டே உரைகளைக் கேட்டனர். விவாத அரங்கை டிஸ்கவரி புக்ஸ் வேடியப்பன் தொகுத்து அளித்த விதமும் பார்வையாளர்களை ஈர்த்தது.

குவிந்த இயக்குநர்கள்

சென்னையில் நடைபெறும் திரைவிழாக்களில் கூட இத்தனை இயக்குநர்களையும் கலை, இலக்கிய உலக ஆளுமைகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியுமா என்பது சந்தேகம்தான். மிஷ்கின், பி.லெனின், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, கோபி நயினார், லீனா மணிமேகலை, அஜயன் பாலா, ஜீவா சங்கர், ஜி.ஆர்.ஆதித்யா, ஒளிப்பதிவாளர் வைடு ஆங்கிள் ரவிசங்கர், கேபிள் சங்கர், அனீஸ், இசை விமர்சகர், நடிகர் ஷாஜி, வடிவமைப்பாளர் சந்தோஷ், நடிப்புப் பயிற்சியாளர் தம்பிச்சோழன் என நீளும் பட்டியலில் இரண்டு சாதனை இயக்குநர்களும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்களில், தன் படைப்புகள் மூலம் இலங்கை சினிமாவுக்கு உலக அரங்கில் பெருமையைக் கொண்டுவந்து சேர்ந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, ஊடகப் பேராசியருக்கும் ஆவணப்பட இயக்குநருமான சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகிய இருவரது வருகையும் பங்களிப்பும் ஊட்டி திரைப்பட விழாவின் தரத்தைப் பெரிதும் உயர்த்தியது என்று சொல்ல வேண்டும்.

மலைக்க வைத்த விழாக் குழு

ஊட்டி திரைப்படச் சங்கத்தைத் தொடங்கி நடத்திவரும் ‘மலைச்சொல்’ பதிப்பக நிர்வாகி பாலநந்தகுமார், சக நிர்வாகக்குழு உறுப்பினர்களான மாதவன் பிள்ளை, டிஸ்கவரி புக்பேலஸ் பதிப்பாளரும் அயல்சினிமா பத்திரிகையின் ஆசிரியருமான வேடியப்பன், எழுத்தாளர் பவா.செல்லதுரை, ஒளிப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், பழனிகுமார், அருண்காந்தி, கே.வி.ஷைலஜா ஆகியோர் அடங்கிய விழாக்குழுவை சிறப்பாக ஒருங்கிணைத்து பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களையும் சிறப்பு விருந்தினர்களையும் மலைக்கவைத்தார்.

தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் இன்னொசண்ட் திவ்யா, ஊட்டியின் வரலாற்றுப் பெருமைமிக்கத் திரையரங்கான அசெம்ளி ரூம்ஸில் விழா நடத்துவதையும் கான் உட்படப் பல உலகப் புகழ்பெற்ற சர்வதேசப் பட விழாக்களில் கவுரவமும் விருதுகளையும் பெற்ற இயக்குநர் பிரசன்ன விதானகேவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து அவரைக் கவுரவம் செய்திருப்பதையும் சிறப்பாகக் கூறினார். மேலும், எல்லா சீசன்களிலும் மக்கள் ஊட்டிக்கு வந்துசெல்ல வேண்டும் என்ற சுற்றுலா வளர்ச்சி நோக்கத்தையும் பிரதானப்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்பட விழாவுக்கு இயக்குநர் மிஷ்கின் தலைமையில் முன்னணித் தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகள் ஒன்று சேர்ந்ததையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.

தொடக்க விழாவின் முடிவில் பிரசன்ன விதானகேயின் ‘ஆகஸ்ட் சன்’ என்ற முழு நீளத் திரைப்படம் திரையிடப்பட்டது. நிறைவு விழாவில் தெற்காசிய அளவில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் வென்றவர்களுக்கு அறிவித்தபடி விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. சுற்றுலா அனுபவத்தையும் திரைப்படவிழா அனுபவத்தையும் இணைத்த ஊட்டி திரைப்பட விழாவை அடுத்த ஆண்டு முழுநீளத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் ஆகிய மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மாற்றுவோம். இந்த முதல் முயற்சி இத்தனை வெற்றிகரமாக அமைய, இதை தமிழக மக்களும் திரை ஆர்வலர்களும் அறியும்படி செய்ய, ஊட்டி திரைப்பட விழாவை எங்களுடன் இணைந்து முன்னெடுத்த மிடியா பார்ட்னரான ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு நன்றி.” எனத் தெரிவித்தார் இதன் காப்பாளரான இயக்குநர் மிஷ்கின்.

22CHRCJ_ASSEMBLY_ROOMS_போட்டியில் வென்றவை

விருதுக்குரிய குறும்படங்களை இயக்குநர் மிஷ்கின் ,பேராசிரியர் மற்றும் இயக்குநர் சொர்ணவேல் இருவரும் இணைந்து தேர்வு செய்தனர். ஊட்டி திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதைத் தட்டிச் சென்றது கொல்கத்தா: த ஜாய் ஆஃப் த சிட்டி (Kolkata: The Joy of the city) படத்தின் இயக்குநர் பிக்ரம் சிகார் ராய். சிறந்த இயக்கத்துக்கான விருதை, ஈரானிலிருந்து கலந்துகொண்ட ‘77 இயர்ஸ் ஆஃப் சாலிடியூட்’ என்ற குறும்படத்துக்காக ஹாசன் நஜ்மாபடி பெற்றார். சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதையும் ‘பில்டிங் நம்பர் 13’ என்ற ஈரானியக் குறும்படம் பெற்றது. அதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தவர் ஆமீர் கொலாமி.

சிறந்த நடிகருக்கான விருது ‘அஸ்லாம்’ என்ற பாகிஸ்தானிய குறும்படத்தின் பிரதானப் பாத்திரம் ஏற்ற அஸ்லாம் கான் வாஹருக்கு வழங்கப்பட்டது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை பி.எம்.வம்சி இயக்கிய ‘வலி’, முரளி திருஞானம் இயக்கிய ‘கடன்’ ஆகிய இரண்டு குறும்படங்கள் பெற்றன. இவை முறையே எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அசோகமித்திரன் ஆகியோரின் சிறுகதைகளைத் தழுவி படமாக்கப்பட்டிருந்தன.

அரிதான திரையரங்கு

தமிழக அரசாங்கம் நடத்திவரும் மிகப் பழமையான திரையரங்க அசெம்ளி ரூம்ஸ். மிகப் பழமை என்றால் சுமார் 150 ஆண்டு பழமை. ஆங்கிலேய சீமாட்டியான லேடி வெலிங்டன் 1922-ல் ரூபாய் 50 ஆயிரம் விலைகொடுத்து வாங்கி அதை ஊட்டி வாழ் மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்காக அர்ப்பணித்திருக்கிறார். நடனம், நாடகம், இசை ஆகியவற்றை நிகழ்த்தும் அரங்கமாக இருந்துவந்த அசெம்ளி ரூம்ஸ் சினிமா பிரபலமடைந்த பின் திரையரங்காக மாறியிருக்கிறது. 2011-ல் புனரமைப்புக்காக மூடப்பட்ட இது 2015-ல் திறக்கப்பட்டது. அதி நவீன டிஜிட்டல் புரஜெக்டர், டி.டி.எஸ் ஒலியமைப்பு, புதிய இருக்கைகள் எனத் தற்போது இது புத்தம்புதிதாகக் காட்சியளிக்கிறது. லேடி வெலிங்டனின் நினைவைப் போற்றும் வகையில் திரையரங்கின் முகப்புப் பகுதியில் ஒரு அருங்காட்சியகத்தை நிர்மாணித்திருக்கிறார்கள்.

தில் லேடி வெலிங்டனின் ஒளிப்படம், அசெம்ளி ரூம்ஸின் வரலாற்றை விவரிக்கும் அரிய ஒளிப்படங்கள், அந்தத் திரையரங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான படங்களைத் திரையிட்ட இரண்டு புரஜெக்டர்கள், படச்சுருள் சக்கரங்கள், அந்தத் திரையரங்குக்கு அனுப்பிவைக்கப்பட்ட மிகப் பழைய ஹாலிவுட் படப்போஸ்டர்கள் என்று கருத்தையும் கண்களைக் கவர்கின்றன. திரைப்பட விழாவில் குவிந்த படைப்பாளிகள், பார்வையாளர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்தில் நின்று செல்பி எடுத்துக்கொள்ளத் தவறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x