Published : 25 Apr 2014 11:09 am

Updated : 25 Apr 2014 11:43 am

 

Published : 25 Apr 2014 11:09 AM
Last Updated : 25 Apr 2014 11:43 AM

மக்கள் கவிஞருக்கு: முதல் ஆவணம்

தேனாறும் பாயுது

செங்கதிரும் சாயுது

ஆனாலும் மக்கள்

வயிறு காயுது

சுதந்திர இந்தியா கொடுத்த கனவுகளுக்கும், சாதாரண மக்களின் யதார்த்தத்துக்கும் இடையிலான முரண்பாட்டைச் சொல்லும் இந்தப் பாடல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தினுடையது. அவர் பாடியபோது இருந்த சூழ்நிலை இன்னும் மாறவேயில்லை.

தமிழ் எழுத்துலகத்திலும், கலை உலகத்திலும் பெரும் சாதனைகளை நிகழ்த்திய கலைஞர்கள் பலரது வாழ்வை அவர்களது இளமையிலேயே பறித்துவிட்டது காலம். காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார், பாரதி, புதுமைப்பித்தன் என்று அகாலத்தில் இறந்த கலைஞர்களின் பட்டியல் நீளமானது. அப்படிப்பட்ட கலைஞர்களில் ஒருவர்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செங்கபடுத்தான்காடு கிராமத்தில் 1930-ம் ஆண்டு பிறந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தனது 29 வயதுக்குள் பாட்டாளி மக்களின் கவிஞன் என்ற புகழைப் பெற்றவர். திரைத்துறையில் ஐந்தாறு ஆண்டு காலமே இருந்த அவர் எழுதிய படங்களின் எண்ணிக்கை 57. தமிழ் சமூகத்திற்குப் பங்காற்றிய எத்தனையோ சாதனையாளர்கள் குறைந்தபட்சப் புகைப்பட ஆவணங்கள் கூட இல்லாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் குறித்து ‘மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்’ என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தை ஏழு ஆண்டுகள் உழைத்து, தனியொரு நபராக முடித்துள்ளார் இயக்குனர் பு. சாரோன்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறு வயது நண்பரான ஓவியர் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டையாரின் சமகாலத்தவர்களைத் தேடிப் போய்ப் பார்த்து அசைபோடுவதாக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டையார் தனது 20 வயதுக்குள் 18 தொழில்களில் ஈடுபட்டவர். அக்காலகட்டத்தில் தஞ்சைப் பகுதியில் கொடூரமாக இருந்த பெருநிலப் பண்ணையார்களின் ஒடுக்குமுறைகள் அவரை பாதித்துள்ளன. பெரியார், பாரதிதாசன், அண்ணா ஆகியோரது மேடைகளில் அவர்கள் பேசுவதற்கு முன்பு மக்கள் பாடல்களைப் பாடும் சிறுவனாகவே சிறு வயதில் அறியப்பட்டிருக்கிறார். அந்த அனுபவங்களே அவரது பாடல்களாகப் பின்பு வடிவம் பெற்றன. பாட்டாளி மக்களின் களைப்பையும் வேதனைகளையும் தீர்த்த பாடல்கள் அவருடையவை. அவரது பாடல்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கவல்லவை. உழைப்பு, தன்னம்பிக்கை இவற்றையே மூலதனமாகக் கொண்ட தமிழ் சமூகத்திற்கு இப்படம் வாழ்க்கைப் பாடமாக அமையும்” என்கிறார் இயக்குநர் பு.சாரோன்.

இந்த ஆவணப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறு வயதுப் புகைப்படங்கள், வயலில் நிற்கும் புகைப்படம், திருமணப் பத்திரிகை, பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டி, அவர் பாடல் எழுதிய படங்களின் சுவரொட்டிகள், அவரது கையெழுத்துப் பிரதிகள் எனத் தேடித் தேடிச் சேகரித்துள்ளார் இயக்குநர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமகாலத்தவர்களான மாயாண்டி பாரதி, எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், ஆர். நல்லகண்ணு போன்ற பத்துக்கும் மேற்பட்ட ஆளுமைகளும் அவரது கிராமத்து நண்பர்களும் இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளனர். இரண்டு ஆண்டுகள் மட்டுமே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடன் இல்வாழ்வு நடத்திய கௌரவம்மாளின் நேர்காணலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

“என் முதலமைச்சர் நாற்காலியின் மூன்று கால்கள் எதுவென்று எனக்குத் தெரியாது. நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்” என்று எம்ஜிஆர் மனம் நெகிழ்ந்து ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தினார்.

மக்கள் கவிஞரை முதல்முறையாக முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கும் இந்த மாற்றுத்திரைப்பதிவை விரைவில் வெளியிட இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. பட்டுக்கோட்டையாரின் நினைவை இதுபோன்ற, முயற்சிகள் வழியாகவேனும் தமிழ்ச் சமூகம் சேமித்து வைக்கட்டும்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


சுத்ந்திர இந்தியாதமிழ்பட்க்கோட்டை கல்யாண சுந்தரம்இயக்குநர் சாரோன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author