Published : 10 Oct 2017 10:53 am

Updated : 10 Oct 2017 10:53 am

 

Published : 10 Oct 2017 10:53 AM
Last Updated : 10 Oct 2017 10:53 AM

பொறியியல் என்னும் பொறி: அச்சுறுத்தும் போலி ஆசிரியர்கள்!

 

பொ

றியியல் துறையை மீட்டெடுக்க நடப்பில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதுதான் முதல் படி. படித்த படிப்புக்கும் நடைமுறைப் பணிச்சூழலுக்கும் இடையிலான இடைவெளி குறைக்கப்படும் போதுதான் பொறியியல் பட்டதாரிகளின் திறன் சர்வதேச தரத்துக்கு உயரும். மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அதன் நோக்கத்தில் முழுமையடைய பாடம் கற்பிக்கும் முறைகளையும் ஆசிரியர்களின் திறனையும் மேம்படுதல் அவசியம்.

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் நிர்ணயித்துள்ள கல்விக் கொள்கையின்படி, பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவருக்கு 1 ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதிலும், பேராசிரியர், இணைப் பேராசிரியர், துணைப் பேராசிரியர் ஆகியோர் 1:2:6 என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால், இந்த விகிதம் கடைப்பிடிக்கப்படாதது மட்டுமல்லாமல் பல பொறியியல் கல்லூரிகள் குறைந்தபட்ச ஆசிரியர்கள்கூட இன்றிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அம்பலப்படுத்திய ராகேஷ் துப்புடு

வாரங்கல் என்.ஐ.டி.யில் பொறியியல் முடித்து ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியவர் ராகேஷ் ரெட்டி துப்புடு. தற்போது ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் இவர், உயர்கல்வித் துறையின் பல இருட்டு மூலைகளில் தகவல் உரிமைச் சட்டம் வாயிலாக வெளிச்சம் பாய்ச்சி வருகிறார். 2 வருடங்களுக்கு முன்பு இவர் தலைமையிலான குழு ஒன்று இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. பொறியியல் கல்லூரிகள் அதிகமிருக்கும் 8 மாநிலங்களின் சுயநிதிப் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களை அது ஆராய்ந்தது.

அதன் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 8மாநிலங்களில் உள்ள 90 சதவீதப் பொறியியல் கல்லூரிகளில் குறைந்தபட்சம் ஒரு போலி ஆசிரியர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, ஒரே ஆசிரியர் இரண்டு கல்லூரிகளில் பணியாற்றுவதாகக் கணக்குக் காட்டும் பித்தலாட்டம் நடந்தேறியது. பின்னர், தங்கள் தரப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அதிகாரபூர்வத் தளத்திலிருந்தே பொறியியல் கல்லூரிகளின் போலி ஆசிரியர்களை இக்குழு பட்டியலிட்டது. இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட போலி ஆசிரியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம்.

தமிழகம் ‘முதன்மை’

இந்த எண்ணிக்கையில் 8,842 என்ற அளவில் தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது. எண்ணிக்கையில் மட்டுமல்ல; இந்தப் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களின் தரமும் கவலைக்குரியது. பொறியியல் மேற்கல்வி முடிப்பவர்களில் பலரும் ஊதியம் காரணமாகப் பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட வெவ்வேறு பணிகளில் சேரவே விரும்புகின்றனர். இந்தப் பரிசீலனையில் கடைசி வரிசையில் ஆசிரியர் பணி வருகிறது. இவற்றிலும் திறன் படைத்தவர்களைக் கல்லூரிகள் தங்கள் சுய வளர்ச்சிக்காக வகுப்பறைகளில் இருந்து நிர்வாகப் பிரிவுக்கு நியமித்துவிடுகின்றன. இந்த வகைகளில் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை கவலைக்குரியதாக மாறிவருகின்றன.

பிராய்லர் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையை இலக்காகக் கொண்டு இயங்கும் ‘பிராய்லர்’ பள்ளிகளை நன்கறிவோம். இதே ரீதியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் பலவும் பிராய்லர் உத்தியையே பின்பற்றுகின்றன. தேர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பாடப் புத்தகங்களுக்குள் மாணவர்களை முடக்குகின்றன. தேர்ச்சி சதவீதத்தை விளம்பரப்படுத்தி அடுத்த கலந்தாய்வில் அதிக மாணவர்களைச் சேர்ப்பதும் அவர்களது நோக்கம். புத்தகங்களுக்கு வெளியே ஆராய்ச்சியும் அனுபவமும் பொறியியல் மாணவர்களுக்கு அதிகம் தேவை.

சுய ஆர்வத்தைத் தூண்டல், வழிகாட்டுதலுடனான ஆராய்ச்சி, துறையின் எதிர்கால வளர்ச்சியுடன் ஒப்பிடும் வாய்ப்பு, பாடத்திட்டம் அல்லாத மாணவர்களின் ஆளுமைத் திறன் மேம்பாடு ஆகியவை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் போதுமானதாக வழங்கப்படுவதில்லை. துறை சார்ந்த அடிப்படை அறிவு மற்றும் திறன்களில் இளம் பொறியியல் பட்டதாரிகள் தடுமாறுவதாக வேலை வழங்கும் நிறுவனங்கள் குறைபடுவதற்கு இந்த பிராய்லர் கல்லூரிகளின் போக்கே பிரதான காரணம்.

7CH_Leninstory ராகேஷ் துப்புடுrightஎங்கே போனது தரம்?

நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் சேவை, உற்பத்தி ஆகிய இரண்டு துறைகளுக்குமே பொறியியல் பட்டதாரிகளே அடித்தளமிடுகிறார்கள். அவர்களை உருவாக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் பெரும் கேள்விக்குள்ளாகிவருகிறது. அண்மையில் நாட்டின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்குமான தர வரிசைப் பட்டியல் வெளியானது. பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் தமிழகத்தின் 30 சதவீதக் கல்லூரிகள் மட்டுமே இந்தத் தரவரிசைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஏனைய 70 சதவீதக் கல்லூரிகள் தங்களின் தரத்தைத் தாங்களே ஐயத்துக்கு உட்படுத்தி உள்ளனர். இக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

இத்தனை கல்லூரிகள் அவசியமா?

“தேவைகள் அதிகரிப்பதால் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துவருகிறது. இந்த அதிகரிப்பே கல்வியின் தரம் மற்றும் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளன. உலக அளவில் முதல் 200 கல்வி நிலையங்கள் பட்டியலில் இந்தியாவின் கல்வி நிறுவனம் எதுவும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது” எனக் கடந்த வருடம் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார். கால் நூற்றாண்டாகப் பெரும் வளர்ச்சி கண்ட பொறியியல் கல்லூரிகள் தற்போது சரிவைக் கண்டிருப்பதற்கு அவற்றின் தேவைக்கு அதிகமான பெருக்கமும் ஒரு காரணம். எதிர்பார்த்த வளர்ச்சிக்குப் பதில் தற்போது வீக்கமே எஞ்சியிருக்கிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author