Published : 19 Nov 2017 11:35 AM
Last Updated : 19 Nov 2017 11:35 AM

மனைவியே மந்திரி: தாயும் தோழியுமானவர் - இயக்குநர் அறிவழகன்

ன்னை ஒரு குழந்தையைப் போல் கவனிப்பது முதல் தோழனைப் போல் கலாய்ப்பதுவரை என் வாழ்க்கை நிறைவுபெற உறுதுணையாக இருப்பவர் என் காதல் மனைவி ஹீரா.

நான் இயக்கிய ‘ஈரம்’ படத்தில் நடித்ததன் மூலம் நட்பாகி, காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். முதலில் அவரது வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவழியாகச் சம்மதித்துத் திருப்பதியில் எளிமையாகத் திருமணம் நடந்தது. பெரிய அளவில் வரவேற்பு நடத்தவில்லை என்ற கவலையையெல்லாம் தாண்டி, இருவருமே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டும் என உறுதியேற்றோம். அதை மட்டுமே ஆழமாக நம்புகிறோம்.

மனைவி என்பதைத் தாண்டி அவருக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்று யோசிப்பேன். அவருக்கு நடிப்புக் கலையில் எப்போதுமே ஆர்வம். திருமணத்துக்குப் பிறகு அது முடியவில்லை. அவருடைய பெற்றோர் துணிக்கடை வைத்திருப்பதால் மட்டுமல்லாமல் பொதுவாகவே டிசைனிங், கலர் மேட்சிங் உள்ளிட்ட விஷயங்களில் நல்ல தெளிவு இருந்ததால் எனது சமீபத்திய இரண்டு படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பங்குவகித்தார்.

ஓவியம், வீட்டை அலங்கரிப்பது, உடை என அனைத்திலுமே அவரது எண்ணம் என்னைவிட ஒரு படி மேலேதான் இருக்கும். அதனால் அவரே எல்லாவற்றையும் அழகாக வடிவமைத்துவிடுவார். எதுவுமே குறைசொல்ல முடியாத அளவுக்கு இருக்கும்.

ஊடல் நிமித்தம்

சண்டை, சச்சரவுகள் அனைவரது வாழ்க்கையிலுமே இருக்கும். அப்படியான சண்டைகள்தாம் எங்களுக்குள் புரிதலை ஆழப்படுத்தின. குழந்தை, குடும்பம், வேலைகளுக்கு நேரத்தைத் தானாக ஒதுக்குவது ஆகியவற்றைப் போலவே எங்கள் வாழ்க்கையை நிறைவாக்குவதற்கும் புரிதலுக்கும் போதுமான அளவில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்று நினைத்தேன். இதுவே எங்கள் நெருக்கத்துக்குக் காரணம் என நம்புகிறேன்.

அன்புப் பரிமாற்றம்

திருமண நாளைவிட, ஹீராவின் பிறந்தநாளையே முக்கியமாகக் கருதுவேன். அந்த நாளில் அவரை எந்த அளவுக்கு ஆச்சரியப்படுத்தலாம் என்பதிலேயே குறியாக இருப்பேன். நான் ஆச்சரியப்படுத்துவேன் என்பது தெரிந்தும் எந்தவிதத்தில் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார். பதிலுக்கு என் பிறந்தநாளுக்கு எப்போதும் வீடு, அலுவலகம் என அவர் பக்கத்திலேயே இருப்பதால் அவரால் என்னை ஆச்சரியப்படுத்த முடியவில்லை என்கிற ஆதங்கம் அவருக்கு உண்டு.

இரவு ஒன்பது மணியைத் தாண்டி வீட்டுக்கு வரத் தாமதமானால், தொலைபேசியில் அழைத்துத் தொந்தரவு செய்ய மாட்டார். நேரமாகிவிட்டதே என்று நானே அழைத்து மாட்டிக்கொள்வேன். பணிக்கு இடையே ஐந்து நிமிட இடைவேளையில் பேசும்போது, நீண்ட நேரம் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே அவரிடம் இருக்கும். இயன்றவரை அதைப் பூர்த்திசெய்ய முயல்வேன்.

புன்னகையே பெரிய ஊக்கம்

நாங்கள் எங்கே சென்றாலும் கூடியவரை ஒரே நிறத்தில்தான் உடையணிவோம். அதில் இருவருக்கும் தனி மகிழ்ச்சி. எப்போதுமே அவரிடம் இருந்து ஒரு புன்னகையை எதிர்பார்ப்பேன். சின்ன சண்டை வந்தால்கூட இருவரும் உடனுக்குடன் மன்னிப்பு கேட்டுவிடுவோம். இருவராலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாமல் இருக்க முடியாது.

சிக்கன வழிகாட்டி

என்னோடு வெளியே செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார். ஆனால், எதையுமே கட்டாயப்படுத்த மாட்டார். எனது வேலை கெடுமோ என்று யோசிப்பார். துணிக்கடைக்குச் சென்று பிடித்த இரண்டு சுடிதார் எடுத்துவிடுவார். இரண்டில் எது பெஸ்ட் என்று கேட்பார். இரண்டையும் எடுத்துக்கொள் என்றால், அதன் விலையைப் பார்த்து அதற்கான தரம், டிசைன் போன்றவற்றைச் சரி பார்த்துதான் எடுப்பார். ஓர் உடை தனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது என்று எடுத்துவிட மாட்டார். இதிலேயே அவர் எந்த அளவுக்குச் சிக்கனமாகக் குடும்பத்தை வழிநடத்துவார் என்பது புரிந்துவிடும்.

அனைத்தும் அறிந்தவர்

திருமணத்துக்குப் பிறகு எனக்குப் பொறுப்புணர்வு அதிகமாகிவிட்டதாக நினைக்கிறேன். என் வாழ்க்கையில் அவர் வந்தவுடன் நிறையவே மாறியிருக்கிறேன். நீண்ட இடைவெளி விட்டுப் படம் இயக்குவதாகப் பலர் என்னிடம் குறைபட்டுக்கொள்வார்கள். ஆனால், அந்த இடைவெளியில் எத்தனை கதைகள் எழுதி வைத்து, முயற்சி செய்து, தகுந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன் என்பது என் மனைவிக்கு மட்டுமே தெரியும். அதற்கான சந்தோஷம், துக்கம், வலி அனைத்துமே தெரிந்தவர் என் மனைவி. மனரீதியில் எனக்கு மிகப் பெரிய ஆறுதல் ஹீரா. என் படங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று நான் யோசிக்கிறேனோ அதே எண்ண ஓட்டம்தான் அவருக்கும்.

அன்பின் வெளிப்பாடு

அம்மா - மனைவி இருவரையும் பொருத்திப் பார்க்க முடியாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், நிறைய இடங்களில் இருவருக்குமே ஒத்துப்போகும். காலையில் எத்தனை மணிக்கு அலுவலகம் கிளம்பினாலும் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். அவர் எந்தவொரு நல்ல விஷயம் செய்தாலும் உடனடியாகப் பாராட்டிவிடுவேன். அவருக்கு எனது பாராட்டு சினிமா வசனங்கள் மாதிரி தோன்றலாம். ஹீராவைப் பொறுத்தவரை எதையுமே செயலில் எதிர்பார்ப்பார். அன்பு செலுத்துவதிலும் அப்படித்தான். ‘ஐ லவ் யூ’ என்பது அவருக்குச் சொல் அல்ல, செயல்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x