Last Updated : 16 Dec, 2017 10:25 AM

 

Published : 16 Dec 2017 10:25 AM
Last Updated : 16 Dec 2017 10:25 AM

நலம், நலமறிய ஆவல் 13: மலச்சிக்கல் மறைய நார்ச்சத்து

 

என் வயது 20. 5 வருடமாக மலச்சிக்கல் பிரச்சினை உள்ளது. ஆனால் மிக அதிக அளவில் பசி எடுக்கிறது. சாப்பிட சிறிது தாமதமானாலும் தலைவலி, அதிக வாயுத் தொல்லை, வயிற்றில் ஏதாவது சப்தம் ஏற்படுகிறது. மலச்சிக்கலும் வாயுத்தொல்லையும் குணமாக வழி கூறுங்கள்.

- ராம், மின்னஞ்சல்

மலச்சிக்கலைத் தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான். சரியான உணவுமுறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும், மலச்சிக்கல் ஏற்படுகிற வாய்ப்பு 90 சதவீதம் குறைந்துவிடும்.

அடுத்து, சாப்பிடும் உணவில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு தானிய உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இது தவிர வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரை போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டு: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பால் சார்ந்த பொருட்கள், காபி, தேநீர், மென்பானங்கள் போன்றவற்றைக் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும். இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளுக்கு ‘தடா’ போட வேண்டும். இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதேநேரத்தில் மலம் வெளியேறிவிடும். உங்களைப் பொறுத்த அளவில் மலச்சிக்கலை சரி செய்தாலே வாயுப் பிரச்சினையும் சரியாகிவிடும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x