Published : 16 Oct 2017 10:33 AM
Last Updated : 16 Oct 2017 10:33 AM

வீட்டிலேயே சர்வீஸ்

கா

ர் வாங்குவதே சொகுசுக்காகதான். ஆனால் அந்த காரில் எதாவது பிரச்சினை என்றால் அதை தீர்ப்பதற்குள், தாவு தீர்ந்து விடும். இதுபோன்ற சர்வீஸ் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மைடிவிஎஸ் ஒரு புதிய தீர்வினை வழங்குகிறது. ஆறு மாநிலங்களில் 200 கார் சர்வீஸ் மையங்களை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக வீடு அல்லது அலுவலகத்துக்கு வந்தே சர்வீஸ் செய்யும் வசதியை மைடிவிஎஸ் வழங்க திட்டமிட்டிருக்கிறது. முதல் கட்டமாக நவம்பர் 1-ம் தேதி முதல் சென்னையில் இந்த சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக 20 மொபைல் வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 60 முதல் 100 கார்களை சர்வீஸ் செய்ய முடியும் என்றும், பிரச்சினை ஏற்பட்டால் 45 நிமிடங்களில் சம்பந்தபட்ட இடத்தை அடைய முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?

கார் ஓட்டும் போது இருவகைகளில் பிரச்சினை ஏற்படலாம். காரில் பயணிக்கும் போது பழுது ஏற்படுவது அல்லது ஏதேனும் சிறு பிரச்சினை இருக்கும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என இரு வகை பிரச்சினைகள் ஏற்படலாம். இரண்டுக்குமே காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது முதல் என்ன பிரச்சினை. அடுத்து எவ்வளவு தொகை செலவாகும் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கலை களைவதற்காக புதிய வசதியை மைடிவிஎஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. காரில் ஏதாவது பிரச்சினை என்றால் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் வீடு அல்லது அலுவலகத்துக்கு (அலுவலகம் அனுமதிக்கும் பட்சத்தில்) மைடிவிஎஸ் நிறுவனத்தின் மொபைல் வேன் வந்து, உங்கள் காரில் என்ன பழுது என்பதை கண்டறியும்.

ஒரு காரில் ஏற்படும் 8,400 பிரச்சினைகளை ஏற்கெனவே இந்த நிறுவனம் முறைப்படுத்தி வைத்திருப்பதால், காரின் பழுதினை உடனடியாகக் கண்டறியமுடியும். இதுவரை சோதனை அடிப்படையில் 75 சதவீதமான பிரச்சினைகளை வீட்டிலே தீர்க்கப்பட்டிருப்பதாக டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஸ்ரீனிவாச ராகவன் தெரிவித்தார். ஒரு வேளை இந்த பிரச்சினைகளை வீட்டில் தீர்க்க முடியவில்லை என்றால் அருகில் உள்ள மைடிவிஎஸ் சர்வீஸ் மையத்துக்கு எடுத்துசென்று பிரச்சினைகளை சரி செய்ய முடியும்.

தவிர உங்கள் வாகனத்தை பற்றிய முழுமையான அறிக்கை ஒன்றும் அளிக்கப்படும். உடனடியாக செய்ய வேண்டியது. சில மாதங்களுக்குப் பிறகு செய்ய வேண்டியது என உங்கள் வாகனத்தை பற்றிய அறிக்கை தயார் செய்து கொடுக்கப்படும். அதனை அடிப்படையாக வைத்து உங்கள் வாகனத்தை பராமரிக்கலாம் என ஸ்ரீனிவாச ராகவன் தெரிவித்தார்.

வரும் ஜனவரி மாதம் முதல் இந்த சேவை பெங்களூருவில் தொடங்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட இருக்கிறது. மார்ச் மாதத்துக்குள் மைடிவிஎஸ் சேவை மையங்களை 250 ஆக உயர்த்தவும், 2020-ம் ஆண்டுக்குள் 1,000 ஆக உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இனி சர்வீஸ் சென்டர்களில் மணிக்கணக்காக காத்திருக்கத் தேவையில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x