

கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற உள்ளூர் அல்லாது ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் தமிழகச் சந்தை களுக்குத் தக்காளி தருவிக்கப்படுகிறது. ஆந்திரம், தமிழகப் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழைப் பொழிவால் தக்காளி விளைச்சல் அதிகரித்தது. அதனால், தமிழகச் சந்தைகளுக்குத் தக்காளி வரத்தும் அதிகமானது. இதனால், கடந்த இரு மாதங்களாக 15 கிலோ தக்காளிப் பெட்டி 100 ரூபாய்க்கு விற்பனையானது. இப்போது வெளிமாநிலத் தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து மீண்டும் தக்காளி விலை உயர்ந்து, 15 கிலோ பெட்டி 400 ரூபாயாக உயர்ந்துள்ளது.
கோழி இறைச்சி உற்பத்தியில் தேக்கம்: இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் கோழி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இரு மாதங்களுக்கு முன் கிலோவுக்குச் சுமார் 200 ரூபாய் என்கிற அளவில் விற்கப்பட்டு வந்த கோழி இறைச்சி இப்போது கிலோவுக்குச் சுமார் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வெயில் காலம் முடிந்து மழை தொடங்கினால் இந்த நிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மானியம்: மதுரை மாவட்டத்தில் குறுவைப் பருவத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். சிறுதானியங்கள், பயறு, எண்ணெய் வித்துகள் போன்ற மாற்றுப்பயிர் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் இதற்காக 48.83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.
கோதுமைக்கு வரம்பு நிர்ணயம்: கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், கோதுமைக்கான இருப்பு வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்து உள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு 3 ஆயிரம் மெட்ரிக் டன், சில்லறை விற்பனையாளர்களுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவுத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு விதித்துள்ள இந்த நிர்ணயம் 2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்கானது ஆகும்.
கோடை உழவு செய்ய வலியுறுத்தல்: தமிழகத்தில் கிட்டதட்ட 60 சதவீதம் மானாவரி நிலங்களால் ஆனது. அதனால் பெய்யவிருக்கும் மழை நீரை மண்ணுக்குள் தக்கவைத்துக்கொள்ள கோடை உழவு அவசியம். இதனால் ஈரத்தன்மை அதிகரிக்கும். தீமை உண்டாக்கும் பூச்சிகளின் லார்வாக்கள் மேலே வந்து அது பறவைகளுக்கு இரையாகும். மண்ணுக்கு அடியிலிருக்கும் களைகளின் விதை மேலே வந்து வெயில் பட்டு முளைவிடாமல் காய்ந்துபோகும். அதனால் வேளாண் துறை கோடை உழவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோடை உழவுக்கு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விவசாயிகள் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.
கறவை மாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி: கோயம்புத்தூர் சரவணன்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக வரும் ஜூன் 28ஆம் தேதி கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வம் உள்ள விவசாயிகள் மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 0422 2669965 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.