Last Updated : 12 Nov, 2017 01:14 PM

 

Published : 12 Nov 2017 01:14 PM
Last Updated : 12 Nov 2017 01:14 PM

இல்லம் சங்கீதம் 09: ருசிகரமான ரசவாதம்

நீயும் நானும் வெகுநேரம்

மனம்விட்டுப் பேசிச் சிரித்தாலும்

பிரியும்பொழுது சில நொடிகள்

மௌனம்கொள்வது ஏன் தோழி

- சினேகன்

முகநூல் கணக்கை உயிர்ப்பித்துத் தனது நட்பு வட்டத்தில் இருக்கும் இளைஞர்களை ஆராய ஆரம்பித்த தீபாவுக்குத் தன்னை நினைத்தபோது சிரிப்புதான் வந்தது. “ஒருத்தனும் தேற மாட்டான். நீதான் அவ்வையார் மாதிரி ஆகப்போற...” முதுகுக்குப் பின்னே வழக்கம்போல் அண்ணன் சங்கர் முணுமுணுத்துக்கொண்டே கடந்தான்.

அவன் கவலை அவனுக்கு. அடுத்த வைகாசிக்குள் அவனது கல்யாண தசை காலாவதியாகிறது என்று அம்மா அங்கலாய்க்கிறார். ஆனால், தங்கைக்கு அப்புறம்தான் அண்ணனுக்கு என்று அப்பா கறாராக இருக்கிறார். அண்ணனுக்கு எனக் கிராமத்தில் தயாராக இருக்கிறாள் அத்தை பெண். அமெரிக்க நிறுவனத்துக்காகக் கணினியில் நிரல்கள் எழுதும் அண்ணனுக்கு எப்படி அந்தக் கிராமத்துப் பெண்ணைப் பிடித்தது என்பது தீபாவுக்குப் புரியவில்லை. “நான் அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பலை தீபா. உறவோ நட்போ ஏற்கெனவே நமக்கு நல்லா தெரிஞ்ச வட்டத்திலேர்ந்து வாழ்க்கைத் துணை அமையறது பல வகையிலேயும் வாழ்க்கையைச் சுலபமாக்குது” என்று ஆரம்பித்து வியாக்கியானம் பேசுவான். கிராமத்திலிருந்து வீடு வரும் பார்சலில் தீபாவின் வருங்கால அண்ணி சங்கருக்குக் கொடுத்தனுப்பும் எள்ளுருண்டை, விளாம்பழங்களைப் பார்த்து, “கட்டிக்கப் போறவனுக்கு விளாம்பழம் கொடுக்குறது உலகத்திலேயே இவ ஒருத்தியாதான் இருக்கும்” என்று அம்மா சலிப்பார். அப்பாவோ நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார். மூவரையும் விளங்காது பார்த்து விழிபிதுங்கும் தீபாவை ‘நந்தி’ என்று விளிக்கிறான் சங்கர். “சாரிண்ணா. யுனிவர்சிட்டி ஸ்காலர்ஷிப்புக்கு இப்போதான் எழுதியிருக்கேன். ரெண்டு வருஷத்துக்கு அப்புறம்தான் மத்ததைப் பத்தி என்னால யோசிக்க முடியும்” என்று பதிலுக்கு அவளும் அண்ணனை வெறுப்பேற்றுவாள்.

வரன் தேடும் படலம்

வாழ்க்கைத் துணைத் தேடலில் அண்ணனின் சுலபமான அணுகுமுறை தீபாவுக்குப் பிடித்திருந்தது. ஏனோ இந்த ‘கண்டதும் காதல்’ மீது அவளுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரம் தனது விருப்பத்துக்கு இடம் கொடுக்காத ஏற்பாட்டுத் திருமணத்திலும் அவளுக்கு முழு விருப்பமில்லை. யார் பரிந்துரைத்தாலும் முதலில் தன் முடிவு, பிறகுதான் பெரியவர்கள் தலையீடு என்பதில் திட்டவட்டமாக இருந்தாள். தீபாவின் பக்குவத்தின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை இருந்தாலும் அண்ணன்தான் ஆலாய்ப் பறந்தான். தீபாவின் ஆண் நண்பர்களின் பின்னணியைத் துழாவி ‘இவன் சரியாக இருப்பான் பாரேன்’ என்பான். பின்னர் தனது நண்பர்களின் வட்டத்திலிருந்து ஒவ்வொருவராக சிபாரிசு செய்தான். அதன் பின்னர் அந்த நண்பர்களின் வாயிலாக என இப்படிச் சங்கிலித் தொடராக வரன் தேட ஆரம்பித்தான். அப்படிச் சேர்ந்த வரன்களில் பலரும் தொடக்க ஆர்வத்தில் தீபாவின் முகநூல் நட்பில் சேர்ந்திருந்தனர். ஒரு வருட இடைவெளியில் அந்தப் பட்டியல் சற்றே நீண்டிருந்தது. அந்த இளைஞர்களில் பலருக்கும் அடுத்தடுத்து திருமணம் ஆகியிருந்ததை அவர்களின் முகநூல் பக்கங்கள் வாயிலாக அறிய முடிந்தது.

பலித்தது உள்ளுணர்வு

தீபா அலுப்படைந்தாள். நன்கு அறிந்த நட்பு வட்டத்திலிருந்து சலித்தெடுத்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் அவளது வியூகம் பொய்த்துவிடுமோ என்று அச்சப்பட்டாள். நண்பர்கள், தன்னுடைய அண்ணனின் நண்பர்களில் அவளுக்கானவன் ஒளிந்திருப்பதாக உள்ளுணர்வு சொல்லிவந்ததை அவள் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. தீபாவுக்கு எங்கோ பொறி தட்டியது. பரபரவென மறுபடியும் முகநூல் பக்கங்களை ஓடவிட்டாள். அவளுக்கு வரனாகப் பரிசீலனைக்கு ஆளான இளைஞர்கள் மத்தியில் சீரான ஒரு ஒற்றுமை இழையோடியதைக் கண்டுபிடித்தாள். தீபாவை நன்கறிந்தவரால் மட்டுமே இந்த வரன்களை சிபாரிசு செய்திருக்க முடியும். சங்கரிடம் விசாரித்தபோது அவனது பள்ளிப் பிராயம் தொட்டு நண்பனாக இருக்கும் ஸ்ரீதரின் பெயரைச் சொன்னான்.

படபடத்தது பட்டாம்பூச்சி

ஸ்ரீதர் அமைதியும் புன்னகையுமாக வீட்டுக்கு வருவான். அம்மா செய்யும் நொறுக்குத் தீனிகளைச் சிலாகித்துவிட்டு, அண்ணனிடம் பேசிவிட்டு, நேரமிருந்தால் தீபாவுடன் செஸ் விளையாடிவிட்டுச் செல்வான். கல்லூரியில் செஸ் சாம்பியனான ஸ்ரீதரைப் பலமுறை தோற்கடித்த பெருமை தீபாவுக்கு உண்டு. “பிசினஸ் வகையில் ஊரார் அவனுக்கு அத்துப்படி என்பதால் வரன் விவரங்களை அவனிடம் கேட்டிருந்தேன். தேடிப் பிடிச்சதை எல்லாம் பக்காவா மெயில் பண்றானே. ஒருவேளை உன்கிட்ட செஸ்ல தோத்த மாதிரி இதுலயும் சொதப்பிட்டானோ..” என்றபடி அண்ணனால் அர்ச்சிக்கப்படும் அந்த ஸ்ரீதரின் முகம் தீபாவுக்குள் நிழலாடியது. அண்ணனின் நண்பர்கள் பலரையும் ‘அண்ணா’ என்று அழைத்ததும் ஸ்ரீதரை மட்டும் பெயரிட்டு அழைத்ததும், ஒவ்வொரு விளையாட்டிலும் அவளுக்காக அவன் விட்டுக்கொடுத்ததும் என இருவருக்கும் இடையிலான இணக்கம் இன்னொரு கோணத்தில் தனித்துவமானது என்பது தீபாவுக்கு மெல்ல விளங்கியது. வயிற்றினுள் பட்டாம்பூச்சி படபடப்பை உணர்ந்த தீபா, “ஸ்ரீதர் தோக்கல அண்ணா” என்றாள்.

நட்பு காதலாகும்போது

நட்பைத் தாண்டி நேசம் அரும்பத் தொடங்கும்போது அவரிடம் பேசாமல் இருப்பதோ அவரைப் பற்றிப் பிறரிடம் பேசாமல் இருப்பதோ முடியாது. எங்கே போனாலும் எதைச் செய்தாலும் ஏதோவொரு புள்ளியில் அந்த இணையுடன் தொடர்புபடுத்திக்கொள்வார்கள். சந்திக்கவும் பேசவும் தனியாகக் காரணம் எதுவும் இருக்காது. சிரமப்பட்டு அந்தக் காரணங்களை உருவாக்குவார்கள்.

நட்பில் பொசசிவ்னெஸ் அதிகம் இருக்காது. அது அடிக்கடி தலைகாட்டினால் அவர்கள் நட்பைத் தாண்டி நேசத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார்கள் என்று அர்த்தம். போன் அழைப்பை எடுக்கவில்லை என்றாலோ வாட்ஸ் அப்பில் ப்ளூ டிக் தாமதமானாலோ குழப்பம் மேலிடும். தவிர்க்கும் முயற்சியா எனத் தவிப்புடன் ஆராய்வார்கள்.

நட்பைத் தாண்டுபவர்கள் தங்கள் அந்தரங்க ரகசியங்கள், விருப்பங்கள் எனப் பலவற்றையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். அதன்வழியே ‘நீ எனக்கு முக்கியம், நெருக்கமான உறவும்கூட’ என்பதை மறைமுகமாகத் தெரிவிப்பார்கள். அவரின் எதிர்காலத் திட்டங்கள் அனைத்திலும் நீங்கள் இருப்பீர்கள். அல்லது உங்களுக்காக அந்தத் திட்டங்கள் தீட்டப்படும்.

ஆரோக்கியமான உறவைப் பேணுவதில் அக்கறைகொள்வார்கள். சின்ன சண்டைகளைத் தவிர்ப்பார்கள். செல்லச் சண்டைகளை அதிகம் இழுப்பார்கள். உண்மையான சண்டை வந்தால் அது தொடரக் கூடாதே என்கிற கவலை ஆட்கொண்டுவிடும். அன்றைய தினம் மன அழுத்தத்துடன் கழியும். தன் பக்கத்துத் தவறுகள் பெரிதாகத் தெரியும். அவர் மீது பச்சாதாபம் கூடும். அனைத்துச் சிரமங்களையும் அவரின் சின்னப் புன்னகையோ ஒரு குறுந்தகவலோ துடைத்துப்போடும்.

பிரச்சினை வந்தால் அவர் நினைவு எழும். அவர் அருகிலிருந்தால் பிரச்சினை தீரும் என்று தோன்றும். தோளில் சாய்ந்துகொள்வதற்காகவே ஒன்றுமில்லாத பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பார்கள்.

நண்பர்களுக்குள் எதேச்சையாய் பட்டுக்கொள்வதைப் பொருட்படுத்தாது கடந்து விடுவார்கள். நேசம் அரும்பியவர்கள் தொடுகையைத் தவிர்ப்பார்கள். ஆனால் நாள் சென்றதும் அறியாதவர்கள் போல விபத்தாக அடிக்கடி பட்டுக்கொள்ள விரும்புவார்கள். வாய்மொழியும் உடல்மொழியும் வெவ்வேறாக மாறும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x