Last Updated : 26 Nov, 2017 11:34 AM

 

Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

இல்லம் சங்கீதம் 11: உறவை நிர்மாணிக்கும் உணர்வுகள்

நேற்றுப் பாலையாய் விரிந்திருந்து

இன்று குறுகிப்போன நாள்களில்

நீ எண்ணியிருக்க முடியாது

நான் உன் வழித்துணையாய்

வருவேனென்று.

-பிரம்மராஜன்

கோமதி திகைத்துப் போயிருந்தார். சரவணனும் விஜியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். அவற்றில் பலவும் சிறுபிள்ளைத்தனமானவை. ஆனால், சுற்றிச்சுற்றி அவை ஒன்றையே திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டின. அது வெளியில் பகிர முடியாத, தம்பதியருக்கு இடையிலான இணக்கம் கெட்டிருந்தது தொடர்பானது. இரண்டொரு நாள் உடனிருந்து அவர்களை அறிய முற்பட்டார் கோமதி.

எதிரெதிர் துருவங்களில் தம்பதி

சரவணன் சிறுவயதிலேயே தாயை இழந்தவன். குடிகாரத் தந்தையின் வளர்ப்பு அவனுக்குப் போதிய அரவணைப்பைத் தரவில்லை. குடும்பச் சூழல் காரணமாகப் பள்ளிப் படிப்புடன் வேலைக்குச் சென்றான். இதனால் பொருளாதார வளர்ச்சி மட்டுமே தன்னை மீட்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டான். அந்த உத்வேகத்தில் உழைத்துத் தற்போது நகரின் மத்தியில் வாகன உதிரி பாகங்களுக்கான கடை ஒன்றை வைத்திருக்கிறான்.

சரவணனுக்கு மாறாக விஜியின் குடும்பம் உணர்வுபூர்வமாக அவளை வளர்த்திருந்தது. சதா பேச்சும் விளையாட்டும் நல்லது கெட்டதுகளில் அரவணைக்கும் தோள்களுமாக விஜியின் வளர்ப்பு அமைந்திருந்தது. பாலிடெக்னிக் முடித்திருந்த விஜிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தபோது, ‘படிப்பு போதாது’ என கோமதி பரிந்துரைத்த சரவணனை, விஜியின் பெற்றோர் நிராகரித்தனர். ஆனால், அன்புக்கு ஏங்கும் சரவணனை விஜிக்குப் பிடித்திருந்ததால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோமதி அத்தை ஆதரவுடன் மணந்துகொண்டாள். தங்கள் பேச்சை மீறியதாகக் கூறி, விஜியுடனான உறவைப் பெற்றோர் துண்டித்துக்கொண்டனர். இதனால் அவளின் உணர்வுபூர்வமான தேவை இப்போது கணவனிடம் முழுவதுமாகத் திரும்பியது. ஆனால், தாய்மையின் வழியாகவே வாய்க்கப்பெறும் உணர்வுகள், சரவணனுக்கு இயல்பிலேயே இல்லை என்பதை அவள் அறியாதிருந்தாள்.

படுக்கையறையில் பற்றிய திரி

திருமண வாழ்வின் தொடக்கக் காலம் நன்றாகவே சென்றது. சில வருடங்களுக்குப் பிறகு உயர்கல்வி பெறாத சரவணன் தொழில் போட்டிகளுக்குத் தடுமாறியபோது, குடும்பம் பொருளாதாரச் சுணக்கம் கண்டது. மனைவி தன்னைவிடப் படித்தவள் என்ற தாழ்வு மனப்பான்மையை மறைத்திருந்த சரவணன் ‘நானும் வேலைக்குப் போகிறேன்’ என்று விஜி விரும்பியபோது பதறித் தடுத்தான். குடும்ப அமைப்பில் ஆணுக்கான அதிகார பீடம் சரிந்துவிடுமோ என்ற அச்சம் வந்ததில், அதை அடிக்கடி உறுதிப்படுத்தும் உபாயங்களைத் தேட ஆரம்பித்தான். அதில் ஒன்றாக மனைவியுடன் சேர்ந்திருக்கும் தனித்துவப் பொழுதுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றான். ஆனால், கணவனின் நாள் முழுக்கத் தொடரும் பாராமுகமும் நெருங்கியிருக்கும் சிறுபொழுதிலும் ஆணவத்தை நிறுவும் அலட்சியப் போக்கும் விஜியை வெகுவாய்ச் சீண்டின. படுக்கையறைக்குள் பற்றிய திரியில் வெளியிலும் தொட்டதற்கெல்லாம் பிரச்சினைகள் வெடித்தன. அவற்றில் ஒன்றாக இல்லறத்தில் தனது சுயம் நிராகரிக்கப்படுவதாக விஜி குமுற ஆரம்பித்தாள்.

உறவைத் தீர்மானிக்கும் மூன்று அம்சங்கள்

பிரச்சினை முழுவதுமாகப் பிடிபடாவிட்டாலும் ஓரளவு ஊகித்துவிட்டார் கோமதி. இருவரிடமும் பேசிப் பார்த்தார். தங்கள் பொதுவான நலம்விரும்பியின் சொல்லுக்குத் தம்பதி காதுகொடுக்க வேண்டியதாயிற்று. ஆலோசகர் உதவியையும் நாடினார்கள். “கணவன் - மனைவி இடையிலான உறவையும் உணர்வுகளையும் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய அம்சங்கள் கவனத்துக்கு உரியவை. முதலாவது அன்பு, பாசம், காதல், விருப்பம், பரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய உணர்வுபூர்வத் தேவைகள். அடுத்ததாக வீடு வாசல், வருமானம், வாகனம், அந்தஸ்து ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகத் தேவைகள். மூன்றாவது உயிரின் தவிர்க்கவியலாத பாலுணர்வு மற்றும் அது சார்ந்த மற்ற தேவைகள்” என்று சொல்லும் மருத்துவ உளவியல் நிபுணர் டி.ரன்தீப் ராஜ்குமார், அவற்றைக் குறித்து மேலும் விளக்கினார்.

“நமது வளர்ப்பு முறையின் அடிப்படையில் பெண்ணைப் பொறுத்தவரை முதலாவதான உணர்வுபூர்வமான தேவைகள் முக்கியமாகின்றன. ஆணைப் பொறுத்தவரை அடுத்த இரண்டும் முக்கியமானவை. இவை பொதுவானது என்றபோதிலும், தனிப்பட்ட நபரைப் பொறுத்தோ சூழலின் நெருக்கடியிலோ இவற்றின் முன்னுரிமைகள் மாறக்கூடும். உதாரணத்துக்குத் தனது இணை உணர்வுபூர்வமான தேவைகளைச் சரிவரப் பூர்த்தி செய்யாதபோது, அடுத்த இரண்டில் தனது தேவைகளை மற்றவர் அடையாளம் காண்பார்கள். குடும்பத்தை முன்னிறுத்தி பொருள் தேவையில் கணவனை மனைவி நெருக்கும்போதோ, பாலியல்ரீதியில் பாராமுகம் என மனைவி குமையும்போதோ அவரது உண்மையான பிரச்சினை உணர்வுபூர்வமான முதல் வகைத் தேவைகள் நிராகரிக்கப்பட்டதிலேயே தொடங்கி இருக்கும்” என்றார் ரன்தீப் ராஜ்குமார்.

 

ஒன்றிணைத்த பொதுப் பிரச்சினை

சரவணன் - விஜிக்கு தங்கள் பிரச்சினையின் ஆதாரம் ஒருவழியாகப் பிடிபடத் தொடங்கியது. தாயின் அரவணைப்புக்கு வாய்ப்பில்லாத சரவணனிடம் முதல் வகையான உணர்வுபூர்வமான அம்சங்கள் வறண்டிருந்தன. கணவனிடம் அவை கிடைக்கப்பெறாத விஜி, அடுத்த கட்டத் தேவைகளில் அவற்றை அடையாளம் காண முயன்றாள். அதற்கு வாய்ப்பின்றி தொழிலின் நசிவு சரவணனைப் பொருளாதாரத்தில் திண்டாடச் செய்தது. மேலும் விஜி வேலைக்குச் சென்றால் குடும்பத்தில் தனது நிலை சரியுமோ என்று பதற்றம் அடைந்த சரவணன், விஜியுடனான நெருக்கத்தைக் குறைத்துக்கொண்டான். அவனது ஆணவத்தில் அவர்களின் தாம்பத்தியம் அடிபட்டது.

ஒருவழியாக அந்தத் தம்பதி தங்கள் தடுமாற்றங்களை முற்றிலுமாக உணர்ந்தபோது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. குடும்பத்தின் அமைதி குன்றியதால் சரவணன் கவனம் கலைந்திருந்ததைப் பயன்படுத்தி போட்டியாளர்கள் ஜெயித்திருந்தனர். சரவணன் தொழில்ரீதியாகத் தலை குப்புற விழும் நிலையிலிருந்தான். குழந்தைகளை நினைத்து விஜி வெலவெலத்துப் போனாள்.

உண்மையான அன்புகொண்ட தம்பதி தமக்குள் அடித்துக்கொண்டாலும், பொதுவான பிரச்சினை தலையெடுத்தால் ஒன்றுசேர்ந்துகொள்வார்கள். நெருக்கடியான சூழல் தம்பதியைச் சுலபமாக நெருங்கச் செய்ததில், தங்களின் பிரச்சினைகளை மேலும் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவியது. ஆனால், சரவணன் மீண்டெழ அடுத்து என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. கோமதி விடைபெறும்போது சில யோசனைகளை முன்வைத்தார். விஜி, சரவணனுக்கு அந்த யோசனைகள் பிடித்திருந்தன.

 

மீண்ட சந்தோஷம்

ஒரு வருட இடைவெளியில் கோமதி மீண்டும் அவர்களைச் சந்தித்தபோது, தனது யோசனைகள் செயல்பாட்டுக்கு வந்திருந்ததைப் பார்த்து மகிழ்ந்தார். ஒருவழியாகப் போட்டிகளை முறியடித்து சரவணன் தனது தொழிலைத் திடமாக மேம்படுத்தியிருந்தான். விரிவுபடுத்திய கடையில் அவனது இருக்கையில் விஜி அமர்ந்திருந்தாள். தொழிற்படிப்பு முடித்திருந்த மனைவியை மூளையாக முன்வைத்து சரவணன் ஓடியாடி சம்பாதித்ததில் சொந்தமாக வீடு, வாகனம் என்று செழித்திருந்தனர். சரவணன் ஆணவம் தொலைத்து மனைவியை மதித்ததில், வீடு - தொழில் இரண்டையும் அவள் மீட்டிருந்தாள். செல்வச் செழிப்பும் சந்தோஷ வனப்புமாக விஜியும் பூரிப்பைப் பெற்றிருந்தாள். அவள் முகத்தை வழக்கம்போல் கூர்ந்து படித்த கோமதி, தனது விரல்களால் வருடி திருஷ்டி கழித்தார்.

பொதுவான தாம்பத்தியம் சார்ந்து தம்பதியர் இடையே இணக்கம் கெடாதிருக்கவும் அவை எப்போதும் செழித்திருக்கவும் நிபுணர் வழங்கும் இதரக் குறிப்புகளை வரும் வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x