

தலையணைப் புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? தலையணைப் புத்தகம் என்றால் தலையணை அளவு பெரிதான புத்தகம் அல்ல. தலையணையைப் போல் தனக்கு நெருக்கமான விஷயங்களைப் பற்றி எழுதிவைத்த குறிப்புகள் என்று விளக்கம் தருகிறார் ஸீஷோனகன்.
பத்தாம் நூற்றாண்டில் ஜப்பான் அரண்மனையில் மகாராணியின் தாதியாகப் பணிபுரிந்தவர் அவர்.
கூர்ந்த அறிவும், அழகும், பணிவிடைப் பண்புகளும், இலக்கியப் பரிச்சயமும், நகைச்சுவை உணர்வும் கொண்ட சின்னஞ்சிறு நங்கை ஸீஷோனகன்.
இந்தப் புத்தகத்தை எழுத நேர்ந்த அனுபவத்தையே சுவைப்படச் சொல்கிறார்.
ஒருநாள் தன் பரிவாரங்களோடு குதிரைமீது வந்த கொரிச்சிகா பிரபு, மகாராணிக்கு முன்னால் ஒரு பெரிய காகிதக் கட்டைக் கொண்டுவந்து பவ்யமாக வைத்தார்.
“இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்று கேட்டார் மகாராணி.
அப்போதெல்லாம் காகிதம், விலை உயர்ந்த, கிடைத்ததற்கு அரிதான பொருளாக இருந்தது.
“இவற்றை வைத்து நான் ஒரு தலையணை செய்வேன்” என்றார் ஸீஷோனகன்.
“அப்படியே ஆகட்டும்” என்று அரசி அனுமதி தந்தார்.
தான் பார்த்த, கேட்ட, ரசித்த அரண்மனை மனிதர்களையும் சம்பவங்களையும் காகிதங்களில் எழுதிவைத்தார். இதில் சில அரண்மனை ரகசியங்களும் அந்தப்புர ரகசியங்களும் இடம்பெற்றிருந்தன. அவற்றிற்குத் தனது கண்ணியமான எழுத்துகளால், ஓர் இலக்கிய அந்தஸ்தைத் தந்துவிட்டார் ஸீஷோனகன்.
ஒருசில இடங்களில், தன் மன உணர்வுகளையும் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருக்கிறார்.
நான் வெறுக்கும் விஷயங்கள்: சளசளவென்று பேசும் தாதிப் பெண்கள். தன்னைச் சுற்றி நடப்பதைத் தெரிந்துகொள்வதில் அவர்கள் காட்டும் ஆர்வம். விடியற்காலையில் வெளியேறும் காதலன் ராத்திரி எங்கே வைத்தேன் என் பேனாவை எனத் தேடுவது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமையுமில்லாத, அசடர்களின் ஓயாத பேச்சு. அற்ப விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் அவர்கள் காட்டும் ஈடுபாடு.
என் இதயத்தைப் படபடக்க வைப்பவை: சிட்டுக்குருவிகள் அவற்றின் குஞ்சு களுக்கு இரையூட்டும் காட்சி. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தைக் கடந்து செல்வது. ஏதோ ஒரு வாசனை ஊதுபத்தி எரிந்து அதன் நறுமணம் தங்கியுள்ள அறையில் உறங்குவது. திடீரென சாளரத்தின் மீது விழும் மழைத்துளிகள்.
இப்படியே எழுதிக் கொண்டு போனார்.
‘அதில் அரண்மனையால் வந்த வினை' என்கிற தலைப்பில் அவர் எழுதியிருக்கும் உருக்கமான சம்பவம்.
அரண்மனையில் ஓர் அழகான பூனை இருந்தது. அரண்மனை அந்தஸ்துடன் வாழ்ந்துவந்த அது ஒரு சோம்பேறி. அரசருக்குப் பிடித்தமான பூனை அது. எப்போதும் அதைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, அதன் உடலை அரசர் நீவிவிடுவார்.
நாங்கள் அந்தப் பூனைக்கு ‘மியோபூ சீமாட்டி' என்று பெயர் வைத்திருந்தோம். அந்தப் பூனையைக் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று மன்னர் உத்தரவே போட்டிருந்தார்.
ஒருநாள் அந்தப் பூனை மெதுவாக நடந்து அந்தப்புரத்திற்கு வெளியே போய்விட்டது. மகாராணி செல்லமாக வளர்த்துவந்த ‘ஒகினோமாரோ' என்கிற நாய் பூனையின் மேல் பாய்ந்தது. பயந்து நடுங்கிப் போன அந்தப் பூனை, அங்குமிங்கும் ஓடி மன்னரின் போஜனக் கூடத்திற்குள் புகுந்தது.
அங்கே மன்னர் உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அவர் புருவங்கள் நெறிபட்டன. பரிவுடன் பூனையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். நடுங்கும் அதன் உடலை மெல்ல நீவி விட்டார்.
அரண்மனைக் காவல் அதிகாரி அரசரிடம் நடந்ததைக் கூறினார்.
கோபப்பட்ட அரசர் ஒகினோமாரோவை நாடு கடத்தி, அதை நாய்த்தீவுக்கு விரட்டி, தீவாந்திர சிட்சை அளிக்குமாறு உத்திரவிட்டார்.
சில நாள்கள் கழித்து, அரண்மனைக் கோட்டைச் சுவருக்கு வெளியே ஒரே களேபரம். கூடவே ஒரு நாயின் அழுகுரல்.
“நம் ஒகினோமாரோவைப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு கடத்திய பின்பும் அது திரும்பி வந்துவிட்டதாம்” என்று தாதி ஒருவர் வந்து மகாராணியிடம் கூறினார்.
மகாராணியின் முகம் கோபத்தால் சிவந்தது. தனது காவலர்களை அழைத்து அடிப்பதை உடனே நிறுத்த உத்தரவிட்டார்.
மறுநாள் அரசிக்குச் சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். ஸீஷோனகன் அவருக்கு முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
சட்டென எழுந்த மகாராணி, தூணின் மறைவை நோக்கிச் சென்றார். அங்கே ஒகினோமாரோ உடம்பெல்லாம் ரத்தக் காயங்களுடன் படுத்துக் கிடந்தது. மகாராணியைக் கண்டதும் கண்ணீர் விட்டது.
நாங்களும் துக்கத்தால் அழுதோம். மகாராணி ரத்தக் காயத்தால் ஊறிப் போன நாயின் உடலைப் பரிவுடன் தொட்டார்.
அதே நேரம் மகாராஜா உள்ளே நுழைந்தார்.
“ஓ, திரும்பி வந்துவிட்டதா? அதிசயம்தான்" என்று புன்னகை செய்தார். பிறகு பூனையைக் கையால் தடவிக் கொடுத்தபடியே போய்விட்டார்.
இப்படியாக ஒகினோமாரோவிற்கு அரச மன்னிப்பு கிடைத்துவிட்டது.
மனம் கனத்தது.
“ஆஹா! ஸீஷோனகன் போல ஒரு சூட்டிகையானப் பெண், பராந்தகச் சோழரின் அரண்மனையிலாவது, குந்தவை நாச்சியாரின் அந்தப்புரத்திலாவது இருந்திருந்தால், நமக்கும் தலையணைப் புத்தகங்கள் கிடைத்திருக்கும். எவ்வளவோ சோழநாட்டு அரண்மனை ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருக்கலாம். நிச்சயமாக வரலாற்றில் இதுவரை விடை தெரியாத கேள்வி ஒன்றிற்கு விடை கிடைத்திருக்கும்” என்றேன் என் திண்ணை நண்பரிடம்.
“அது என்ன விடை தெரியாத கேள்வி?”
“அதுதான் ஐயா. ஆதித்த கரிகாலனைக் கொன்றது உண்மையில் யார் என்கிற கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் அல்லவா? ”
“இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் இருப்பதே நல்லது. வரலாற்றில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கணும்" என்றார் என் நண்பர்.
(பேச்சு தொடரும்)
- thanjavurkavirayar@gmail.com