Published : 27 Oct 2017 11:26 AM
Last Updated : 27 Oct 2017 11:26 AM

வேட்டையாடு விளையாடு 06: முதல் ‘கேவா’ கலர் திரைப்படம்!

 

1. முதல் ‘கேவா’ கலர் திரைப்படம்!

‘அண்டா கா கசம் அபூகா ஹுகும் திறந்திடு சீசேம்’ என்ற மறக்க முடியாத மந்திரத்தைக் குழந்தைகளுக்கு வழங்கிய சினிமா ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதை இது. மூலக்கதையில் அலிபாபா மிகவும் எளியவன். ஆனால் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் தயாரித்து இயக்கி 1956-ல் வெளியாகி வெற்றிபெற்ற இப்படத்தில் அலிபாபாவோ ஆக்ஷன் நாயகன். தென்னிந்தியாவின் முதல் கேவா கலர் திரைப்படம் இது. ‘மலைக்கள்ள’னுக்குப் பிறகு பணக்காரர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு உதவும் ராபின் ஹூட் வகை கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆரை வெற்றிகரமாக நிறுவிய வீரதீர வகைப் படம். தளபதி ஷேர் கானால் கடத்தப்பட்டு அலிபாபாவால் பின்னர் மீட்கப்படும் நாயகி மர்ஷியானாவாக பானுமதிக்கும் அபு ஹுசைன் என்ற வில்லனாக நடித்த பி.எஸ். வீரப்பாவுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்த படம். இதில் இடம்பெற்ற ‘சலாம் பாபு’ என்ற ஆட்டப் பாடலுக்கு ஆடிய வஹீதா ரஹ்மான் பின்னர் இந்தித் திரையுலகில் பெரும் புகழ்பெற்றார். இப்படத்தின் வசனகர்த்தா யார்?

2. அமெரிக்கா விதித்த அபராதம்!

கியூபா தேசத்தின் பாரம்பரிய இசையை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெர்மானிய திரைப்பட இயக்குநர் விம் வெண்டர்ஸ் எடுத்த ஆவணப்படம் ‘பியூன விஸ்டா சோஷியல் கிளப்’. அமெரிக்க இசைக்கலைஞர் ஆர். ஒய். கூடர், தனது நண்பரான விம் வெண்டர்ஸை கியூபாவுக்கு அழைத்துச் சென்று, 90 வயதுக்கு மேற்பட்ட கியூபாவின் சிறந்த இசைக்கலைஞர்களை ஒருங்கிணைத்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கினார். கியூபா தேசம் அமெரிக்காவுக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தும் அரசியல் பதற்றங்களால் நாட்டுக்கு வெளியே பயணம் செய்ய முடியாத நிலையிலிருந்த மூத்த கியூப இசைக்கலைஞர்கள், உலகப் புகழ் பெறுவதற்கும் சர்வதேச இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது இந்த ஆவணப்படம். சிறந்த ஆவணப்படத்துக்கான விருதை ஐரோப்பிய திரைப்பட விழாவில் பெற்றது. கியூபா மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைக்கு எதிராகச் செயல்பட்டதற்காக இயக்குநர் விம் வெண்டர்ஸுக்கு விதிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு?

3. ‘காந்தி’ எனும் சாதனை

ரிச்சர்ட் அட்டன்பரோவின் கனவுத் திரைப்படமான ‘காந்தி’ இந்தியாவில் 1982-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வெளியானது. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு உட்பட பத்து பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது. 20 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்னரே அட்டன்பரோவால் இப்படத்தை எடுக்க முடிந்தது. நேரு காலத்தில் தொடங்கிய முயற்சி இந்திரா காந்தி காலத்தில் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் 1980-ல் தொடங்கப்பட்டது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பென் கிங்ஸ்லி. வெள்ளைத் தாய்க்குப் பிறந்த பென் கிங்ஸ்லியின் தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். அவரது இயற்பெயர் கிருஷ்ண பண்டிட் பாஞ்சி. உலகிலேயே அதிகத் துணைநடிகர்களைக் கொண்டு படம்பிடிக்கப்பட்ட காட்சியாக காந்தியின் இறுதி ஊர்வலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. நூற்றுக்கணக்கான கிராமங்களில் துண்டு நோட்டீஸ் கொடுத்து அழைத்து வரப்பட்டுப் படம்பிடிக்கப்பட்ட இக்காட்சியில் நடித்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

4. அக்கால கேரளத்தின் வரலாறு!

பொதுமக்களிடம் நன்கொடைகள் மூலம் நிதிதிரட்டி காலம்சென்ற இயக்குநர் ஜான் ஆபிரகாம் எடுத்த மலையாளத் திரைப்படம் ‘அம்ம அறியான்’. கேரளத்தின் வயநாடு மலைக்கிராமம் ஒன்றில் இளம் நக்சலைட்டான ஹரி என்பவர் இறந்துவிடுகிறார். ஹரி இறந்த செய்தியை அவனது தாயிடம் தெரிவிக்க, ஹரியின் உடலுடன் அவரது சொந்த கிராமத்துக்கு அவரின் நண்பர்கள் பயணிப்பதுதான் கதை. போகும் வழியில் ஹரிக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வழியாக, ஒரு துடிப்பான இளம் நக்சலைட்டின் ஆளுமைச் சித்திரம் நமக்குத் தரப்படுகிறது. உண்மைச் செய்திகளும் கற்பனையும் ஆவணப்படத் தன்மையும் கொண்ட சோதனைத் திரைப்படம் இது. ஒரு தாய், மகன் பற்றிய கதை வழியாக கேரளத்தின் போராட்ட வரலாற்றுப் பின்னணியில் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், தற்கொலை செய்துகொண்ட மகன்களின் கதையாக இத்திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஜான் ஆபிரகாம் எடுத்த ஒரே தமிழ் படம் எது?

5. திரைக்கு வந்த காதல்!

மீபத்தில் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார் பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப் பச்சன். அவர் நடித்த சிறந்த திரைப்படங்களுள் ஒன்று ‘சில்சிலா’. அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரேகா, சஞ்சீவ் குமார் நடித்து யஷ் சோப்ரா இயக்கிய இத்திரைப்படம், அமிதாப் பச்சனுக்கும் ரேகாவுக்கும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலைப் பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் அமிதாப்புடன் சேர்ந்து நடித்த கடைசித் திரைப்படமும் அதுவே. ரேகாவுடன் அமிதாப் பச்சன் நடித்த கடைசித் திரைப்படமாகவும் ‘சில்சிலா’ அமைந்துவிட்டது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தாலும் திருமணத்துக்குப் பிறகு நாயகனும் நாயகியும் தங்கள் பழைய காதலைப் புதுப்பித்துக் கொள்ளும் கதையைப் பார்வையாளர்கள் ஏற்காததால் படம் தோல்வியுற்றது. தொடக்கத்தில் தோல்வியைத் தழுவினாலும் இந்தித் திரைப்படங்களில் ஒரு செவ்வியல் படமாக ‘சில்சிலா’ நிலைபெற்று விட்டது. ஜெயா பச்சன், ரேகா இருவரையும் தேர்வு செய்வதற்கு முன்பு, இவர்களுக்குப் பதிலாக யஷ் சோப்ரா வேறு இருவரைத் தேர்ந்தெடுத்திருந்ததாக கூறியிருந்தார். அந்த நடிகைகள் யார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x