மருத்துவக் கல்விக்காக முப்பரிமாண உடல் உறுப்புகள்

மருத்துவக் கல்விக்காக முப்பரிமாண உடல் உறுப்புகள்
Updated on
1 min read

மனித உடல் கூறு பற்றிய உண்மைகளை அறிந்தால் மட்டுமே நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அதற்காக, இறந்து போன மனிதர்களின் உடலை வைத்து மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்கின்றனர். ஆனால் அதற்குத் தேவையான அளவுக்கு மனித உடல்கள் கிடைப்பதில்லை. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் கதாநாயகன் கமலிடம், ‘ஒரு பாடி கொண்டு வருமாறு’ கூறுவது போல மருத்துவ மாணவர்களிடம் கூற முடியாது.

மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் இத்தகைய இக்கட்டான நிலைமையை போக்கும் வகையில் அரிய கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது முப்பரிமாண மனித உடல். மனித உடலில் உள்ள கழுத்து, தலை, மார்பு, அடி வயிறு, சிறு, சிறு உறுப்புகள் என ஒவ்வொன்றும் தனித்தனியாக அச்சு அசல் மனித உடலைப் போலவே முப்பரிமாணத்தில் அவை வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த உறுப்புகளுக்குள் ஓடும் மிகச்சிறிய ரத்த நாளங்கள் வரை ஒவ்வொன்றும் நுட்பமாக வடிவமைத்து உண்மையான மனித உறுப்புகளாகவே தோற்றமளிக்கின்றன. மனித திசு மட்டும் மிஸ்சிங்.

உண்மையான உடல் உறுப்புகளின் மாதிரிகளை சிடி ஸ்கேன் மற்றும் லேசர் ஸ்கேன் எடுத்து அவற்றை பிளாஸ்டர் போன்ற பவுடர் மற்றும் பிளாஸ்டிக் பொருளில் பதிவு செய்து முப்பரிமாண வடிவில் உருவாக்கியுள்ளனர்.இந்த கண்டுபிடிப்பு குறித்து பல்கலைக்கழகத்தின் மனித உடல் கல்வி மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பவுல் மெக்மெனானின் கூறியதாவது:

பல நூற்றாண்டுகளாக மனித உடல்களை வைத்து மனித உறுப்புகள் குறித்த மருத்துவக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல நாடுகளில் மனித உடலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடுமையான விதிமுறைகள் மற்றும் மனித உடல் தட்டுப்பாடால் மிக அதிக அளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதும் சில மருத்துவக் கல்லூரிகளின் வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில், தசை நார், தசை, ரத்த நாளங்கள் போன்றவற்றை மிக நுட்பமாக அறிந்து கொள்ளாமல் மருத்துவக் கல்வியை மாணவர்கள் பெறுவது சாத்தியமில்லை.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நாங்கள் தயாரித்துள்ள இந்த முப்பரிமாண மனித உடல் உறுப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். ரேடியோ கிராபிக் இமேஜ் மூலமாக உருவாக்கியுள்ள இந்த உறுப்புகளில் ஒரு தாளின் தடிமன் அளவுக்கு மெலிதான பகுதிகளைக் கூட சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம். எனவே, ஒரே உடலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் துர்நாற்றம். மனித உடல் தட்டுப்பாடு. அதிக செலவு போன்ற சிக்கல்களில் இருந்து மருத்துவக் கல்லூரிகள் தப்பிக்கலாம்” என்று தெரிவிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in