Last Updated : 28 Nov, 2017 12:19 PM

 

Published : 28 Nov 2017 12:19 PM
Last Updated : 28 Nov 2017 12:19 PM

வேலை வரும் வேளை 06: கேம்பிரிட்ஜ் வேறு மாதிரி!

நான் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவருகிறேன். எனக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் படிக்க ஆசை. முழுமையான விவரம் தாருங்கள்.

- கலையரசி

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 1209-ல் தொடங்கப்பட்டது. மிகப் பழமையான பல்கலைக்கழகம் மட்டுமின்றி உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று இது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 31 உறுப்பு கல்லூரிகள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் வழி பயின்றவர்களில் 98 நபர்கள் இன்றுவரை பல்வேறு துறைகளில் தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். மேலும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களில் 15 பேர் இப்பல்கலைக்கழக மாணவர்களே.

இங்கு வழங்கப்படும் இளநிலைப் படிப்புகள் அனைத்தும் நான்கு ஆண்டுப் படிப்புகள். முதுகலைப் படிப்புகள் பொதுவாக ஒன்பது மாதங்கள் முதல் 13 மாதங்கள்வரை வழங்கப்படும். அவை M.Phil. படிப்பாக ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை வழங்கப்படும். அதிலும், M.Phil. Advanced Studies, M.Phil. Research Studies என வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நீங்கள் முனைவர் பட்டமான Ph.D. க்கும் விண்ணப்பிக்கலாம்.

இங்குள்ள 31 உறுப்புக் கல்லூரிகளில், 4 கல்லூரிகளில் 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 பெண்கள் கல்லூரிகளும் உள்ளன. பெண்கள் இதர கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம். இந்தியாபோல மூன்று வருடப் பட்டப்படிப்பும் அதன் பிறகு இரண்டாண்டு மேற்படிப்புகள் கேம்பிரிட்ஜில் இல்லை.

விண்ணப்பதாரர்கள் applicant portal வழியாகப் பல்கலைக்கழகத்திலும் உறுப்புக் கல்லூரிகளிலும் வழங்கப்படும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நபர் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ஒன்றுக்கு 50 பவுண்டுகள் ஆகும். விண்ணப்பித்த பிறகு ஏதேனும் மனமாற்றம் ஏற்பட்டு பாடப்பிரிவுகளை மாற்ற வேண்டுமெனில் விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் மறுவிண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஒரு சில நாடுகளைச் சேர்ந்தவர்ளுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கிறது. விண்ணப்பங்கள் ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

முக்கியமாக விண்ணப்பதாரர்களுக்குப் போதிய ஆங்கில அறிவு உள்ளதா எனச் சோதிக்கப்படுகிறது. இதற்கென விண்ணப்பதாரர்களின் நாடுகள் குரூப் A, குரூப் B எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா குரூப் B-ல் இடம்பெறுவதால் ELAT என்கிற English Language Assessment Test எழுத வேண்டும். இத்தேர்வு பல்வேறு நாடுகளில் உள்ள Assessment Language Centre வாயிலாக நடத்தப்படுகிறது.

திறந்த விண்ணப்பமாக அனுப்பும் பட்சத்தில் ஒரு நபரின் விண்ணப்பம் ஐந்து பல்கலைக்கழகங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். ஆனால், கல்லூரிகளைத் தெரிவுசெய்து தனித்தனியே விண்ணப்பிப்பது நல்லது. உங்களைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே முதுகலை பட்டப்படிப்பைத் தொடர்வது சரியான முடிவெனத் தோன்றுகிறது. அதன் பின்னர் எம்.ஃபில். படிக்க உங்களுடைய பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு கேம்பிரிட்ஜில் விண்ணப்பிக்கலாம்.

உங்களுக்காக ஒரு ‘tailpiece’ (கதையில் இறுதியில் சேர்க்கப்படும் இணைப்பு). இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களில் பைரன், டெனிசன், மில்ட்டன், ராபர்ட் ஃபிராஸ்ட் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். நமது தமிழகத்தின் கணித மேதை ராமானுஜம், பொருளாதார அறிஞரும் நோபல் பரிசுப் புகழுக்கும் சொந்தக்காரருமான அமர்த்திய சென்கூட கேம்பிரிட்ஜின் ட்ரினிட்டி கல்லூரியின் முன்னாள் மாணவர்களே. அது மட்டுமின்றிப் பரிணாம வளர்ச்சி விதியின் தந்தை டார்வின்கூட இங்குப் படித்தவரே. இவர்களின் வரிசையில் நீங்களும் இடம்பெற வாழ்த்துகள்!

‘வேலை வரும் வேளை’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர் இரா. நடராஜன். வாசகர்கள் தங்களுடைய படிப்பு மற்றும் பணி வாழ்க்கை தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ் நாளிதழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002,
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x