

கடவுளை நம்புகிறவன் எப்படி இருப்பான்?
தினந்தோறும் கோயிலுக்குத் தவறாமல் செல்வானா? செல்லலாம், செல்லாதிருக்கலாம். சமயச் சின்னங்களை முறையாக அணிந்து கொள்வானா? அணிதல் நன்றே, அவன் அணியாமலும் இருக்கக்கூடும். வீட்டில் நித்தமும் பூஜை செய்வானா? அது மிக நல்ல பழக்கம். அவன் அப்படிச் செய்யாமலும் இருக்கக்கூடும். விடாமல் பாராயணம் செய்வானா? பாராயணம் மிக நன்று. ஆனால் அவனுக்கு எந்தத் தோத்திரமும் மனப்பாடம் இல்லாமலும் இருக்கலாம்.
என்னய்யா இது? கடவுளை நம்புகிறவன் பின் எப்படித்தான் இருப்பான்?
மேலே கேட்டதெல்லாம், கடவுளை நம்புவதற்கான பயிற்சி முறைகள் என்று கொள்ளலாம். அவனுடன் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகள் என்று கருதிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை நம்புகிறவன் எப்படி இருப்பான் தெரியுமா?
அதைத்தானே ஐயா கேட்கிறேன்?
கவலை இல்லாமல் இருப்பான். ‘கவலையற்றிருத்தலே முக்தி’ என்று வாழ்ந்தும் சொல்லியும் காட்டினான் பாரதி.
ஒரு மகத்தான சக்திதான் எல்லாவற்றையும் நடத்துகிறது. பால்வீதியில் கோள்களின் இயக்கத்திலிருந்து, நம் அன்றாட வாழ்க் கையின் அத்தனை நிகழ்ச்சிகள் வரையிலும் அதுதான் இயக்குகிறது. நம் வாழ்க்கையைப் பொறுத்த மட்டில், நம் செயல்களின் விளைவுகளுக்கு ஏற்ப நம்மை அது நடத்துகிறது.
அதற்கென்று ஒரு கொள்கையோ ஒரு மனப் பான்மையோ இருப்பதாகத் தெரிய வில்லை. மனிதர்கள் மட்டுமல்லாமல், எல்லா உயிர்களின் பரிணாம வளர்ச்சிதான் உயிருக்கு நலம் என்றும், அந்த நலமே அதன் நோக்கம் என்றும் நம்மால் கருதிக்கொள்ள முடிகிறது. பத்து காசுக்குச் சூடம் கொளுத்திக் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், அத்வைத சித்தாந்தத்தில் அசையாமல் இருப்பதும் அதற்கு ஒன்றாகவே படுகிறதாய்த்தான் தோன்றுகிறது. நம்முடைய வினைகளின் விளைவுகள் ஓர் இயந்திர ரீதியில்தான் செயல்படுகின்றன என்றும், அதற்குத்தான் விதி என்று பெயரென்றும் புரிகிறது.
இல்லாமல்போகும் இருமை: நம் விதியின் போக்கும், நட்சத்திர மண்டலங் களின் எதிர்காலமும்கூட, கடவுள் என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்த மகத்தான சக்தியின் ஆளுமைக்கு உட்பட்டதே என்றும் தெரிகிறது. அது பற்றி அதற்கு ஒரு கருத்தும் இல்லை என்பதில் நமக்கு ஒரு போதாமை தோன்றுகிறது.
அதன் விளைவாக, அந்தச் சக்தியுடன் நாம் ஓர் உறவை ஏற்படுத்திக் கொண்டு, உசாவிப் பார்ப்போம் என்று முயல்கிறோம். நம்முடைய இந்த முயற்சிக்கு அது செவி சாய்க்கிறது என்பது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியிருந்தும் கூட, நம்மைப் பற்றி அதற்கு ஒரு கருத்தும் இல்லை என்பது நமக்கு உறைப்பதில்லை. பிறகு, படிப்படியாக நம் சிந்தனை பக்குவம் அடையும்போது,
ஒரு
நதியில் மலர் விழுந்தபோது, அதில்
ஜனனம் மரணம் கிடையாது! எனில்
கொள்கைகள் கூச்சல்கள் கூத்துக்கள் ஏது!
என்று பாடத் தோன்றுகிறது. நம் பார்வை இவ்விதம் விரியும்போது, இன்பம் – துன்பம், பெறுதல் – இழத்தல் போன்ற இருமைகளெல் லாம் இல்லாமல் போய்விடுகின்றன. நம்மை இதுவரைக்கும் கட்டியிருந்த கட்டொன்று தளர்ந்து நெகிழ்ந்து, நாம் எக்களிப்பு ஏதுமில்லாத ஓர் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.
இடைவெளியற்ற நிகழ்வு: இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில், இடைவெளியே இல்லாத ஒரு கூத்துதான் இந்த வாழ்க்கை என்பது புரியும்போது, அதை நம்மால் எந்த வகையிலும் மாற்ற முடியாது என்பது தெரியும்போது, நம்முடைய மனப்பான்மை என்பது மட்டும் நம் கையில்தான் இருக்கிறது என்னும் முடிவுக்கு நாம் வரும்போது, நாம் எதையும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. எதையும் பிரத்யேகமாகக் கண்டனம் செய்வதுமில்லை. எல்லாம் கடவுளாகத் தெரிகிறது. அப்படித் தெரியும்போது, எதைப்போய் சாதனை என்று கொண்டாட? எதைத்தான் வேதனை என்று கருதித் திண்டாட?
சூழ்நிலைகளின் கைதிகளாக இருந்த நாம் சூழ்நிலைகளே அண்ணாந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்து நிற்கிறோம். அப்போது நமக்கு அந்நியர்கள் யாருமில்லை. அன்னியோன்ய மானவர்கள் என்றும் எவருமில்லை. இதுநாள் வரை, நீரின் தயவில் வாழும் மீன்போல், அன்பில்தான் நாம் மிதந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராதிருந்தோம். உணர்ந்த கணத்திலிருந்து நம்மிடமிருந்து அன்பு ஊற்றாய்ப் பெருக்கெடுத்து, எல்லா உயிர்மீதும் பாயும்.
எனவே, கடவுளை நம்புகிறவன், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தா லும் கவலையே இல்லாதிருப்பான். யாரிடமும் பந்தப்படாமல். எல்லாரையும் சொந்தமாகக் காண்பான். சுருங்கச் சொன்னால், எல்லாரிடமும் அன்பாகவும் அடக்கமாகவும், நன்மை புரியத் தயார்நிலையில் இருப்பவனாகவும் விளங்குவான்.
இப்படி இருப்பவன் எவனோ அவனே கடவுளை உண்மையாக நம்புகிறவனாவான். கடவுள் என்னும் சிந்தனையே இல்லாமல் ஒருவனால் இப்படி இருக்க முடியுமானால், அவனே உண்மையில் கடவுளை நம்புகிறவனாக இருப்பான்.
உறவில்லாதவனுக்குப் பகையேது? ஜனிக்காதவன் மரிப்பது எவ்விதம்? எதிர்பார்ப்பில்லாதவனுக்கு ஏமாற்றம் ஏது? இருப்பது கடவுள் ஒன்றே என்று கண்டவனுக்குக் கவலை ஏது? ஒன்றை இரண்டாய்க் காண்பதே பாவம் என்றொரு பழ நூல் சொல்லும்.
கடவுளை உண்மையாக நம்புகிறவனுக்கு, கடவுளைக் காண வேண்டும் என்னும் ஆவல் கூட இருக்காது! ஏன் தெரியுமா? நம்புவதும், காண்பதும் வெவ்வேறு நிலைகளில்லை. அவை, அடுத்தடுத்த நிகழ்வுகளுமில்லை. விளக்கை ஏற்றிய அந்தக் கணமே, இருள் தொலைந்து போய் விடுகிறது. அது விலகுவதுமில்லை, விடைபெற்றுக் கொள்வதும் இல்லை.
அதனால்தான், ‘நம்புவதே வழி என்கிற மறைதனை நாமின்று நம்பிவிட்டோம்,’ என்றான் பாரதி. என் குருநாதர் சொல்வார், ‘ஆண்டவன் உங்கள் தரத்தைச் சோதிப்பதில்லை.’ தரத்தில் தேர்வு வைத்தால் அதில் தேறுவோர் தரணியில் உண்டோ! மிஞ்சிப் போனால், நம்முடைய நம்பிக்கை சோதனைக்கு உள்ளாகிறது. ‘எனவே, நம்முடைய நம்பிக்கை மீது நமக்கு உறுதி இருக்க வேண்டும்!’
குழந்தை, தாயை எப்படி எல்லாமுமாக நம்புகிறது? அதற்குத் தாயைத்தான் தெரியும். கணவன், தான் திருமணம் செய்துகொண்ட பெண்ணை நம்புகிறான். குழந்தை, தாய்தான் எல்லாம் என்று தெரிந்து நம்புகிறது. கணவன், எனக்கு எல்லாம் மனைவிதான் என்று நம்பித் தெரிந்து கொள்கிறான்.
நம்பிக்கையும், தெரிந்துகொள்ளலும் ஒன்றே என்று புரியும்போது, கண்முன் தெரிவது கடவுள் மட்டுமே!
(தரிசனம் நிகழும்)
- tavenkateswaran@gmail.com