

குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது எளிதல்ல. அதற்கு நெகிழ்வான மனம் வேண்டும். பெரியவர்களான பின் நாம் இழந்துவிடும் குழந்தை மனத்தை மறுபடியும் கொண்டுவருவது ஓரளவு குழந்தைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவும். குழந்தையின் முதல் ஆறு வருடங்களில் ஏற்படும் வளர்ச்சியும் மேம்பாடும் முக்கியமானவை என்கிறார்கள் கல்வியியலாளர்கள். இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகளை மழலையர் பள்ளிக்கு அனுப்பிவிடவைக்கிறது சமகாலச் சூழல்.
அந்தச் சிறு வயதுக் குழந்தைகளுக்குக் கற்பித்தல் சாதாரண வேலை அல்ல. அதிக உழைப்பைக் கோரும் பணி அது. அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க குழந்தைகளின் உளவியல் தெரிய வேண்டும், எப்படிச் சொல்லிக்கொடுத்தால் அவர்கள் உள்வாங்கிக்கொள்வார்கள் என்பதை உணர வேண்டும், கல்வியை விருப்பத்துக்குரியதாக குழந்தைகள் எண்ணும் அளவுக்கான சூழலை உருவாக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் அசாத்திய பொறுமை அவசியம்.
இது தொடர்பான முறையான பயிற்சி இருந்தால் சிறு வயதுக் குழந்தைகளுக்குப் பாடமெடுக்கும் ஆசிரியர்களின் சுமை பெருமளவில் குறைந்துவிடும். இந்தப் பயிற்சியை அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கல்வி முறை மான்டிசோரி எனப்படுகிறது.
இரண்டரை வயது முதல் ஆறு வயது கொண்ட குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு மான்டிசோரி கல்வி முறை, தத்துவம் ஆகியவற்றைத் தெளிவாக உணர்த்தும் நோக்கத்தில் இயங்கிவருகிறது சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள சென்டர் ஃபார் மான்டிசோரி டிரெயினிங். இந்த மான்டிசோரி பயிற்சி மையத்தைக் கல்வி அறக்கட்டளை என்னும் நிறுவனம் நடத்திவருகிறது. இங்கு வழங்கப்படும் பயிற்சியின் மொத்த கால அளவு 600 மணி நேரங்கள். வேலையில் உள்ள ஆசிரியர்களும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். சென்னை தவிர ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களிலும் இந்த வருடம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
1988-ம் ஆண்டு முதலே இந்த மையம் செயல்பட்டுவருகிறது என்கிறார் இதன் இயக்குநர் உமா சங்கர். 18 வயது பூர்த்தியான யாரும் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தங்களது பயிற்சி மையத்தில் மான்டிசோரி உபகரணங்களை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படுவதுடன் அதைப் பயன்படுத்தும் பயிற்சியும் தரப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் உமா சங்கர்.
சிறு வயதுக் குழந்தைகளுக்கு வெறும் எண்ணையும் எழுத்தையும் மட்டும் கற்றுக் கொடுப்பது போதாது, குழந்தைகளை உற்றுக் கவனித்து அவர்களது விருப்பு வெறுப்புகளை ஆராய வேண்டும். அவர்கள் வழியில் சென்று அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டும். கல்வியைப் புகட்டாமல் அவர்கள் சுவாசிப்பது போல், விளையாடுவது போல் இயல்பாகக் கல்வி பெறத்தக்க சூழலை உருவாக்க வேண்டும்.
“இந்த அடிப்படைகளை இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு வழங்குவதே எங்களது முக்கியமான வேலை” என்று சொல்லும் உமா சங்கர், ஆசிரியர் என்பவர் கற்றுக்கொடுப்பவராக மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும், குழந்தைகளைச் சுய மேம்பாடு அடையும் விதத்தில் பயிற்றுவிப்பராகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
இம்மையத்தில் பயிற்சி மேற்கொண்ட மாணவ மாணவிகள் மூலம் தமிழ்நாட்டில் மான்டிசோரி கல்விச் சூழலைக் கொண்ட 25 தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இம்மையத்தில் இதுவரை எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுள்ளனர், அவர்களில் 1OO ஆசிரியர்கள் சென்னை பள்ளிகளில் மழலையர் பிரிவில் உள்ள மான்டிசோரி வகுப்பறையில் பணிபுரிகிறார்கள். பயிற்சி முடித்தவர்களுக்கு இந்தியன் மான்டிசோரி சென்டர் வழங்கும் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இம்மையம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு http://www.cmtcindia.org/index.html என்னும் இணையதளத்தைப் பார்க்கலாம்.