Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

எசப்பாட்டு 11: இன்றைய தாயுமானவர்கள் எங்கே?

 

தா

ய்மை எனப்படும் உணர்வு பெண்ணுக்கே உரியதா? தாய்மை உணர்வு கொண்ட ஆண்கள் இந்த உலகத்தில் இருந்ததில்லையா? இப்போதும் இருக்கவில்லையா? தாயுருவில் வந்து பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயுமானவன் எனச் சிவபெருமான் பெயர் பெறவில்லையா?-இது ஒரு புறம்.

பெண்மை முழுமை பெறுவது தாய்மையில்தான். பெண் பிறப்பே பிள்ளை பெற்றுப்போடத்தான். கல்யாணம் என்பதே ஆண் - பெண் இணைந்து மனிதகுல மறுஉற்பத்தி செய்யத்தான். இதுதான் இயற்கை -இது ஒரு புறம்.

காப்பாற்றும் கடமை

‘கல்யாணம் ஆதியிலிருந்து சந்ததியை விருத்தி செய்ய ஏற்பட்ட ஒரு புராதன நடத்தையாகும்’ என்று தொடங்கும் பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர், ‘வெறும் சம்போகத்துக்கும் கல்யாணத்துக்கும் உள்ள வித்தியாசம் வாழ்க்கையின் கால வித்தியாசத்தால்தான் ஏற்பட்டுள்ளது. உயிர்கள் உயர உயர அவ்வுயிர்களில் ஆணும் பெண்ணும் சம்போகம் முடிந்த பிறகும், சில காலம் கூடி வாழ நேரிட்டது. அது எதற்கெனில், சம்போகத்தின் முக்கிய பயனாகிய சிசுக்களைக் காப்பாற்ற வேண்டியதாயிற்று. ஏனெனில், உயர்தர உயிர்களுக்கு உண்டாகும் சிசுக்கள், பிறந்தவுடன் சீவிக்க எழாமல் சில காலம் அவைகளை ஈன்ற ஆண்,பெண் சவரட்சணையில் இருந்து தீர வேண்டி வந்தது. இத்யாதி காரணங்களால் உயர்தர உயிர்களில் ஆணும் பெண்ணும் கூடிய உடன் பிரிந்து போகாமல், சிசுக்கள் வயது வரும்வரை கூடிவாழ வேண்டிவந்தது’ என்று திருமணத்தின் ஆதி வேர்களை அறிவியல் பார்வையுடன் விளக்கிச் செல்கிறார். (சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம்-தொகுதி-2)

‘சிசுக்கள் வயது வரும்வரை’ என்கிற கால அளவு ‘கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, பறந்து போயிடுத்து’ என்பதாகப் பிற உயிரினங்களைப் போல சட்டென மனித குலத்தில் நடக்கவில்லை. தத்தி நடந்து, பின் ஓடும் பருவம் வந்தாலும் சமூகம் என்கிற அமைப்பில், பொருளாதாரம் உள்ளிட்ட தளங்களில் குழந்தைகள் காலூன்றி நிற்கிற வயது வரும்வரை தாய், தகப்பனின் காப்பாற்றுதல் (சவரட்சணை) தேவை என்றாகிக் கல்யாணம் குடும்பம் என்னும் நிறுவனமாக பின்னர் நிலைபெற்றுவிட்டது.

அதில் குற்றமில்லை. ஆனால், இந்தக் காப்பாற்றும் கடமைதான் தாய்மை என்பதாக விளக்கம் பெற்று, அது பெண்ணுக்கே உரிய ஒன்றாக மாறி, இன்று பெண்ணடிமைத்தனத்தின் ஊற்றாக மாறிவிட்டது. அதனால்தான், பெண்கள் விடுதலை பெற வேண்டுமானால் குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள், கருப்பையை அறுத்தெறியுங்கள் என்று தந்தை பெரியார் ஆவேசமாக அறிவுரை வழங்கினார்.

அசலான அடிமை சாசனங்கள்

இன்று மேலை நாடுகளில் பெண்ணியவாதிகள் தாய்மை என்பதை உன்னதமான மானுட உணர்வு என்று சொல்வதை மறுத்து, அது ‘ஆண்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம்’ என்கிறார்கள். ‘அந்த நிறுவனத்தில் சிக்குண்டதால் நாங்கள் சுயஅடையாளத்தை இழந்தோம். தாய்மையிலிருந்து விடுதலை பெற்றால் மட்டுமே, நாங்கள் மனுஷியாக அடையாளம் பெறுவோம். இந்தத் தந்தைமைச் சமூகத்தில் பெண் என்றாலே கருப்பைதான். ஆணின் குழந்தையைச் சுமக்கும் ஓர் உடல்தான்’ என்பது அவர்களின் விளக்கம்.

நம் ஊர்களில் சின்னஞ்சிறு பெண் குழந்தையைக்கூட “தாயீ..” என்றழைக்கும் பழக்கம் இருப்பதை இந்தக் கோணத்தில் பார்த்தால் அவமான உணர்ச்சி மேலிடுகிறது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் பெண்ணிய இயக்க முன்னோடியுமான சிமோன் தி பூவா தன்னுடைய ‘தி செகண்ட் செக்ஸ்’ நூலில் “பெண்ணின் துரதிருஷ்டமே அவளுடைய உடல் மனித குல மறுஉற்பத்திக்கேற்றபடி வடிவமைக்கப்பட்டிருப்பதுதான்” என்று குறிப்பிட்டார். ஆகவே, ஒரு பெண் திருமணம், குழந்தைப்பேறு என்னும் சதிவலைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க வேண்டும். அப்படியே பெற்றுக்கொள்ள வேண்டுமானால் எப்படிப் பெறுவது, எப்படி வளர்ப்பது, எது எதெல்லாம் யாருடைய வேலை என்பனவற்றையெல்லாம் பற்றிப் பேசிக் கறாரான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகே பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்றைய நிலையில் குழந்தைப்பேறும் குழந்தை வளர்ப்பும் அசலான அடிமை சாசனங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொறுமையிழக்கச் செய்யும் பொறுப்பு

ஒன்றிரண்டு காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரயிலுக்குக் காத்திருந்தபோது ஒரு இளம் தாய் (உழைப்பாளிப் பெண் போன்ற தோற்றம்) அழும் தன் குழந்தையைச் சமாதானம் செய்யப் போராடிக்கொண்டிருந்தாள். அது நெடுநேரமாகத் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள். அழுகை நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் “சனியனே…” என்று கத்தி குழந்தையைத் தன்னிடமிருந்து பிய்த்து அப்படியே நட்டுக்கக் கீழே போட்டுவிட்டாள். எதிர்பாராமல் தரையில் விழுந்த அதிர்ச்சியில் குழந்தை ஒரு நிமிடம் திகைத்து, மீண்டும் முன்னைவிடப் பெருங்குரல் எடுத்துக் கத்த ஆரம்பித்துவிட்டது. தூரத்தில் பீடி குடித்துக்கொண்டிருந்த கணவன் பதறிப்போய் ஓடிவந்து குழந்தையைத் தூக்கி இடக்கையில் பிடித்துக்கொண்டு வலக்கையால் அப்பெண்ணைச் சப்புச் சப்பென்று நாலு உதை விட்டான். அவள் அழுதுகொண்டே குழந்தையை வாங்கி அணைத்துக்கொண்டாள். அழுகை இப்போது நின்றுபோயிருந்தது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு ஒத்தாசையாக இருக்கவென்று சாப்பாட்டுக்கு வழியில்லாத வயதான மூதாட்டிகளைக் கூட்டி வந்து விடுவார்கள். அநேகமாக அம்மூதாட்டிகள் தவறாமல் சொல்லும் ஒரு சொலவடை உண்டு. ‘பிள்ளை தூக்கிப் பிழைக்கிறதைவிடப் பிச்சை எடுத்துப் பிழைச்சிடலாம்’.

ஓர் இளம் தம்பதி தங்கள் 2 வயதுக் குழந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்வது, சிறுநீர் கழிக்கத் தூக்கிச் செல்வது போன்ற அனைத்தையும் கணவன் செய்தான். ஆனால், குழந்தைக்குச் சோறு ஊட்டுவது, பால் ஆற்றிப் பக்குவம் பார்த்துக் கொடுப்பதை எல்லாம் அந்தப் பெண்ணே செய்தாள். ‘நீங்க சோறு ஊட்ட மாட்டிங்களா?’ என்று கேட்டேன். ‘அதுக்கு ரொம்பப் பொறுமை வேண்டியிருக்கு தோழர்... என்னாலே பத்து நிமிசத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியலே. கோபம் வந்துடுது. ஒரு உருண்டை சோத்தை ஊட்டுவதற்கு ஒருமணி நேரம் பின்னாடியே அலைய வேண்டியிருக்கு’ என்றார்.

தாய்மையைப் பொதுவாக்குவோம்

மேலே சொன்ன காட்சிகளையும் தாய்மையை வெறுக்கும் பெண்ணியவாதிகளின் கோபத்தையும் இணைத்துப் பார்த்தாலே புரியும். கூடுதல் விளக்கம் எதுவும் தேவையில்லை.

குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்றுப்போடுவது, தாய்ப்பால் ஊட்டுவது ஆகிய இந்த இரண்டு வேலைகளைத் தவிர, குழந்தை வளர்ப்பின் மற்ற அத்தனை வேலைகளையும் கணவன் தன் வேலையாக மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். சமையல், வீட்டு வேலைகளில் சரிபாதியை ஆண் ஏற்க வேண்டும். இவையெல்லாம் கற்றுக்கொள்ள முடியாத தொழில்நுட்பங்கள் ஒன்றும் இல்லையே. அப்போதுதான் கல்யாணம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

“தாய்மை நிலை என்று சொல்ல வந்தால், இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்.”

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x