Published : 10 Nov 2017 09:34 AM
Last Updated : 10 Nov 2017 09:34 AM

பொம்மலாட்டத்துக்குப் புதுமுகம்

 

ஸ்

மார்ட்போனை வைத்துக்கொண்டு பொழுதைக் கழிக்கும் வயதுதான் கிருத்திகாவுக்கு. ஆனால், அதற்கு மாறாக, மறைந்துவரும் பாரம்பரியக் கலையான நிழல் பாவைக் கூத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லத் தீவிரமாகப் பணியாற்றிவருகிறார். புதுக்கோட்டையைச் சேர்ந்த பொம்மலாட்டக் கலைஞரான அவர், பொம்மலாட்டம், நிழற்பாவைக் கூத்துக்காகப் பிரத்யேகமாக ஒரு அமைப்பையும் தொடங்கியிருக்கிறார்.

இளங்கலை உயிரி தொழில்நுட்பம், முதுகலையில் எம்.ஏ. சமூகவியல் படித்திருந்தாலும் சிறுவயதிலிருந்தே நாடகம், நடிப்பு ஆகியவற்றின் மீதுதான் கிருத்திகாவுக்கு ஈர்ப்பு. படிப்புக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நியதி சிறுவயதில் கிருத்திகாவைக் கட்டிப்போட்டுவிட்டது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தன் உள்மனதிலிருந்த ஆசையை நிறைவெற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார் கிருத்திகா. “என்னுடைய சிறுவயது ஆசைகளை எல்லாம் படிக்கும்வரை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் எனக்குப் பிடித்த விஷயங்களை எப்படியும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் எனக்குள் இருந்தது. இளங்கலை முடித்த உடனே நாடகப் பயிற்சி பள்ளி ஒன்றில் சேர்ந்தேன். பொம்மலாட்டம், தோல் பாவை, நிழற்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்” என உற்சாகமாகச் சொல்கிறார் கிருத்திகா.

சமூகப் பார்வை

நாடகக் கலை கற்றுக்கொண்ட உற்சாகம், சென்னைப் பல்கலைக்கழத்தில் படித்தபோது அவருக்கு மிகவும் கைகொடுத்திருக்கிறது. பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர்கள் ‘முற்றம்’ என்கிற பெயரில் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தியபோது கிருத்திகாவும் பங்கேற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூகம் சார்ந்த தனது பார்வையையும் விசாலமாக்கியிருக்கிறார். “சென்னைப் பல்கலைக்கழகத்தில் வீதி நாடகப் பாணி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். ‘முற்றம்’தான் எனக்கு சமுதாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அங்குதான் சாதியப் பாகுபாடு, பெண்ணியம், விளிம்பு நிலை மக்களின் நிலை ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் கலைகள் மூலமாக சொல்ல முடியும் என்று கற்றுக்கொண்டேன். பின்னர் நாடகத்தில் சொல்லும் விஷயங்களைப் பொம்மலாட்டம் வழியாகவும் நிழற்பாவைக் கூத்து மூலமாகவும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல ‘கிகி’ என்ற பெயரில் அமைப்பை தொடங்கினேன்” என்கிறார் கிருத்திகா

.03chlrd_karthika100

கிருத்திகா தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பை நிழற்பாவைக் கூத்து வடிவில் அரங்கேற்றியுள்ளார். அதேபோல் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வுக் கதைகளைப் பொம்மலாட்டம் வழியாகச் சொல்லிக் கொடுத்து வருகிறார். “பொம்மலாட்ட கலைகளில் பெரும்பாலும் புராணக் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இனி வரும் காலத்தில் சமுதாயத்தில் நிலவும் விஷயங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பொம்மலாட்ட மேடையை மாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்கான முயற்சியில் தொய்வில்லாமல் பயணிப்பதே என்னுடைய லட்சியம்” என்று உறுதியான குரலில் சொல்கிறார் கிருத்திகா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x