Last Updated : 22 Jul, 2014 09:25 AM

 

Published : 22 Jul 2014 09:25 AM
Last Updated : 22 Jul 2014 09:25 AM

ஜேம்ஸ் லவ்லாக் பிறந்த நாள்: ஜூலை 26 பூமியின் உயிர் எங்கே இருக்கிறது?

‘வெறும் மண்ணு மாதிரி இருக்கு', 'மரம் மாதிரி நிக்காதே' என்று நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு உயிரில்லை என்று நம்புவதும் துச்சமாக மதிப்பதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தப் பூவுலகம் உயிருள்ளது. உயிரினங்கள் அனைத்தும் கூடி பூமி என்ற சிறப்பு உயிரை உருவாக்குகின்றன என்ற கருதுகோளை முன்வைத்தார் சூழலியல் அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்லாக். அது சூழலியல் பாதுகாப்புக்குப் பெரும் உத்வேகம் அளித்தது.

வழிகோலிய ஆராய்ச்சி

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பால்வெளியில் உள்ள புதிய கோள்களைத் தேடும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதற்கான கருவிகளை ஜேம்ஸ் லவ்லாக் வடிவமைத்தார். இந்த ஆராய்ச்சியின்போது பூமியின் வளிமண்டலத்தையும் மற்றக் கோள்களின் வளிமண்டலத்தையும் ஒப்பிட்டபோது, நமது உயிர் கோளம் மாறுபட்டிருப்பதை அவர் கவனித்தார். பூமி என்ற உயிர்க்கோளத்துடன் வளிமண்டலம் ஒருங்கிணைந்து ஒரு முழுமையான அமைப்பாக இருப்பதாக அவர் கருதினார்.

இதன் அடிப்படையில் 1960-களில் பூமி ஒரு சிறப்பு உயிரி (Super organism) எனும் கருதுகோளை முன்வைத்தார். மனிதனும் மற்ற அனைத்து வகை உயிரினங்களும் தாவரங்களும், பூமி என்ற இந்தச் சிறப்பு உயிரியின் பாகங்கள். சுற்றுச்சூழலும் உயிரினங்களும் பூமி என்ற அந்தச் சிறப்பு உயிரியின் பிரிக்க முடியாத அம்சங்கள், ஒன்றொடு மற்றொன்று நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்த ஓர் அமைப்புதான் பூமி என்பதே அந்தக் கருதுகோள்.

தாய் தெய்வம்

அந்தச் சிறப்பு உயிரிக்குப் பண்டைய கிரேக்கத் தொன்மத்தின் பூமிக் கடவுளான கயா (Gaia) என்ற பெயரை லவ்லாக் வைத்தார். அந்தப் படிமத்தை அவர் பெண்ணாக முன்வைத்தது கவனத்துக்கு உரியது. இந்தக் கருதுகோளை லவ்லாக்குடன் இணைந்து பெண் நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸ் உருவாக்கினார்.

மனித இனம் பேராற்றல் மிக்கது, இந்த உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மனிதக் குலம் கட்டியாள முடியும் என்பது நவீன அறிவியல் தந்த நம்பிக்கை. ஆனால், அது எவ்வளவு தூரம் உண்மை?

இயற்கையே பேராற்றல் மிக்கது. ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் அதை நிரூபித்துவருகின்றன. மேலும், கோடிக்கணக்கான ஆண்டுகளில் இயற்கை பின்னிய உயிர் வலைப்பின்னல்கள் நுணுக்கமும் நேர்த்தியும் வாய்ந்தவை. அதில் ஏற்படும் சிறு தொந்தரவும் மொத்த பூமிப் பந்தையும் குலைத்துப் போடும் என்பதுதான் லவ்லாக் கூறிய கருதுகோளின் அடிப்படை.

பூமியின் நலம் பற்றி குரல் கொடுத்துவந்த சூழலியல் ஆர்வலர்களுக்கு, லவ்லாக்கின் கருதுகோள் புதிய ஆயுதமாக மாறியது.

சமமான உரிமை

அவருக்குப் பின்னர் இந்தக் கருதுகோளை ஒட்டி பேசிய சூழலியலாளர் ஆர்னி நாய்ஸ், இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரின் ஒரு கண்ணிதான் மனித இனம். இயற்கையின் மற்றக் கண்ணிகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நிச்சயம் அது மனிதக் குலத்தையும் பாதிக்கும். அத்துடன் பூமிப் பந்தும், அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் சேர்ந்தவையே முழுமையான ஒரு சூழல் தொகுதி (Total Eco system). அதில் மனிதனுக்கு வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே சமமான உரிமை மற்ற உயிர்களுக்கும் பூமிக்கும் உள்ளது என்கிறார்.

இவர்களுடைய கருதுகோள்களின்படி, இந்த உலகம் மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கானது அல்ல, எண்ணற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு உரிமை உடையவை. வரைமுறையின்றிக் காடுகளை அழித்துக்கொண்டே இருப்பதும், நிலத்தைத் தோண்டிக்கொண்டே செல்வதும், சிற்றுயிர்கள் முதல் பேருயிர்கள்வரை அனைத்தையும் தொடர்ச்சியாக அழித்துக்கொண்டே போவது எதுவுமே முறையல்ல.

சமநிலை குலைந்த இயற்கை

இயற்கையை அதன் போக்கில் விட்டிருந்தால், அதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அதுவே சமன்படுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், மனிதக் குலம் இயற்கை மீது தொடர்ச்சியாக ஏற்படுத்திவரும் இடையூறுகளால், பூமி தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் வித்தையைத் தொலைத்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அதன் தீவிர வெளிப்பாடுதான் பெரும் பேசுபொருளாகிவிட்ட புவி வெப்பமடைதல்.

பூமி வரைமுறையின்றி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கும் புவி வெப்பமடைதல் தொடர்பான கொள்கைகள் வலுவடைவதற்கு முன்பே கயா கருதுகோளை லவ்லாக் முன்வைத்துவிட்டார். இன்றைக்குப் புவி வெப்பமடைதல் - பருவநிலை சார்ந்த மாற்றங்கள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அவரது கருதுகோள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இப்படிச் சூழலியல் சார்ந்த புதிய புரிதலைத் தந்த கருதுகோளை முன்வைத்த லவ்லாக், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றையும் பேசியிருக்கிறார். புவி வெப்பமடைதல் சார்ந்த பிரச்சினைகளுக்கு, அணுசக்தி தீர்வாக இருக்கும் என்பதே அந்தக் கருத்து. சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் இது விவாதிக்கப்பட்டாலும், கயா கொள்கைக்கு உள்ள மதிப்பு குறையவில்லை.

கயா கொள்கையை விரிவுபடுத்தும் வகை யில் 8 புத்தகங்களை லவ்லாக் எழுதியுள்ளார். கடைசியாக 2009-ல் அவர் எழுதிய ஆங்கிலப் புத்தகத் தலைப்பின் தமிழாக்கம் ‘கயாவின் மறைந்துவரும் முகம்: இறுதி எச்சரிக்கை, வாழும் வரை சந்தோஷமாக இருப்போம்'. இந்தத் தலைப்பே நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x