Published : 05 Nov 2017 11:41 AM
Last Updated : 05 Nov 2017 11:41 AM

எசப்பாட்டு 8: மௌனமே கூர்வாளாய்...

இரவின் மௌனத்தை

பறவையின் முதல் குரல்

கலைக்கிறது

-அ.வெண்ணிலா

னிதர்களுக்கிடையிலான உறவை வளர்ப்பதில் பேச்சுக்கு ஒரு முக்கிய இடம் இருப்பதுபோல மௌனத்துக்கும் ஓர் இடம் உண்டு. கண்கள் பேசும்போது வார்த்தைகளுக்கு அவசியமென்ன என்பது காலம் காலமாக நம் கவிஞர்கள் எழுதிவரும் வரிகள். வார்த்தைகளால் உணர்த்த முடியாதவற்றை மௌனத்தால் உணர்த்திவிட முடியும். ஆனால், மௌனமே ஒருவரை வதைக்கும் ஆயுதமாகவும் மாறும்.

என் நண்பருடைய மகளை நல்ல வேலையில் இருக்கும் சொந்த சாதியைச் சேர்ந்த ‘நல்ல குடும்ப’த்துப் பையன் ஒருவருக்குக் கட்டிக்கொடுத்தார். நல்ல ஊதியம், சென்னையில் சொந்த வீடு. காரும் உண்டு. பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. டீ, காபிகூடக் குடிக்க மாட்டார். ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். அளவான குடும்பம். பத்தாண்டு காலம் அமைதியாகச் சென்றது வாழ்க்கை.

தாங்க முடியாச் சுமை

இப்போது மகள் என் நண்பரிடம் வந்து ‘அவரோடு சேர்ந்து வாழ முடியாது’ என்று கண்ணீருடன் நிற்கிறாள். ‘அடிக்கிறாரா’ என்று கேட்டால் ‘இல்லை’ என்கிறாள். ‘திட்டுகிறாரா’ என்று கேட்டாலும் ‘இல்லை’ என்கிறாள். ‘செலவுக்குக் காசு கொடுப்பதில்லையா’ என்றால் ‘அப்படியெல்லாம் இல்லை’ என்கிறாள். ‘அம்மா வீட்டுக்குப் போகக் கூடாது என்கிறாரா’ என்றால் அதுவும் இல்லை. அவரே டிக்கெட் ரிசர்வ் செய்து காரில் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ரயில் எற்றி விடுவார். திரும்ப ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துச் செல்வார்.

‘அப்புறம் என்னதானம்மா பிரச்சினை’ என்றால், “அவர் என்னோடு பேசி அஞ்சு வருசம் ஆச்சுப்பா” என்று கதறி அழுகிறாள். பிறகு என் நண்பர் யோசித்து யோசித்துப் பார்த்ததில் கடந்த காலங்களில் அவர்கள் தீபாவளிக்கு, பொங்கலுக்கு, கோடை விடுமுறைக்கு என்று வந்தபோதெல்லாம் அவர் எல்லோருடனும் சகஜமாகப் பேசியதாகவே நினைவு. மகளுடன் மட்டும் பேசாமல் மற்ற எல்லோருடனும் பேசியிருப்பதை ரொம்ப ஆழ்ந்து நினைவுகளைக் கிளறித்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் அதொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. எல்லாமே அப்பா வாங்கி கொடுக்கிறார். தங்கள் மீது அன்பாயிருக்கிறார். ஆனால், ஓரளவு வளர்ந்த பிறகு, அப்பா, அம்மாவுக்கு இடையில் ஏதோ ஒரு பிரச்சினை என்று குழந்தைகளுக்குப் புரியத் தொடங்குகிறது.

இந்த முறை விடுமுறைக்கு அவர் வந்துவிட்டுச் சென்றார். இடையில் வரவில்லை. அழைத்துச் செல்ல வரவில்லை. டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டார். விடுமுறை முடிந்து மகளும் குழந்தைகளும் கிளம்பும்போது பேரக் குழந்தைகள் காரணமே இல்லாமல் தாத்தாவைக் கட்டிக்கொண்டு கதறியழுதபோது அவருக்கு விளங்கவில்லை. துருவிக் கேட்ட பிறகுதான் இப்படிச் சொல்கிறாள் மகள்.

பேரக் குழந்தைகள் அழுத காட்சியை அவர் சொன்னபோது எனக்கே கண்கலங்கிவிட்டது. ஆறு வயது, ஏழு வயதுக் குழந்தைகள் இந்த மௌனத்தின் சுமையைத் தாங்க முடியுமா?

ஆளுமைக்கு எதிரான ஆயுதம்

சண்டை ஏதும் போடவில்லை. நண்பரின் மகள் புத்திசாலி. நிறையப் புத்தகம் வாசிப்பாள். மாப்பிள்ளைக்குப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லை. வேலை விட்டு வந்தால் குழந்தைகளுக்கு அவள் பாடம் சொல்லிக்கொண்டு இருக்கும்வரை டி.வி. பார்ப்பார். பிறகு சாப்பிடுவார். போய்க் கட்டிலில் படுத்துக்கொண்டு அவள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பார். அவள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு குழந்தைகளைத் தூங்கவைத்துவிட்டு, பகலில் பாதி படித்துவிட்டு மூடி வைத்திருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்குவாள். அங்குதான் இடைவெளி உருவாகத் தொடங்கியிருக்க வேண்டும். அவன் நுழைய முடியாத அவளுடைய உலகத்தை அவனால் ஏற்க முடியவில்லை. தன் பிடிக்குள் அடங்காத ஒரு ஆளுமை அவளுக்கு இருப்பது அவனைத் தொந்தரவு செய்திருக்கிறது. ஆனால், புத்தகம் படிக்கக் கூடாது என்று நேரடியாகச் சொல்ல முடியவில்லை. அந்த வகையில், அந்த அளவில் அவன் நல்லவன்தான்.

தனக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கிக் காலப்போக்கில் மௌனத்தை ஒரு ஆயுதமாக அவள் மீது பயன்படுத்தத் தொடங்கியிருக்க வேண்டும். இதை மையமிட்டுச் சில உரையாடல்களும் கிண்டல் கேலிகளும் அவர்களுக்கிடையில் நடந்திருக்கின்றன. இது மட்டும்தான் காரணமா, இல்லை அவன் மனதில் வேறு காயங்கள் இருக்கின்றனவா என்பதை அவன் மனம் திறந்தால் மட்டுமே அறிய முடியும்.

‘என்னய்யா உன் பிரச்சினை’ என்று என் நண்பர் கேட்டபோது மௌனத்தையே பதிலாகத் தந்திருக்கிறார் மாப்பிள்ளை. ‘நாங்க நல்லாத்தானே இருக்கோம்’ என்பதுதான் திரும்பத் திரும்ப அவன் சொன்ன பதில். ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் சிவாஜி கணேசன் சொல்லுவதுபோல, “இப்படியே சந்தோசமா நாங்க இருந்துடறோம்” என்பது மருமகனுடைய பதிலாக இருக்கிறது. ஆனால், பேச்சற்ற அந்த வாழ்வை மகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

‘இதயவீணை தூங்கும்போது பாட முடியுமா, இரண்டு பேரும் பேசிடாமல் வாழ முடியுமா’ என்பது அவள் நிலை. “சண்டை போட்டாக்கூடப் பரவால்லேப்பா”. ரெண்டு நாள் சண்டை, அப்புறம் ரெண்டுநாள் சமாதானம்னு அப்பிடியே கொண்டுபோயிடலாம் வாழ்க்கையை. குழந்தைகளுக்கும் என் கண்ணீரின் காரணம் புரிய ஆரம்பிச்சிடுச்சு. அவங்களுக்கு நான் என்ன சமாதானம் சொல்ல முடியும்?’ என்கிறாள்.

நீதிமன்றத்தை நாடலாம். அங்கே அவன், “நாங்க நல்லாத்தானே இருக்கோம்” என்று சொல்லித் தப்ப முடியாது. பேசியாக வேண்டும், திருந்தியாக வேண்டும்.

இதுவும் குடும்ப வன்முறைதான்

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005-ன் இரண்டாவது அத்தியாயத்தில் குடும்ப வன்முறை என்றால் என்ன என்பது விளக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவு விளக்குகிற ‘உணர்ச்சிபூர்வமான தாக்குதல்’ என்பதன் கீழ் இந்த மௌன ஒடுக்குமுறை வரும்.

அந்த விளக்கத்தில் வருகிற அவமதிப்பு, தன் மதிப்பைக் குலைத்தல் (humiliation) என்கிற வார்த்தைகள் வழக்கறிஞரின் வாதத்தில் இன்னும் விளக்கம் பெறும்போது இந்த மாப்பிள்ளை குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வருவார். ‘நான் நல்லாதானே வச்சிருக்கிறேன்’ என்று வாதிட்டுத் தப்பிக்க முடியாது. இதை ஆண்கள் அறிய வேண்டும். இதைப் போல் சில பெண்களும் இருக்கலாம். அவர்களும் திருந்தித்தான் ஆக வேண்டும்.

என் சித்தப்பா ஒருவர் 20 ஆண்டுகள் என் சித்தியுடன் பேசாமலேயே வாழ்ந்து, இறந்துபோனார். அவர் இறந்த வீட்டில்தான் இதை என் சித்தி என்னிடம் சொன்னார். இத்தனைக்கும் அவர் ஒருமுறை என் கண்முன்னாலேயே என் சித்தியின் கன்னத்தில் அறைந்தார். அதெல்லாம் ஒரு குற்றமாகவே அவருக்குப் படவில்லை. சித்தி ஒரு கல்யாண வீட்டில் வைத்து சித்தப்பாவை ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, அதை மன்னிக்க மாட்டாமல் பேச்சை நிறுத்திவிட்டார். என் சித்தியைப் போல் சகித்துக்கொண்டு வாழ என் நண்பரின் மகளால் முடியவில்லை. அவள் இந்த ஜனநாயக யுகத்தின் குழந்தை அல்லவா?

இரவின் மௌனத்தைக் கலைக்க ஒரு பறவையின் சத்தம் வருவதுபோல இந்த மனிதர்களின் மௌனத்தைக் கலைக்க என்னதான் வர வேண்டும்?

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x