Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

பெண்ணுக்கு நீதி 11: வாடகைத்தாய் முறை வரமா, சாபமா?

 

கு

ழந்தை என்பது பூலோக சொர்க்கம். சமுதாயக் கனவுகளின் கருவறை. குழலினும் யாழினும் இனிதானது, குழந்தையின் மழலை மொழி. அப்படியொரு குரல் குடும்பத்தில் கேட்காது என்றால், அது இல்லற இன்பத்துக்கு முற்றுப்புள்ளியாக மாறிவிடும் ஒரு நிலை உண்டாகிவிட்டது. இது விஞ்ஞான வளர்ச்சியும் வேலைப் பளுவும் மாசுபட்ட சூழலும் மாறிவரும் உணவுக் கலாச்சாரமும் சத்தமின்றிச் செய்துவரும் சதியென்றே சொல்லத் தோன்றுகின்றது. குழந்தையின்மை என்கிற கோளாறு நகரம், கிராமம், ஏழை, பணக்காரர் என்ற எவ்விதப் பேதமும் இன்றி இளம் தம்பதியரின் இல்லற வாழ்க்கையைப் பாதிப்பது மிகப் பெரிய சோகம்.

குறை தீர்க்கும் வழிமுறை

பிள்ளை இல்லாக் குறை தீர்க்க வந்த வழிமுறைகளில் தத்தெடுப்புக்கு அடுத்ததாக வாடகைத்தாய் மூலம் வாரிசை பெறுவது அதிகரித்துவருகிறது. அது வரமா, சாபமா என்ற குழப்பமும் தொடர்ந்துவருகிறது.

சவீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 35; சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் ஊழியர். கைநிறையச் சம்பளம் என்ற பெருமிதத்தைக் குழந்தை இல்லா வருத்தம் காலிசெய்தது. அரச மரம் சுற்றி அலுத்துப்போனார். தங்கத்தொட்டில் கட்டுவதாக ஆசை காட்டியும் கடவுளின் கருணை கிட்டவில்லை. அவருடைய கணவர் சதீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவப் பரிசோதனையில் பாஸ்மார்க் வாங்கி வெளியே வந்தார். சவீதாவைப் பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் இயற்கை முறையில் கருத்தரித்து அவர் பிரசவிக்க வாய்ப்பில்லை என்றும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முயலலாம் என்றும் ஆலோசனை சொன்னார்.

சதீஷும் சவீதாவும் நகரத்தின் பிரபல மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். விரைவிலேயே சதீஷின் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டன. பின்பு, அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களது வாடகைத் தாய் பட்டியலில் இருந்து ஒரு ஆரோக்கியமான இளம் பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். வாடகைத் தாயாக செயல்பட விரும்பிய அவர் பெயர் பத்மஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 25- 30க்குள் இருக்கலாம். அவருக்கு ஏற்கெனவே, ஆரோக்கியமான குழந்தை ஒன்றைப் பிரசவித்த அனுபவம் இருந்தது. எந்த வகைத் தொற்றுநோயும் இல்லை என்று சான்று பெற்றிருந்தார். வாடகைத் தாயாகச் செயல்படுவதால் உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, மனரீதியாக ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஆலோசனையும் பெற்றிருந்தார். மருத்துவமனை பின்பற்றும் பொதுவான விதிகளுக்குள் வந்துவிட்ட அவர் மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டிருந்த சிறப்பு தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

பெற்றுக் கொடுத்தவளின் வலி

ஒரு நல்ல நாளில் பத்மஜாவின் கருப்பையில் சதீஷிடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்தணுக்கள் செலுத்தப்பட்டன. அதன் பிறகு, மருத்துவமனை நிர்வாகம் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துகள் கொண்ட பிரத்யேக உணவை அவருக்குக் தரத் தொடங்கியது. அன்று முதல் பத்மஜாவுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் சதீஷும் சவீதாவும் செலுத்த வேண்டும். வாரம் ஒருமுறை சதீஷும் சவீதாவும் தங்கள் உறவுக்காரப் பெண்ணைப் பார்க்கப்போவதுபோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று பத்மஜாவுக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொண்டுபோய்க் கொடுத்து அவருடன் உண்டு மகிழ்ந்து வீடு திரும்பினார்கள்.

அதேநேரம் பத்மஜாவுடைய கணவரும் குழந்தையும்கூட மருத்துவமனைக்கு வந்து அவளோடு அளவளாவிவிட்டுச் சென்றார்கள். அவளை வீட்டுக்கு அழைத்துப்போக முடியவில்லையே என்ற லேசான வருத்தத்துடன் வீடு திரும்பினார்கள். இந்தக் குழந்தையை வெற்றிகரமாகப் பெற்றெடுத்து சதீஷ், சவீதாவின் கையில் ஒப்படைக்கும்வரை அவள் வீட்டுக்குப் போகக் கூடாது என்பது மருத்துவமனை நிர்வாகத்தின் கட்டளை. பத்மஜா தன் ஒரே ஆண் குழந்தையின் மேற்படிப்புக்குத் தேவையான பணத்தைச் சேகரிக்கவே வாடகைத் தாயானார். அதை அவரது கணவர் உணர்ந்திருந்தார். அதற்குப் பின் உரிய காலத்தில் பத்மஜா அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த சவீதாவுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.

ஆனால், பத்மஜாவுக்கு அந்த ‘கொழுக் மொழுக்’ குழந்தையைப் பிரிய மனமில்லை. விஞ்ஞானத்தால் வெல்லப்படாத தாய்மை, அங்கே புதிதாய்ப் பிறந்த குழந்தையின் புன்னகை மூலம் கண் சிமிட்டியது.

உறுதிப்படுத்தப்படாத உரிமை

மேலே கண்ட நிகழ்வில் குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் மேற்கொண்ட முறையானது, பாரம்பரியமான வாடகைத் தாய் முறை என்றழைக்கப்படுகிறது. இதில் சதீஷின் விந்தணுக்கள் குழந்தையின் கருத்தரிப்பில் பயன்படுத்தப்பட்டதால் அவர் குழந்தையின் மரபியல்ரீதியான தந்தை என்றாலும், சவீதாவின் கருமுட்டைகள் பயன்படுத்தப்படாமல் வாடகைத் தாய் பத்மஜாவின் கருமுட்டைகள் பயன்படுத்தப்பட்டு கரு உருவாக்கம் நடந்ததால், குழந்தையின் பெற்ற தாய் மட்டுமல்லாமல் மரபியல் தாயும் அவளே.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளில் ஆணுக்கு விந்தணு உற்பத்தியும், பெண்ணுக்கு கருமுட்டை உற்பத்தியும் நன்றாக இருந்து, பெண்ணுக்குக் கருப்பை பலவீனத்தால் கருவுறுதல் நடக்காது என்றால், சோதனைக்குழாயில் கருவுறுதல் நடத்தப்பட்டு உருவாகும் கரு வாடகைத் தாயின் கருப்பையில் செலுத்தப்படும். இம்முறையில் தம்பதியினர் இருவரும் குழந்தையின் மரபியல்ரீதியான, உயிரியியல்ரீதியிலான பெற்றோர் ஆவார்கள். பிரசவித்த வாடகைத் தாய், குழந்தையைப் பெற்றுத் தந்த தாய் எனக் கருதப்படுவார்.

வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்த நாடாளுமன்றம் சட்ட முன்வடிவு ஒன்றை 2016-நவம்பரில் கொண்டுவந்தது. நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைக்குப் பிறகு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் உள்ளது. வாரிசுரிமைச் சட்டம், தத்தெடுப்புச் சட்டம் போன்றவற்றில் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கான உரிமைகள், மேலும் பெற்றோர் ஆதரவு போன்ற இதர சலுகைகள், மதம் சார்ந்த குடும்பச் சட்டங்களில் அவர்களுக்கான இடமும் பங்கும் போன்ற பிரச்சினைகள் இனி ஏற்படும் அனுபவத்தைக்கொண்டு சட்டத்தால் வரையறுக்கப்பட வேண்டும். மேலும் இந்தியாவில் வாடகைத் தாய்களுக்கான தெளிவான இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தாய் என்பவர் யார்? கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறுஜென்மம் எடுத்து குழந்தையைப் பெற்றெடுப்பவரா? அல்லது கருமுட்டையையும் பணத்தையும் கொடுத்து அந்தக் குழந்தையை வாங்கியவரா? இது சமூகத்தின் முன்னால் எழுப்பப்பட்டிருக்கும் மிகப் பெரிய கேள்வி.

(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x