Published : 19 Nov 2017 11:43 AM
Last Updated : 19 Nov 2017 11:43 AM

எசப்பாட்டு 10: பார்வை படுத்தும் பாடு

பதினொன்றாம் வகுப்பு மாணவர் பங்கேற்ற ஓர் இலக்கியப் பயிலரங்கில் ‘வாழ்க்கையில் இலக்கியத்துக்கான இடம்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். 30 பேரையும் வட்டமாக அமர்த்தி, நடுவில் நின்று பேசினேன். உற்சாகமான அமர்வு. அதில் மாணவர் இருவர் மட்டும் நான் பேசியதைச் சற்றும் கவனிக்கவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், நான் ஒருவன் இருப்பதையே அவர்கள் சட்டை செய்யவில்லை. பெண்களை வைத்த கண்ணை எடுக்காமல் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பெண்கள் இயல்பாக இருக்க முடியாமல் என் மீதான பார்வை பாதி அந்தப் பையன்கள் மீதான அசூயையும் கவனமும் பாதியாக இருந்தார்கள். அவர்களது கவனத்தை என் பக்கம் திருப்ப நான் எடுத்த முயற்சிகள் எவையும் பலிக்கவில்லை. ‘இதுதாண்டா சான்ஸ். இதை விட்றாதே’ என்பதாக இருந்தது அந்தப் பையன்களின் அணுகுமுறை. வகுப்பாசிரியராக இருந்தால் வெளியே போகச் சொல்லி பிரச்சினையை முடித்திருக்கலாம்.

நான் எழுத்தாளனாக அங்கு போயிருப்பவன். அப்படிச் செய்வது எழுத்துக்கு அழகல்ல. அந்த இரண்டு மணி நேரமும் அந்தப் பையன்கள் இருவரையும் இலக்கியத்தை நோக்கி ஈர்க்க முடியாமலே தோற்றுத் திரும்பினேன்.

ஆணுக்கே உரிய முறைப்பு

இந்த ‘ஆண் முறைப்பு’ என்பது ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு மாற்றாகப் ‘பெண் முறைப்பு’ இந்த அளவுக்கு இருப்பதில்லை. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் என்கிற கண்ணியமான எல்லைக்குள் அது நின்றுவிடுகிறது. சுற்றியிருக்கும் உலகத்தையே மறந்து முறைப்பது என்பது ஆணுக்கே உரிய பழக்கம். இது உளவியல்ரீதியாகப் பெண்களை மிகவும் பாதிக்கும் செயல்பாடு.

“சார்... இதையெல்லாம் ஒண்ணும் செய்ய முடியாது. பசங்க 12-13 வயசிலே ‘வயசுக்கு’ வர்றாங்க. டெஸ்டோஸ்டீரான் போன்ற பாலியல் சுரப்பிகள் வேலையை ஆரம்பிச்சுடும். இது உடலியல் சார்ந்த அறிவியல் பிரச்சினை. மாற்றுப் பாலின ஈர்ப்பு இயற்கையானது” என்று நமக்கு அறிவியல் விளக்கம் கொடுக்க நண்பர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

இங்கு நாம் எடுத்துக்கொள்ளும் பொருள் வளரிளம் பருவத்தின் சவால்கள் அல்ல. மாறாக, ஆண்களின் இந்த ‘முறைப்’பின் பலவித வடிவங்களும் அது பெண்களின் உளவியலை (இரு விதமாகவும்) பாதிக்கும் விதங்களும்தான்.

பண்பாட்டு ஒடுக்குமுறை

பெண்ணின் பாலியல் உணர்வுகள், கருத்துகள், வெளிப்படுத்தும் சுதந்திரம் மேய்ச்சல் கால நாகரிகத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டது. முல்லைத் திணையின் விளைச்சலான கற்புநெறி என்பது பெண் மீது வலிந்து போர்த்தப்பட்டுவிட்டபடியால் ‘பெண் முறைப்பு’ என்பது பண்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆண்களைவிடப் பெண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் இன்னும் சீக்கிரமாகவே 8-10 வயதுகளிலேயே பணியைத் தொடங்கினாலும் அவர்கள் ‘முறைக்காமல்’ இருக்க இந்தப் பன்னெடுங்காலத்துப் பண்பாட்டு ஒடுக்குமுறையே காரணம்.

தொல்காப்பியர் காலம்தொட்டே இது தொடர்கிறது. தலைவன் மீது தான் கொண்ட காதலைக்கூடப் பெண் வெளிப்படையாகப் பேசிவிடக் கூடாது. தலைவியின் உடல் மொழியே அவளது காதலை வெளிப்படுத்தும் மொழியாக இருக்க வேண்டும். இதை,

“தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லைப்

பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்

பெய்நீர்போலும் உணர்விற் றென்ப”

என்று தொல்காப்பிய நூற்பா விளக்குகிறது. அதாவது புத்தம் புதிய மண்கலத்தில் வைக்கப்பட்ட நீர், மண்கலத்தின் வெளிப்புறத்தில் திவலையாகத் தெரிவதுபோல அவளது அக உணர்வு வெளிப்பட வேண்டும்.

சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பெண் மீதான இந்த ஒடுக்குமுறையின் விளைவாக ‘பெண் முறைப்பு’ உள்ளொடுங்கிவிட்டது. “கற்புடைப் பெண்டிர் ஆடவரை முறைப்பது அழகல்ல” என்றும் ஒரு படி மேலே போய் ‘கற்பெனப்படுவது பிற ஆடவர் நெஞ்சு புகாமை’ அதாவது, ‘நீ ஒரு ஆணின் மனதுக்குள் புகுந்துவிட்டால் அது அவனது தவறில்லை, உன் தவறு. உன் கற்பு சரியில்லை’ என்றும் பெண்களுக்கு விதிசெய்யப்பட்டது.

“யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்”

என்று வள்ளுவரும் இந்தப் ‘பெண் முறைப்பு’க்கான எல்லையைச் சொல்லிச் சென்றுள்ளார்.

ஆணின் கட்டற்ற சுதந்திரம்

ஆனால், இந்தக் கட்டுப்பாடு எதுவுமே விதிக்கப்படாத நம் ஆண் குதிரைகள் காலவெளி முழுவதும் கட்டற்றுத் துள்ளிக் குதித்தே பாய்ந்து வருகின்றன.

நம்முடைய நெடிய இலக்கியப் பாரம்பரியத்தில் பெண்ணுடல் வர்ணிக்கப்பட்ட, வர்ணிக்கப்படும் அளவுக்கு ஆண் உடல் வர்ணிக்கப்படவில்லை. ஏன்? பெண்ணை உற்று நோக்கும் கட்டற்ற சுதந்திரம் ஆணுக்கு இருந்ததாலும் எழுதியவரெல்லாம் பெரும்பாலும் ஆண்களாக இருந்ததாலும் பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாகக் கவிஞர்கள் வர்ணித்துத் தள்ளியிருக்கிறார்கள். அந்த வாசிப்பு இன்னும் கூடுதலாக ஆண் முறைப்புக்கு எண்ணெய் ஊற்றி வளர்க்கிறது. அன்று ஆண் கையில் பேனா இருந்ததால் பாட்டெழுதினோம்.

இன்று ஆண் கையில் கேமரா இருப்பதால் பெண் உடலை இன்னும் உற்று நோக்கிப் படம் எடுக்கிறோம். செல்போனில் அவளறியா வண்ணம் படமெடுத்துப் பரப்புகிறோம். இணையத்தில் உலா வரும் மறைகேமரா பாலியல் காட்சிகள் (Hidden cam pornography) என்பவை இந்த ஆண் முறைப்பின் வக்கிர நீட்சி அன்றி வேறென்ன?

இதில் விதவிதமான பார்வைகள் உண்டு. என்னோடு அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருமுறை எங்கள் சக ஊழியர் ஒருவரைக் குறிப்பிட்டு, “சார்.. அவர் பெண்களோடு பேசும்போது பெண்களின் உதடுகளை முறைத்துப் பார்த்தபடிதான் பேசுகிறார் கவனிச்சீங்களா?” என்றார். கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் பழக்கம் ஆண் கண்ணுக்கு நீண்ட காலமாகவே இல்லை. உதடுகளில் பார்வை குவிப்போர், மாராப்பில் பார்வை குவிப்போர், சேலை விலகலில் பார்வை குவிப்போர், பாதங்களில் பார்வை குவிப்போர் எனப் பார்வைகள் பலவிதமாக இருக்கின்றன. இதற்கு இரையாகிப் பலியாகும் பெண் மனங்களும் உண்டு.

பார்வைகள் மாறட்டும்

மீண்டும் தொடக்க வரிகளுக்குச் செல்வோம். அந்த வகுப்பறையில் இருந்த 17 மாணவர்களில் இரண்டு பேர் மட்டும்தான் இப்படிச் சூழல் மறந்த ‘தியான நிலை’க்குச் சென்றவர்கள். மற்ற பையன்கள் இலக்கியத்தைத்தான் பின் தொடர்ந்தார்கள். அவர்களால் முடிந்தது இவர்களால் ஏன் முடியாமல் போயிற்று? பெண்ணை உடம்பாகப் பார்க்காமல் சக மனுஷியாக, சக மாணவியாகப் பார்க்கும் பார்வை பண்படுத்தப்பட்ட மனதுக்கு வந்துவிடும்தான்.

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்

என்பதுபோலவும் ‘கண்கள் இரண்டும் என்று உன்னைக் கண்டு பேசுமோ’ என்றும் பார்வைகளில் பண்பட்டவையும் ஆண்களிடம் உண்டு. அத்தகைய பார்வைகள் வளரட்டும். ஆனால், பெண்ணை வெறும் உடம்பாக, போகப்பொருளாக மட்டும் வெறிக்கிற பார்வையை ஆண்மனம் சீர்த்தூக்கிச் சரிசெய்ய வேண்டும். அது முடியாத காரியமில்லை. ஆண் மனமும் வாசிப்பாலும் வளர்ப்பாலும் பண்படக்கூடியதுதான். பெண்ணை ஒடுக்குவதற்கு ஆணின் பார்வையும் பயன்படும் இழிநிலை ஒழியட்டும். பெண்கள் சுதந்திரமாக வாழ ஆணின் ‘பார்வையில்’ தலைகீழ் மாற்றங்கள் நடக்கட்டும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x