Published : 10 Dec 2017 10:40 AM
Last Updated : 10 Dec 2017 10:40 AM

உனக்கு மட்டும்: எனக்கும் மழை பிடிக்கும்

 

ப்போதெல்லாம் மழையைப் பார்ப்பதற்கு முன்பே ஊரிலிருந்து செல்போனில் அழைப்பு வந்துவிடுகிறது. காலையில் ஐந்து மணிக்கு அம்மா போன் பண்ணி ஒரே அழுகை. “சென்னையே மூழ்கப் போகுதாம். நீ உடனே மாப்பிள்ளையையும் குழந்தைகளையும் அழைச்சிக்கிட்டு ஊருக்கு வந்துடு” என்று அம்மா பிடிவாதம் பிடித்தார். பேசி முடித்ததும் ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை கொட்டிக்கொண்டிருந்தது. கையை வெளியே நீட்டலாமா என்று யோசித்தபோது, அடுப்பில் பால் பொங்கி அந்த யோசனையை அணைத்தது.

காபி போட்ட பின் அதைக் கணவருக்குக் கொடுப்பதற்காகப் படுக்கையறைக்குச் சென்றேன். குளிருக்கு இதமாக மகனையும் மகளையும் அணைத்தவண்ணம் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தவரைப் பார்த்தபோது, கையில் இருக்கும் சூடான காபியை அவர் முகத்தில் ஊற்றினால் என்ன என்று தோன்றியது. பிறகு, அவரை எழுப்பி கையில் காபியைத் திணித்தேன். சலிப்புடன் காபி டம்ளரை வாங்கிக்கொண்டு தொலைக்காட்சியில் செய்தி பார்க்கச் சென்றார். படுக்கையில் சோம்பல் முறித்தது எல்லாம் திருமணத்தோடு எனக்கு முடிந்துவிட்டது. அதன் பிறகு, எனக்குச் சோம்பல் முறிப்பது என்பது காபி போடுவதுதான்.

மகளின் அருகில் படுக்கையில் படர்ந்திருந்த ஈரம் அப்போதுதான் என் கண்ணில் பட்டது. அடிக்கிற மழையில் இதை எங்கே அலசிக் காயப்போடுவது என்ற கவலையில் அவள் முதுகில் ஓங்கி அடித்தேன். பதறித் துள்ளி எழுந்தவள் ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள். பாத்ரூம் போகிற மாதிரி கனவு கண்டதாக அழுதபடி சொன்னாள். காலைச் சாப்பாடும் கனவில் சாப்பிடுடி என்று முதுகில் இன்னொரு அடி கொடுத்தேன். சின்னவனை எழுப்ப முயன்றேன். அவன் கண்ணைத் திறப்பதாக இல்லை.

திடீரென்று ஹாலில் இருந்து கணவரின் உற்சாகக் குரல் கேட்டது. ‘இன்று பள்ளிகளுக்கு விடுமுறை’ என்று கத்தினார். அதுவரை கண்ணைத் திறக்காமல் படுத்திருந்தவன் துள்ளியெழுந்து ஹாலுக்கு ஓடினான். இந்த வாண்டுகள் வீட்டில் இருக்கப்போவதை நினைத்தவுடன் எனக்குத் தலை சுற்றியது. “நீங்களும் இன்னைக்கு லீவு போட்டா என்ன?” என்று அவருக்கு மெல்லத் தூண்டில் போட்டேன். “எனக்கும் ஆசைதான். ஆனா, இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு” என்று லாவகமாக நழுவினார். இதுங்களை நாம்தான் தனியாகச் சமாளிக்க வேண்டும் என்று நொந்தபடி சமையல் அறைக்குச் சென்றேன்.

மழையால் நேற்று காய்கறி வாங்காமல் இருந்தது நினைவுக்கு வந்தது. அதை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி அவரிடம் சொன்னேன். மழை பெய்யாமல் இருந்தால் மட்டும் கடைக்குப் போய்விடுகிறவர் மாதிரி ‘வள்’ளென்று விழுந்தார்.

இட்லி ஊற்றிவிட்டு, சட்னி அரைக்கும்போது அந்த நீல கலர் சட்டை அழுக்காக இருக்கிறது என்று அவர் கத்தினார். “மழை காரணமாக நேற்று துவைக்க முடியவில்லை, இன்று ஒரு நாள் வேறு அணிந்து செல்லுங்களேன்” என்றேன். மனசாட்சியே இல்லாமல், “வீட்ல சும்மாதானே இருக்கிறே. இதைவிட உனக்கு வேற என்ன வேலை?” என்று கூப்பாடு போட்டார். காலையில் என்னிடம் அடி வாங்கிய மகள் சற்று மகிழ்ச்சியுடன் அவரைப் பார்த்தாள்.

நான் அவர் அலமாரியில் தேடி, நீல நிறத்தில் இருந்த மற்றொரு சட்டையை எடுத்துக் கொடுத்தேன். “இந்தச் சட்டை சின்னதா இருக்கும்னு உனக்குத் தெரியாதா? ஆபீஸ்ல என் சீனியர்ஸ் முன்னாடி என்னைக் கேவலப்படச் சொல்றீயா?” என்று பொரிந்து தள்ளினார். ‘வாக்கிங் போகாம நொறுக்குத் தீனிகளைப் பிள்ளைகளுக்குச் சமமாக உட்கார்ந்து தின்னுட்டு மாசத்துக்கு ஒரு சுத்து நீங்க பெருத்தா அதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்’ என நினைத்துக்கொண்டேன்.

காலை உணவை முடித்துவிட்டுக் காய்கறி கடைக்குச் செல்லலாம் என்று பார்த்தால், மழை விட்ட பாடில்லை. இதற்கு மேல் காத்திருப்பதில் பயனில்லை என்று மகனைப் பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு மகளை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். காய்கறி விலை அநியாயத்துக்கு இருந்தது. தெருவில் தண்ணீர் முட்டி உயரத்துக்கு இருந்தது. முன்பு ஒருமுறை வந்த மாதிரி இந்த முறையும் கழிவறை பொங்கி வீட்டுக்குள் கழிவுநீர் வந்துவிடுமோ என்று பயந்தபடி வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் மின்சாரம் இல்லை. கார்ட்டூன் சேனல் பார்க்க முடியாமல் இருவரும் என்னைச் சுற்றியே வந்தனர்.

திடீரென்று பெரியவள், “உனக்கு மழை பிடிக்காதாம்மா? ஏன் நீயும் மழையில் நனையாம என்னையும் நனையவிட மாட்டேங்குற?” எனக் கேட்டாள். “பெண்கள் மழையில் நனைந்தால் துணி ஈரமாகி உடம்பில் ஒட்டிக்கொண்டு ஆபாசமாகத் தெரியும்” என்றேன். “அது எப்படி ஆபாசமாகத் தெரியும்?” என்று கேட்டவளின் தலையில் ‘நங்’கென்று கொட்டினேன். பத்தாம் வகுப்பு படித்தபோது, ‘மௌனராகம்’ ரேவதி நினைப்பில் மழையில் நனைந்து வீடு திரும்பியபோது, அம்மாவும் இப்படித்தான் கொட்டினார்.

மழையை யாருக்குத்தான் பிடிக்காது? எத்தனை முறை அப்பாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்து வாய் திறந்து மழையைப் பருகி பைக்கில் சென்றிருப்பேன்! தாவணி அணிய ஆரம்பித்தவுடன் என் ஆசைகளும் விருப்பங்களும் என்னைவிட்டுப் பிரிக்கப்பட்டன. ஒருவேளை அப்பா இருந்திருந்தால், அம்மா என்னைச் சுதந்திரமாக வளர்த்திருப்பாரோ என்று நினைத்தபோது கண்கள் பனித்தன. அழுதுகொண்டிருந்த மகளை அழைத்து அவளுக்கும் சின்னவனுக்கும் ரெயின் கோட் அணிவித்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.

- ஹமிதா நஸ்ரின், சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x