Published : 27 Nov 2017 11:04 AM
Last Updated : 27 Nov 2017 11:04 AM

நானோ எனும் ஃபீனிக்ஸ்!

ந்தியாவில் உள்ள நடுத்தர மக்களும் காரை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டாடா நிறுவனர் ரத்தன் டாடாவின் தீவிர முயற்சியில் வெளிவந்ததுதான் நானோ.

தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமும், கம்யூனிஸ்ட் தோழர்கள் அதிகம் உள்ள மேற்கு வங்கத்தில் ஆலையை அமைக்க முடிவு செய்து அதற்காக சிங்குரில் இடம்பிடித்து, பிறகு திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பால் 75 சதவீத கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் அங்கிருந்து இடம்பெயர்ந்து குஜராத்திலிருந்து நானோ கார் வெளியானது.

தனது முயற்சியில் மிகத் தீவிரமாக இருந்ததன் விளைவாக ரத்தன் டாடாவால் நானோ காரை குஜராத்திலிருந்து கொண்டு வர முடிந்தது.

ஆனால் ஆரம்பத்தில் இந்த காருக்கு இருந்த வரவேற்பு மக்களிடையே படிப்படியாகக் குறைந்தது. ஏற்றுமதியிலும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இந்த நிலையில் நானோ காரை தொடர்ந்து தயாரிப்பது நிறுவனத்தை நஷ்ட பாதைக்கு தள்ளிவிடும் என சில காலம் தலைவராயிருந்த சைரஸ் மிஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.

டாடா குழுமத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களில் ரத்தன் டாடாவின் கனவு காரான நானோவுக்கு மூடுவிழா நடத்தலாம் என அவர் தெரிவித்த கருத்தும் ஒரு காரணமாகக் கூறப்பட்டது.

அடுத்த தலைமுறை (நெக்ஸ்ட் ஜென்) காராக அது மேம்படுத்தப்பட்டு வெளிவந்தபோதிலும் அது எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறியது.

இப்போது குழுமத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகரும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த நிலையில் நானோ கார் உற்பத்தி நிறுத்தப்படலாம் என தகவல்களும் வெளியாயின.

ஆனால் இந்நிலையில் பேட்டரி காராக உருமாறி நானோ வெளி வர உள்ளது. இப்புதிய பேட்டரி கார் இம்மாதம் 28-ம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த கார் `ஜெயெம் நியோ’ என்ற பெயரில் அறிமுகமாகிறது.

பேட்டரி கார் உருவாக்கத்தில் டாடா மோட்டார்ஸின் பங்களிப்பு மிக மிகக் குறைவு. நானோ காரின் புறப் பகுதிகள் முழுவதும் கோவையைச் சேர்ந்த ஜெயெம் ஆட்டோமொபைல் நிறுவனத்துக்கு அளிக்கப்படும். இதில் பேட்டரி மற்றும் அதன் செயல்பாடுகளை ஜெயெம் நிறுவனம் மேற்கொள்ளும். இந்த காருக்கு டாடா மோட்டார்ஸ் லோகோ இருக்காது.

டாடா நானோ காரின் கூடுகளில் (ஷெல்) பேட்டரி பவரில் இயங்கும் இன்ஜின் உள்ளிட்டவை கோவையில் உள்ள ஜெயெம் ஆலையில் இணைக்கப்படும்.

பேட்டரி வாகன வடிவமைப்பில் முன்னணியில் விளங்கும் எலெக்ட்ரா இவி நிறுவனத்துடன் ஜெயெம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம் பவர் டிரைன், பேட்டரி பேக் மற்றும் சார்ஜ் ஏற்றுவதற்கான வசதிகளை அளிக்கும்.

இதில் உள்ள பேட்டரி 17 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இது 23 ஹெச்பி திறனுக்கு இணையானது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

முதலில் ஜெயெம் என்ற பிராண்டு பெயரில் இந்த கார்கள் வெளியாகும். எதிர்காலத்தில் நியோ என்ற பெயரில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த பேட்டரி காருக்கு ஏற்கெனவே ஆர்டர்கள் உள்ளன. பேட்டரி கார்களை ஓலா நிறுவனம் டெல்லியில் செயல்படுத்தும். முதல் கட்டமாக 400 கார்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை ஓலா நிறுவனம் பயன்படுத்த உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெயம் நிறுவனத்துடன் 50:50 என்ற கூட்டு முயற்சியில் பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் என முன்னரே கூறப்பட்டு வந்தது. கூட்டு நிறுவனம் ஜெடி என்ற பெயரில் செயல்படும்.இத்தகைய வாகனங்கள் கோவை ஆலையில் தயாரிப்பதென முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி இதுபோன்ற பேட்டரி வாகனங்களுக்கான வடிவமைப்பை ஜெயம் உருவாக்கி அதற்குத் தேவையான பவர் டிரைன், பேட்டரி பேக் உள்ளிட்டவற்றை அளிக்கும். நானோவைத் தொடர்ந்து பிற கார்களை பேட்டரி வாகனங்களாக மாற்றுவது குறித்த ஆய்வும் தொடரும் என கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டில் வாகனங்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. இதைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக ஓலா நிறுவனம் செயல்படுத்த உள்ள வாடகைக்கார் செயல்பாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சமீபத்தில் ஓலா நிறுவனம் மஹிந்திரா நிறுவனத்தின் பேட்டரி காரான இ-20 கார்களை ஜெய்ப்பூரில் செயல்படுத்தியது. அங்கு தற்போது 200 கார்களை இந்நிறுவனம் இயக்கி வருகிறது. தற்போது தலைநகர் டெல்லியில் தனது சூழல் மாசற்ற சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

ஃபீனிக்ஸ் பறவை பற்றி அனைவரும் அறிந்ததே. அதற்கு உதாரணமாக நானோவை குறிப்பிடுவதும் பொருத்தமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x