Published : 28 Nov 2017 12:21 PM
Last Updated : 28 Nov 2017 12:21 PM

வரலாறு தந்த வார்த்தை 11: ‘பக்’குன்னு கீதா..?

தி

ரைப்படத் தயாரிப்பு நிர்வாகி அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதுதான் இப்போதைய பரபரப்புச் செய்தி. அதற்குக் காரணம் கந்துவட்டிதான் என்று சொல்லப்படுகிறது.

சினிமா உலகில் கேட்டால், ‘அதற்கு நான் காரணம் அல்ல, அவர்தான் காரணம்’, ‘அவர் காரணம் அல்ல, இன்னொருவர்தான் காரணம்’ என்று ஒருவரை ஒருவர் கையைக் காட்டி, பொறுப்பைத் தட்டிக் கழித்துவருகிறார்கள். கந்துவட்டியால் நெல்லையில் ஒரு குடும்பம் தீக்குளித்தபோதும், இப்படித்தான் பொறுப்பு தட்டிக் கழிக்கப்பட்டது.

இப்படி, ஒரு பொறுப்பை, தான் ஏற்றுக்கொள்ளாது, அதை இன்னொருவரின் மீது சுமத்துவதை ஆங்கிலத்தில் ‘Passing the buck’ என்கிறார்கள். ‘The buck stops here’ என்றும் சொல்லப்படுவதுண்டு. என்.டி.டி.வி.யின் பிரபல செய்தியாளர் பர்கா தத்தின் விவாத நிகழ்ச்சி ஒன்றின் பெயர் ‘தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்’ என்பது. இப்போது அந்த நிகழ்ச்சி ‘ஸ்டாப்’பாகிவிட்டது!

‘வாழ்க்கை ஒரு சீட்டாட்டம், ராணி பாடு கொண்டாட்டம்’ என்று தேவா இசையில் கானா பாடல் வரி ஒன்று உண்டு. சினிமாவும் ஒரு வகையில் சீட்டாட்டம்தான். எல்லாம் பொருந்திவந்தால் ஜாக்பாட் கிடைக்கும். இல்லையென்றால், தலையில் துண்டைப் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதை இங்கு சொல்வதற்குக் காரணம், மேற்கண்ட சொற்றொடரும் ‘போக்கர்’ எனும் சீட்டாட்ட விளையாட்டிலிருந்து தோன்றியதுதான்.

போக்கர் விளையாட்டில் ஈடுபடுபவர்களை ‘டீலர்’ என்று அழைக்கிறார்கள். ஒரு டீலர் விளையாடி முடித்ததும், தன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு டீலருக்கு ‘இப்போ நீதான் விளையாடணும்’ என்பதை நினைவூட்டுவதற்கு, அவரின் கையில் ஏதேனும் ஒரு பொருளைத் திணிப்பார்கள். இந்தப் பொருளை ஆங்கிலத்தில் ‘பக் (buck)’ என்கிறார்கள். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அந்தப் பொருளைக் கடத்துவதை போக்கர் விளையாட்டில் ‘பாஸ்ஸிங் தி பக்’, ‘தி பக் ஸ்டாப்ஸ் ஹியர்’ என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். காலப்போக்கில், ஒருவர் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல், இன்னொருவருக்குக் கடத்துவதற்கு மேற்கண்ட சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டன.

நிற்க, வாழ்க்கையில் மட்டுமா ‘பணம்’ தன் கைவரிசையைக் காட்டுகிறது? மேற்கண்ட சொற்றொடரிலும் அது தன் வேலையைக் காட்டுகிறது பாருங்கள். ‘பக்’ என்றால், தற்போதைய ஆங்கில மொழியில், பணம் என்றும் அர்த்தமாகும்!

பணமே இல்லேன்னாலும், ரொம்ப அதிகமா பணம் வந்தாலும் ஒரு மனுஷனுக்கு ‘பக்’குன்னுதான் இருக்கும், இல்லையா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x