Published : 03 Nov 2017 09:57 AM
Last Updated : 03 Nov 2017 09:57 AM

மாற்றுக் களம்: மனித உணர்வுகளின் நுட்பமான பிரதிபலிப்பு

இந்தியாவின் பழமையான சிறைச்சாலைகளில் ஒன்றான புனேயில் உள்ள எரவாடா மத்தியச் சிறைச்சாலை குறித்த ஆவணப்படம் ‘ஒய்.சி.பி. 1997’ (YCP 1997). பெயரைக் கேட்டதுமே, சிறைக் கைதிகள் படும்பாட்டை விவரிக்கும் படம் என எண்ணத் தோன்றும். ஆனால், பூங்காவனம் போலக் காட்சி அளிக்கும் அச்சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற சிறைவாசிகளில் சில கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்த ஆவணப்படம்.

திருந்துவதற்கான வாய்ப்பை மறுக்கும் மரணதண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் விதமாக, தன் கண் முன்னே மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஓர் இளைஞரின் அவலத்தை ‘இன்று எனக்குத் தூக்குத் தண்டனை’ என்ற கவிதையாக வடித்து வாசிக்கிறார் சக இளம் சிறைவாசி. அவர் கவிதையின் இறுதி வரிகளின்போது, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் அறையின் கதவு படாரென்று திறக்கிறது. அக்காட்சி பார்வையாளர்களை அதிரவைக்கிறது. அதே வேளையில் வெளி உலகத்தைக் காட்டிலும் சிறைவாசமானது மன அமைதியும் நிம்மதியும் தந்திருப்பதாகவும் சிலர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

குற்றவாளிகள் குறித்த பொதுப்புத்தியை ஒவ்வொரு காட்சியும் உலுக்குகிறது. 1997-லேயே எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் இன்று பரோலை நீட்டிக்க அரசு அனுமதிக்காத நிலையில் மீண்டும் வேலூர் சிறைக்குத் திரும்பியிருக்கும் பேரறிவாளனையும் அவருக்காகப் போராடிவரும் அவருடைய தாய் அற்புதம்மாளையும் இந்தப் படம் நமக்கு நினைவூட்டுகிறது.

இன்னொரு ஆவணப்படம் ‘மை ஃபேமிளி’ (‘My Family’). கோயம்புத்தூரில் ஒரே குடும்பமாக வாழும் மூன்று தலைமுறையைச் சேர்ந்த திருநங்கைகளின் வாழ்வுலகைக் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இப்படம். பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகளின் அன்றாட வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதன் மூலம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிம்பங்களை உடைக்க முனைகிறது இந்தப் படம். தாய்ப் பாசம், சகோதரிப் பாசம், அக்கம்பக்கத்தார் நேசம், காதல்-கல்யாணம் எனத் திருநங்கைகளின் உலகில் இழையோடும் பல உறவுகளுக்கு இடையிலான உணர்வுகளைப் பின்தொடர்கிறது கேமரா.

மறுபுறம், ஆண் உடலில் பூட்டப்பட்ட பெண் என வளரிளம்பருவத்தில் தன்னை உணரத் தொடங்கும் ஒரு திருநங்கை எத்தகைய உடல், மனரீதியான போராட்டத்தை எதிர்கொள்கிறார் என்பதைத் தீவிரமான கதைசொல்லல் மூலமாக வெளிப்படுத்துகிறார் நாடக இயக்குநர் பிரிதம் சக்கரவர்த்தி. தான் பெண்ணாக மாறத் துடித்த முதல் தருணம் முதல் தாயம்மாவிடம் ‘நிர்வாணம்’ (பால்மாற்று சிகிச்சை) செய்துகொண்டதுவரை நாடகமாக நடித்துக்காட்டும்போது திருநங்கைகள் குறித்த புரிதலும் அவர்கள் மீதான மதிப்பும் கூடுகின்றன.

1994-ல் எடுக்கப்பட்ட, ‘Identity: The Construction of Selfhood’ என்கிற ஆவணப்படம், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த பற்பசை, சிவப்பழகு க்ரீம் ஆகியவற்றின் விளம்பரப் படங்களைத் திரையிட்டு, ஆண், பெண், இனம், மதம் ஆகியவற்றில் நிலவும் அதிகாரப் படிநிலைகளைச் சுவாரசியமான வடிவில் கேள்விக்குள்ளாக்குகிறது.

இணக்கமான இயக்குநர்கள்

இப்படி, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலாகப் பதிவுசெய்வது, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஓங்கி ஒலிப்பது, சமூக நீதிக்கான கேள்விகளை அழுத்தமாக எழுப்புவது என அத்தனையும் செய்கின்றன, அஞ்சலி மாண்டய்ரோ மற்றும் கே.பி. ஜெய்சங்கர் தம்பதி எடுத்த ஆவணப்படங்கள். ஆனால், கறுப்பு/வெள்ளையாக இரட்டை எதிர்நிலையில், பிரச்சார தொனியில் ஆவணப்படங்களை அவர்கள் முன்வைப்பதில்லை. மனித உணர்வுகளின் அடுக்குகளை, தனிமனித அடையாளங்களை அவர்களுடைய ஆவணப்படங்கள் நுட்பமாக அலசுகின்றன. காலங்காலமாக வரையறுக்கப்பட்ட சமூகச் சட்டகங்களுக்குள் ஊடுருவி அவற்றை நுணுக்கமாக அசைத்துப்பார்க்கின்றன. மறுபக்கம் திரைப்பட இயக்கம் கடந்த வாரம் சென்னையில் நடத்திய மூன்று நாள் திரைப்பட விழாவில் அஞ்சலி மாண்டய்ரோவும் கே.பி. ஜெய்சங்கரும் கலந்துகொண்டு தங்களுடைய படங்களைத் திரையிட்டு, பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார்கள்.

இரண்டு தமிழ் படங்கள் உட்பட 40-த்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கும் இந்த ஆதர்சத் தம்பதி 32 தேசிய, சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். கோவாவைச் சேர்ந்த அஞ்சலியையும் கேரளத்தைச் சேர்ந்த ஜெய்சங்கரையும் இணைத்தது ஆவணப்படம்தான்.

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸில் அஞ்சலி சமூகவியல் பேராசிரியர். ஜெய்சங்கர் தத்துவப் பேராசிரியர். அங்கே பணிபுரிந்தபடியே ஆவணப்படங்களை இணக்கமாக இணைந்து இயக்கிவருகிறார்கள். “சக பணியாளர்களாகத் தோழமையோடு பழகிவந்த எங்களை இணையர்களாக மாற்றியது திரைப்படம் மீதான காதல்தான். அதிலும் அடிப்படையில் சினிமா அல்லாது வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்களாக நாங்கள் இருப்பதாலேயே எங்களுடைய சிந்தனையும் அணுகுமுறையும் வேறுபடும். இதனால், எங்களுடைய பார்வையும் புரிதலும் ஒவ்வொரு விஷயத்தையும் பலதரப்பட்ட கோணத்தில் அணுக உதவியது” என்கிறார்கள் அஞ்சலியும் ஜெய்சங்கரும்.

இவர்கள் எழுதி கடந்த ஆண்டு வெளிவந்த, ‘A Fly in the Curry’ புத்தகமானது தனிநபர்கள் தன்னிச்சையாக ஆவணப்படங்களை இந்தியாவில் உருவாக்குவதன் பின்னணியை விரிவாக அலசுகிறது. குறிப்பாக இந்திய ஆவணப்பட உலகில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பையும் தாக்கத்தையும் விவாதிக்கிறது. “மற்றவர்களின் பிரச்சினையைத் தட்டையான பரிமாணத்தில் பதிவுசெய்துவந்த ஆவணப்பட வரலாற்றில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பெண்களே. குறிப்பாக, பாலினச் சிக்கல்களின் அடர்த்தியைத் திரையில் கொண்டுவரப் பெண்ணிய இயக்கங்களும் பெண்ணியவாதிகளும் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்” என்கிறார் அஞ்சலி.

5CH_Anjalijai2

நீக்கச் சொல்வது அராஜகம்!

கருத்துச் சுதந்திரத்தை முன்வைத்துத் தணிக்கைக்கு எதிரான பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவரும் இவர்கள் தற்போது தமிழகத்தில் எதிரொலிக்கும் ‘மெர்சல்’ படத்துக்கான அரசியல் எதிர்ப்பைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

“மெர்சல் படம் போலவே தணிக்கை குழு அனுமதி பெற்று வெளியாகிப் பின்பு சிவசேனா அமைப்பினரால் கடுமையாக எதிர்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘ஃபையர்’. இப்படி, ஏதோ ஒரு தரப்பினரின் மனம் புண்படுவதாகச் சொல்லி ஒரு படைப்பைச் சிதைக்க முயற்சிப்பதும், அதில் சில பகுதிகளை நீக்கச் சொல்லுவதும் அராஜகம். திரைப்படத் துறையினர், ஓவியர்கள், எழுத்தாளர்கள் போன்ற கலைஞர்களின் படைப்புகள்தான் இத்தகைய அரசியல் சதிகளுக்கு முதலாவதாக பலிகொடுக்கப்படுகின்றன. எழுத்தாளர் பெருமாள்முருகன், தோழர் திவ்யப் பாரதி உட்பட பலர் தொடர்ந்து இப்படியாகத் தாக்கப்பட்டுவருவது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அஞ்சலி.

ஒருங்கிணைய வேண்டும்!

பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கே இந்த நிலைமை என்றால் அரசியல் அத்துமீறலை தீவிரமாகவும் பகிரங்கமாகவும் எதிர்க்கும் ஆவணப்படங்களின் நிலை என்ன?, “ஆமாம் மிகப் பெரிய சிக்கல்தான். எங்களுடைய படமான நாதா (‘Naata’), ராகேஷ் ஷர்மாவின் ‘ஃபைனல் சொல்யூஷன்’ உட்பட பல ஆவணப்படங்கள் 2004-ல் தடைசெய்யப்பட்டன. தன்னிச்சையாக ஆங்காங்கே செயல்படும் ஆவணப்பட இயக்குநர்கள் ஒருங்கிணைய வேண்டிய அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தோம். அந்த ஆண்டே ‘விகல்ப்’ என்கிற அமைப்பைத் தொடங்கி ஆவணப்படங்களைத் தணிக்கை செய்வதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில் அந்த ஆண்டு தடை செய்யப்பட்ட படங்கள் அனைத்தையும் திரையிட்டோம்.

சொல்லப்போனால் அரசு, வியாபாரச் சந்தை மட்டுமல்ல சமூக அடக்குமுறையும் சில நேரங்களில் கலைஞர்களின் உரிமைக் குரலை நெறிக்கிறது. அந்தவகையில்தான் பெண் உடல் அரசியலையும், ஆணாதிக்க வக்கிரத்தையும் தங்களுடைய கவிதைகளில் புனைந்த சல்மா, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்ற தமிழ் பெண் கவிஞர்கள் மிகப் பெரிய எதிர்ப்பைச் சந்தித்தார்கள். அவர்களுடைய படைப்புகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவு செய்யவே ‘ஷீ ரைட்ஸ்’ (’She Writes’) படத்தை எடுத்தோம். இப்படியாக, சமூக-அரசியல்-பண்பாட்டு தளங்களோடு தொடர்ந்து ஊடாடுவோம்” என்கிறார்கள் தீவிரமான பிரச்சினைகளை அடர்ந்த காட்சி மொழியில் ஆவணப்படுத்தும் இந்தப் படைப்புப் போராளிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x