Last Updated : 07 Oct, 2017 04:37 PM

 

Published : 07 Oct 2017 04:37 PM
Last Updated : 07 Oct 2017 04:37 PM

இல்லம் சங்கீதம் 4: தொடக்கத் தடுமாற்றங்கள்

“எந்தக் காற்றின் அளாவலில்

மலர் இதழ்கள் விரிந்திடுமோ?

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ?”

- தாமரை

இனிய நினைவுகளை அள்ளித் தரும் தேனிலவு அனுபவம் இத்தனை சிக்கலாக மாறுமென சாருமதி எதிர்பார்க்கவில்லை. படுக்கையறையில் தன்னிடமிருந்து போதுமான இடைவெளியில் தூங்குவதாய் பாவனை செய்யும் அறிவழகனைக் கோபமும் பரிதாபமும் ஒருசேரப் பார்த்தபடி இருந்தாள் சாருமதி.

திருமணத்தன்றும் வரவேற்பு நிகழ்வுகளிலும் ஆறடி உயரமும் அசத்தும் பொலிவுமாக அறிவழகன் தன் தோள் உரசி நின்றபோது, அந்தத் தோளில் வாழ்நாள் எல்லாம் சாய்ந்திருந்தால் போதுமென சாருமதிக்குத் தோன்றியது. ‘ஏகப் பொருத்தமான மாப்பிள்ளை’ எனத் தோழிகள் சாருமதியின் காதில் கிசுகிசுத்தபோது பெருமையாக இருந்தது. முன்பு திருமண ஏற்பாடுகளைச் சாக்கிட்டு அவன் தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் அவனது குரலில் சொக்கிப்போவாள். ‘இவன் என்னவன். எனது வாழ்நாள் முழுக்க உடனிருக்கப்போகிறான்’ என்ற நினைப்பே பெரும் உற்சாகத்தை அவளுக்குத் தந்தது. தோஷப் பரிகாரம் என்கிற பெயரில் சாந்தி கல்யாணத்தைத் தள்ளிவைத்ததுடன், இருவரையும் கோயில் கோயிலாகக் குடும்பத்தினர் அலையவைத்தபோது அறிவழகன் ரொம்பவும் அலுத்துக்கொண்டான். சாருமதியோ அவனது தவிப்பையும் தடுமாற்றங்களையும் ரசித்தாள்.

புதிய பூதம்

சடங்குகள் அனைத்தும் நிறைவடைந்ததும், அறிவழகன் யோசனைப்படியே அவன் விரும்பிய கோடை வாசஸ்தலம் தேனிலவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொண்டை ஊசி வளைவு ஒவ்வொன்றிலும் வேகம் குறையாது காரைச் செலுத்தும் கணவனின் லாகவத்தை, அவன் தோள் சாய்ந்து ரசித்தபடி தொடங்கியது சாருமதியின் தேனிலவுப் பயணம். புது இடத்தின் குளுமை புது மணத் தம்பதிக்கு இடையிலான வெம்மைக்கு உவப்பானதாக இருந்தது. ஆனால், இருவரும் ஆசையுடன் தனித்திருந்த இரண்டொரு இரவுகளில் புதிய பூதம் கிளம்பியது. ‘தாம்பத்தியம் என்பதில் இத்தனை தடுமாற்றங்கள் இருக்குமா’ என்ற அச்சம் சாருமதியைக் கவ்வியது. இருவருக்கும் இடையே பிரச்சினை இன்னதென்று புலப்படவில்லை.

ஆனால், அறிவழகனின் முகம் மாறியதும் தன்னைப் பார்க்காமல் அவன் தள்ளிப்படுத்ததும் அவளை நிலைதடுமாறச் செய்தன. இல்லறப் பயணத்தில் மாறும் சூழலுக்கு ஏற்ப அவனை எப்படிக் கையாளுவது என சாருமதிக்குப் பிடிபடவில்லை. அவனிடம் மனம்விட்டுப் பேசலாம் என்றால் மணவாழ்வின் தொடக்கத்திலேயே இவற்றையெல்லாம் எப்படிப் பேசுவது, என்னவென்று ஆரம்பிப்பது எனவும் புரியவில்லை. இருவருக்கும் பொதுவான நெருக்கத்தில் போதுமான முன்னேற்றம் இல்லாததற்கு, தன்னைப் பழியாக்கித் தானாகப் பின்வாங்குபவனிடம் எதையாவது பேசி விரிசலை ஏற்படுத்துவதா என சாருமதி தயங்கினாள்.

இப்போதுகூட மடிக்கணினியில் அவசியமே இல்லாத அலுவலகக் கோப்புகளை ஆராய்வது போன்ற பாசாங்கில் இருந்தான் அறிவழகன். புதுமாப்பிள்ளைக் களை மறைந்து, அவனது முகம் வாடியிருந்தது. மனைவி மீது காதலும் மோகமுமாக அவனது முயங்கல் முயற்சிகள் ஒவ்வொன்றும் ஏனோ தோல்வியில் முடியவே, தன் மீதுதான் தவறோ என்று விலகத் தொடங்கியவனைப் பார்த்து ஆரம்பத்தில் சாருமதிக்குச் சிரிப்பு வந்தது. அவள் இதழ் ஓரம் குறுநகையைப் பார்த்ததும் அவன் மேலும் அடிபட்டுப்போனதை உணர்ந்த சாருமதி சுதாரித்தாள்.

இந்தத் தருணத்தைக் கண்ணாடியைப் போல் கவனமாகக் கையாள வேண்டும், சற்றே பிசகினாலும் சில்லுச் சில்லாகச் சிதறிவிடுவான் என்று அவளுக்குத் தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் அவன் மீது மட்டும் தவறில்லை என்பதும், அவனது ஆரோகண முயற்சிகளை முனைமழுங்கச் செய்ததில் தனக்கும் பங்கிருப்பதையும் சாருமதி உணர்ந்தாள்.

தாம்பத்திய அலை

மனைவியின் மன மாற்றங்களை உணராமல் பொழுது விடிந்ததும் ஊருக்குத் திரும்ப காரைத் தயார் செய்தான் அறிவழகன். அந்தப் புதிய வாகனம் திடீரென மக்கர் செய்யவே, மெக்கானிக்கைக் காலையில் வரச் சொல்லி அழைத்தான். தேனிலவு கசந்ததில் சாருமதிக்கு ஏமாற்றமாக இருந்தது. இரவு சமர்த்தாக உறங்குவதாகக் காட்டிக்கொண்டவனிடம் பேச முயன்றாள். அவன் பிடிகொடுக்கவில்லை. தாம்பத்திய வாழ்க்கை குறித்து அவள் இதுவரை கேள்விப்பட்டதும், ஆங்காங்கே வாசித்தவையும், இணையத்தில் மேய்ந்ததும் நடைமுறையில் இம்மியும் உதவவில்லையே என்று சலித்துக்கொண்டாள். ஆனாலும் ‘இவன் என்னவன், இவன் துணை கொண்டே இனி எதிர்வரும் பொழுதுகள், சிரமங்கள் ஒவ்வொன்றையும் கடக்கப்போகிறேன்’ என்ற இறுமாப்புடன் அவனை மென்மையாக அணைத்துக்கொண்டு தூங்கிப்போனாள்.

உறக்கம் அவ்வப்போது துண்டாட, இடையிடையே கனவுகள் அவளை அலைக்கழித்தன. அப்படியொரு கனவில் கடற்கரையோரம் அறிவழகனின் தோள் சாய்ந்து அவள் நடந்தபோது ஒரு ராட்சத அலை அவளைக் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவள் மூச்சுத் திணறி கடலின் ஆழத்தில் அமிழும்போது அறிவழகனைக் காணாது தேடினாள். பதற்றத்தில் கண்விழித்தபோது அவன் அத்தனை நெருக்கத்தில் மூச்சுமுட்டினான். அதுவரை தான் கண்டது அரைகுறை கனவென்றும், அந்த வலிய அலை அவள் கணவன் என்றும் சாருமதிக்குப் புரிந்தது. தனது இயல்பான எதிர்நீச்சல் முயற்சிகளை ஒத்திவைத்து, அலையின் வீச்சுக்கு ஒத்துழைப்பதை அடுத்தடுத்த மூழ்கலில் தெரிந்துகொண்டாள். விடிந்தபோது பழைய அறிவழகனைப் பார்க்க முடிந்தது.

இல்லறத்தின் அடிப்படை

ஒத்திசைந்தால் மட்டுமே தாம்பத்தியம் என்ற கடலில் முத்துக் குளிக்க முடியும் என்பதை அந்த இளம் தம்பதி அனுபவத்தில் உணர்ந்தார்கள். அதன் பின்னர் ஊர் திரும்புவதை ஒத்திப்போட்டு, தேனிலவை நீட்டிக்க ஒருமனதாக முடிவானது. கார் மெக்கானிக் கதவு தட்டி, “புது வண்டிங்க. லேசான ஸ்டார்டிங் பிராப்ளம்தான், மத்தபடி வேற எதுவுமில்லை” என்றார். மெக்கானிக் சென்ற பிறகு அவர் சொன்னதை அறிவழகனும் சாருமதியும் வெவ்வேறு தொனிகளில் சொல்லிப்பார்த்துச் சிரித்தனர்.

“மற்ற உயிரினங்கள் மத்தியில் தம் இனத்தைப் பெருக்கும் தேவைக்காக மட்டுமே உடல் சேர்க்கை என்பது இருக்கிறது. அறிவில் மேம்பட்ட மனித இனமோ அதை இன்பம் துய்க்கும் அனுபவமாக மாற்றி, அதில் கிடைக்கும் பிடிப்பை அடித்தளமாகக் கொண்டு கணவன், மனைவி, குழந்தைகள், குடும்பம், சமூகம் என அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தனக்காகக் கட்டமைத்துக்கொண்டுள்ளது. இல்லறத்தின் அடிப்படையான தாம்பத்திய உறவில் புதுமணத் தம்பதி எதிர்கொள்ளும் இடர்பாடுகள் ஏராளம். ஆண், பெண் சார்ந்தும் அவர்களின் மனம், உடல் சார்ந்தும் இந்த இடர்பாடுகள் வேறுபடும்” என்கிறார் மனநல மருத்துவர் கா.செந்தில்வேலன்.

சாருமதி - அறிவழகன் போன்ற புதுமணத் தம்பதிகளின் தாம்பத்திய சவால்களுக்கு மருத்துவ நிபுணர் சொல்லும் ஆலோசனைகளையும் தீர்வுகளையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x