Published : 13 Nov 2017 10:52 AM
Last Updated : 13 Nov 2017 10:52 AM

ஆல்பபெட் வேமோ `ரோபோ டாக்ஸி’!

டி

ரைவர் தேவைப்படாத கார் ஆராய்ச்சியில் முதலில் இறங்கியது கூகுள் நிறுவனம்தான். இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-டின் ஒரு பிரிவான வேமோ இப்போது இத்தகைய ஆராய்ச்சியைத் தொடர்கிறது. இந்நிறுவனம் ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

டிரைவர் தேவைப்படாத வாடகைகார்களுக்கு ரோபோ டாக்ஸி என பெயர் சூட்டப்பட்டு இதை சோதனை ரீதியாக செயல்படுத்திப் பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அரிசோனா மாகாணத்தின் பிரதான சாலைகளில் இத்தகைய வாடகை கார்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் கிராஃபிக் தெரிவித்தார்.

ஓட்டுநர் இருக்கையில் ஆளில்லாத காரை அமெரிக்க சாலைகளில் இயக்கிப் பார்ப்பதற்கான முயற்சி இதுவே முதல் முறையாகும். பொதுவாக டிரைவர் தேவைப்படாத கார்களை சோதனை ரீதியில் இயக்கிப் பார்க்கும்போது கூட டிரைவர் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒருவர் அமர்ந்திருப்பார். தொழில்நுட்ப ரீதியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் காரின் கட்டுப்பாட்டை அவர் எடுத்துக்கொள்வதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேமோ நிறுவனம் மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலைகளில் இத்தகைய ரோபோ டாக்ஸியை சோதனை ரீதியில் இயக்கிப் பார்த்தபோது அதில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். அடுத்த சில வாரங்களில் இத்தகைய ரோபோ டாக்ஸியை, அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் இயக்கிப் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்குதான் வெப்ப நிலை சீராக இருக்கும். மேலும் இங்குள்ள பருவ நிலையை கணிப்பதும் எளிது. கடும் பனி மற்றும் மழைக்காலங்களில் இத்தகைய ரோபோ கார் எப்படி செயல்படும் என்பதை இந்த நகரில் இயக்கிப் பார்ப்பது எளிது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

பீனிக்ஸ் நகரில் இத்தகைய ரோபோ டாக்ஸியில் பயணிக்க விரும்பிய பொதுமக்கள் இதற்காக வடிவமைக்கப்பட்ட செயலியை (ஆப்ஸ்) பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர்.

சோதனை ரீதியான பயணத்தின்போது பொதுமக்களுடன் வேமோ நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களும் பயணித்துள்ளனர். சோதனை ரீதியான பயணம் வெற்றிகரமாக இருந்தபோதிலும் இது வர்த்தக ரீதியில் பொது பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பதை நிறுவனம் இன்னமும் அறிவிக்கவில்லை.

ஆரம்பத்தில் இலவச பயணத்தை அனுமதித்து பிறகு படிப்படியாக கட்டணத்தை நிர்ணயிக்க வேமோ திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் மிக அதிக செலவு பிடித்துள்ள இந்த கண்டுபிடிப்புக்கு தொடர்ந்து தேவைப்படும் நிதி ஆதாரத்தை ஓரளவு ஈடுகட்ட முடியும் என நிறுவனம் நம்புகிறது.

இப்போதைக்கு டிரைவர் தேவைப்படாத கார்களை இயக்குவதில் அரிசோனா மாகாணத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால் கலிபோர்னியா மற்றும் பிற மாகாணகங்களில் டிரைவர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு அந்த மாகாண அரசின் அனுமதி பெற்றாக வேண்டும்.

அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் ரோபோ டாக்ஸி இயக்கம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இதுபோன்ற டிரைவர் தேவைப்படாத வாகனங்களை இயக்குவதில் சட்ட ரீதியில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று கடந்த செப்டம்பரிலேயே தெரிவித்துவிட்டது. இது டிரைவர் தேவைப்படாத வாகன உருவாக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு பெரும் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.

டிரைவர் தேவைப்படாத வாகனங்களை இயக்குவது தொடர்பாக கூகுள் 8 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை 6 மாகாணங்களில் இத்தகைய வாகனங்களை சோதித்துப் பார்த்துள்ளது. கடைசியாக மிச்சிகன் மாகாண சாலைகளில் இத்தகைய கார்கள் சோதனை ரீதியில் இயக்கிப் பார்க்கப்பட்டன. அமெரிக்காவில் உள்ள ஆட்டோநேஷன் நிறுவனம் வேமோ நிறுவனத்தின் டிரைவர் தேவைப்படாத வாகனங்களை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் ரோபோ டாக்ஸிகளை எதிர்காலத்தில் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 100 கோடி டாலர் முதலீட்டில் குருயிஸ் ஆட்டோமேஷன் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அரிசோனா மாகாணத்தைத் தொடர்ந்து இனி வரும் காலங்களில் அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் ரோபோ டாக்ஸி வலம் வரும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x