Published : 04 Oct 2017 10:38 AM
Last Updated : 04 Oct 2017 10:38 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சோப்புக் குமிழியில் வண்ணம் உண்டாவது எப்படி?

சோப்பு முட்டை விட்ட அனுபவம் உண்டா டிங்கு? சோப்புக் குமிழியில் வண்ணம் எப்படி உருவாகிறது?

– ப்ராங்க் ஜோயல், 4-ம் வகுப்பு, ஜெயின் வித்யாலயா, மதுரை.

சோப்பு முட்டைகள் விடாதவர்கள் யாராவது இருக்க முடியுமா ஜோயல்? குழந்தைப் பருவத்தில் சோப்புத் தண்ணீரிலிருந்து தோன்றும் குமிழிகளைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். யாருடைய குமிழி உடையாமல் நீண்ட நேரம் இருக்கிறது என்ற போட்டியெல்லாம் நடக்கும்.

சோப்புக் குமிழ்களின் மீது வெளிச்சம் ஊடுருவிச் செல்லும்போது, சோப்புப் படல அடுக்குகளில் ஒளி பிரதிபலிக்கப்பட்டுச் சிதறடிக்கப்படுகிறது. அப்போது நிறங்கள் பிரிந்து வானவில் நிறங்கள் தோன்றும். ஒரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா ஜோயல், எல்லாக் குமிழிகளும் வண்ணமயமாக இருப்பதில்லை. பெரும்பாலான குமிழிகள் நிறமற்றவையாகவே உள்ளன.

முட்டைக்குள் இருக்கும் வெள்ளைப் பகுதியும் மஞ்சள் பகுதியும் திரவமாக இருந்தாலும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் இருக்கிறதே, எப்படி டிங்கு?

– கே. வசுமதி, குன்னூர்.

முட்டைக்குள் இரண்டு திரவங்கள் இருந்தால்தான் ஒன்றோடு ஒன்று கலக்கும். முட்டைக்குள் இருக்கும் வெள்ளைப் பகுதிதான் திரவமாக இருக்கிறது. இதை அல்புமின் என்பார்கள். மஞ்சள் கரு திடப் பொருளாக இருக்கிறது. மஞ்சள் கருவைச் சுற்றி பிளாஸ்மா, விட்டலின் என்ற இரண்டு சவ்வுகள் பாதுகாப்பாக மூடியிருக்கின்றன. இதனால் இரண்டும் கலப்பதில்லை, வசுமதி.

தீபாவளி நெருங்குகிறது. பட்டாசு வாங்குவதற்குப் பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறேன். நீ பட்டாசு வாங்கியாச்சா டிங்கு?

– என். விஜய், ஸ்ரீவில்லிபுத்தூர்.

வெடிச் சத்தம் எனக்குப் பிடிக்காது என்பதால் சின்ன வயதில் பட்டாசுகளை வெடித்ததில்லை. வளர்ந்த பிறகு ஒலி மாசு, காற்று மாசு போன்றவற்றைக் கருத்தில்கொண்டு, பட்டாசு வாங்குவதை எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டோம். சத்தமில்லாத, கண்களுக்கு விருந்தளிக்கும் வாண வேடிக்கைகளை அளவோடு பயன்படுத்துங்கள். நம் மகிழ்ச்சி பிறருக்குத் தொந்தரவாகவோ, பூமிக்கு ஆபத்தாகவோ இல்லாமல் பார்த்துக்கொண்டால் பண்டிகை அர்த்தமுள்ளதாக இருக்கும் இல்லையா, விஜய்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x