Last Updated : 07 Jul, 2014 04:46 PM

 

Published : 07 Jul 2014 04:46 PM
Last Updated : 07 Jul 2014 04:46 PM

மணிக்கட்டில் ஒரு குட்டி தேவதை

கையில் அணியும் வாட்ச் நேரத்தை அறியப் பெரியவர்களுக்குப் பயன்படுகிறது. ஆனால் இளைஞர்களுக்கு வாட்ச் அணிவது ஸ்டைல். தங்களைப் நாகரிகமானவர்களாகக் காட்டிக்கொள்ள நடை, உடை, பாவனைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் இளைஞர்களுக்கு வாட்ச் கூடுதல் கவர்ச்சி அம்சம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் வாட்ச் என்பது வாட்ச் மட்டுமே. இப்போது வரும் நவீன ஆன்ட்ராய்டு அணிகலனை வாட்ச் போல் மணிக்கட்டில் கட்டிக்கொள்ளலாம். ஆனால் வெறுமனே நேரத்தை மட்டும் காட்டுவதோடு தனது பணியை அது நிறுத்திக்கொள்வதில்லை. விளக்கைத் தேய்த்தால் வரும் பூதம் மேற்கொள்ளும் பல மாயமான பணிகளைச் செய்து முடிக்கிறது நவீன ஆன்ட்ராய்டு வாட்ச் (வசதிக்காக வாட்ச் எனச் சொல்லலாம்).

ஸ்மார்ட் போன்களின் அசுர வளர்ச்சியின் காரணமாக வாட்சின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்னும் பயம் இருந்தது. ஏனெனில் பழைய வாட்ச்களில் நேரம் மட்டுமே பார்க்க முடிந்தது. காலையில் கோழி கூவுவது போல் இனிமையாக நம் காதில் கூவாது வாட்ச். ஆனால் மொபைல் போன்கள் அப்படியல்ல. எத்தனை மணிக்கு எழ வேண்டும் என அதனிடம் குறிப்பிட்டுவிட்டால் போதும் அவை மிகச் சரியாக நம்மை எழுப்பிவிடும். எப்படிக் குரல் கொடுத்து எழுப்ப வேண்டும் என்ற குறிப்பையும் அவற்றிடம் தெரிவித்துவிடலாம். என்னவொரு வசதி. இதனால்தான் வாட்ச்களின் காலம் முடிந்துவிட்டதோ என்ற அச்சம் தோன்றியது.

ஆனால் இன்று அந்தப் பயம் தேவையில்லாததாகிவிட்டது. இனி வாட்ச்களும் போன்களுக்குச் சவால் விடலாம். ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் மொபைல் போன்களில் நிகழ்த்திய மாயங்களை வாட்ச்களிலும் நிகழ்த்த முடியும். மொபைலைப் பையிலிருந்து வெளியே எடுத்து நேரம் பார்த்த காலம் மங்கத் தொடங்கியுள்ளது. இனி வாட்ச் வழியே மொபைலில் பேசலாம், மெசேஜ் அனுப்பலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், வழி கேட்கலாம்.

ஸ்மார்ட் வாட்ச்களில் சிம்மைப் பொருத்துகிறார்கள். உடற்பயிற்சிக்கான ஆலோசனைகளை அறிந்து கொள்ள வசதி செய்ய முயற்சி செய்கிறார்கள். எழுத்துகளும் எண்களும் உங்கள் எதிரில் கண்ணைச் சிமிட்டும். எவ்வளவு கலோரியை எரித்துள்ளோம் என்பதை அறிந்து நடையைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

வாடிக்கையாளர்களைப் பரவசப்படுத்தித் தங்கள் சந்தையின் பரப்பை விஸ்தார மாக்க ஆன்ட்ராய்டு அணிகலன் தயாரிப்பு நிறுவனங்கள் உற்சாகமாகச் செயல்படுகின்றன. அவர்கள் விரும்புவதை எல்லாம் செய்து முடிக்க எப்போதும் உறுதுணையாக உள்ளன தொழில்நுட்பங்கள். பிறகென்ன மகாராஜாக்கள் ஜமாய்க்கிறார்கள். கூகுள் ஆண்ட்ராய்டில் இயங்கும் சாம்சங் கியர் லைவ், எல்ஜி ஜி வாட்ச் ஆகியவை சந்தையில் கிடைக்கின்றன.

கூகுளின் ஆன்ட்ராய்டு வியர் (Android Wear), தொழில்நுட்பத்தின் எல்லா சாத்தியங்களையும் தொட முயல்கிறது. கூகுள் தேடுபொறிக்கு டைப் செய்ய வேண்டிய அவசியமல்ல, ‘ஓகே கூகுள்’ என்று சொன்னாலே போதும். குரலைப் புரிந்துகொண்டு தேடிய தகவல்களைத் தரும். தயாரிப்பாளர்களும் சாஃப்ட்வேர் டெவலப்பர்களும் போதுமான ஆதரவு தருகிறார்கள். இதன் வடிவமைப்பும் நேர்த்தியாக உள்ளது. ஆனால் பேட்டரி லைஃப்தான் திருப்திகரமாக இல்லை. மேலும் இன்னும் பல வசதிகளுக்காக டச் ஸ்கிரீனைத்தான் நாட வேண்டியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கியர் லைவ்வில் ஆண்ட்ராய்டின் செயல்பாடு நன்கு உள்ளது. டிஸ்ப்ளே சிறப்பானது. கையில் அணிய கச்சிதமானது. தண்ணீரை எதிர்த்து நிற்கும் வசதி கொண்டது. ஆனால் இதிலும் பேட்டரிதான் தொல்லை. தினந்தோறும் சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் பார்க்க சிரமம் கொடுக்கிறது என்கிறார்கள். இதன் விலை ரூ. 15,900.

எல்.ஜி. வாட்ச் சிறப்பாகச் செயல்படுகிறது. சார்ஜ் செய்வது எளிது. தண்ணீர் புகாத தன்மை உண்டு. சூரிய ஒளியில் எளிதாகப் படிக்க முடியும். ஆனால் பேட்டரி ஆயுள் கம்மி, வடிவமைப்பு கச்சிதமாக இல்லை, டிஸ்ப்ளே ஈர்க்கும்படியாக இல்லை என்னும் புகார்கள் உள்ளன. இதன் விலை ரூ. 14,999.

ஆன்ட்ராய்டு வாட்ச்களை ஸ்மார்ட் போன்களுக்கு மாற்று என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஆன்ட்ராய்டு வாட்ச் இருந்தால் மொபைல்களை அடிக்கடி எடுக்க வேண்டிய அவசியமல்ல. மொபைல் செய்த பல வேலைகளை ஆன்ட்ராய்டு வாட்ச் செய்யும். ஏனெனில் ஆன்ட்ராய்டு வாட்ச் ப்ளுடூத் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

உங்கள் ஆன்ட்ராய்டு வாட்ச் போனின் அறிவிப்பு பட்டைபோல் செயல்படும். இப்போதைக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆர்டர் செய்து வாட்ச்களை வாங்கலாம். ஆர்டர் செய்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் உங்கள் கைக்கு வாட்ச் வந்து சேரும் என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x