Last Updated : 26 Nov, 2017 11:34 AM

 

Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

கண்ணீரும் புன்னகையும்: டூடுல் மூலை - முதல் பெண் மருத்துவர்

காலனிய இந்தியாவில் மருத்துவம் படித்து சேவை புரிந்த முதல் பெண் மருத்துவர் ருக்மாபாயின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடுல் நவம்பர் 22-ம் தேதி அவரை சிறப்பித்துள்ளது. 1864-ல் மும்பையில் பிறந்த ருக்மாபாய், திருமணத்துக்குப் பெண்களின் ஒப்புதல் அவசியம் என்ற அடிப்படை உரிமையை அக்காலத்தில் நிலைநாட்டியவர். எட்டு வயதில் தந்தையை இழந்த நிலையில் குழந்தைத் திருமண முறையில் 11 வயது தாதாஜி பிகாஜியுடன் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவருடைய தாய், மருத்துவரும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் நிறுவன உறுப்பினருமான சாகாராம் அர்ஜுனை மறுமணம் செய்துகொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் படிப்பதற்காக பிறந்த வீட்டிலேயே வாழ்ந்த ருக்மாபாய், தன்னுடன் வாழ வர வேண்டும் என்று தாதாஜி பிகாஜி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் பெண்ணின் விருப்பமில்லாமல் திருமண பந்தத்தில் தொடர வற்புறுத்தக் கூடாது என்று ருக்மாபாய் தரப்பில் வாதிடப்பட்டது. தாதாஜி vs ருக்மாபாய் என்ற பெயரில் புகழ்பெற்ற இந்த வழக்கு இந்தியாவிலும் பிரிட்டனிலும் பெரும் விவாதத்தையும் அக்காலத்தில ஏற்படுத்தியது. வழக்கின் முடிவில் ருக்மாபாய் தன் கணவருடன் வாழ வேண்டும் அல்லது ஆறு மாதம் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், விக்டோரியா ராணியிடம் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அத்தீர்ப்பு மறுக்கப்பட்டு திருமண ஒப்புதல் வயதுச் சட்டம், 1891-ல் இயற்றப்பட்டது.

சட்டரீதியாக விவாகரத்து பெற்ற ருக்மாபாய் இங்கிலாந்து சென்று லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் மருத்துவம் பயின்றார். தாய்நாடு திரும்பி சூரத், ராஜ்கோட், மும்பை நகரங்களில் 35 ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்தார்.

சாலைக் குற்றங்களைத் தடுக்க மகளிர் படை

டெல்லியில் பெண்களுக்கு எதிராகச் சாலைகளில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மகளிர் மோட்டார் சைக்கிள் படை அமைக்கப்படவுள்ளது. 600 மோட்டார் சைக்கிள்கள் கொண்ட இந்தப் படையில் ஒவ்வொரு பைக்கிலும் இரண்டு மகளிர் காவலர்கள் இருப்பார்கள். மேற்கத்திய நாடுகளில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கும் திட்டம் இது. சட்டையில் பொருத்தப்பட்ட கேமராக்கள், மிளகு ஸ்ப்ரே, மின்சாரத்தைப் பாய்ச்சும் துப்பாக்கிகள் ஆகியவற்றை இந்தப் படையினர் வைத்திருப்பார்கள். குறுகிய தெருக்களில் பெண்களிடம் நடக்கும் சங்கிலிப் பறிப்பு போன்ற குற்றங்களைத் தடுக்கவும் உடனடியாகக் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும் இந்தப் படை உதவிகரமாக இருக்கும் என்று நம்பலாம்.

 

இந்தியாவில் 51 சதவீதப் பெண்களுக்கு ரத்தசோகை

பிள்ளைபெறும் வயதில் (15-49) இருக்கும் இந்தியப் பெண்களில் 51 சதவீதத்தினர் ரத்தத்தில் இரும்புச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை தெரிவிக்கிறது. பிரசவ மரணங்களில் 20 சதவீதம் ரத்த சோகையால் ஏற்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ரத்தசோகை தொடர்பாக அரசு எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் இரும்பு, போலிக் அமில மாத்திரைகளை மூன்று கர்ப்பிணிகளில் ஒருவரே எடுத்துக்கொள்ளும் நிலைதான் இன்னமும் உள்ளது. சத்து மாத்திரைகளை அரசு கொடுப்பதோடு வறுமை, ஊட்டச்சத்தின்மை ஆகியவை குறித்து அரசுகள் கவனம் செலுத்தவேண்டுமென்று ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறியுள்ளது. தாய்மார்களையும் பெண் குழந்தைகளையும் ரத்த சோகையிலிருந்து காப்பாற்ற வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிலும் கவனம் செலுத்தக் கோரும் இந்த அறிக்கை பெண்களின் ஊட்டத் தேவை குறித்த விழிப்புணர்வை இந்தியக் குடும்பங்களில் உருவாக்க வேண்டுமென்றும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x