Published : 23 Oct 2017 11:26 AM
Last Updated : 23 Oct 2017 11:26 AM

முதலிடத்தில் ஜெனரல் மோட்டார்ஸ்

ட்டோமொபைல் துறையில் புதுமைகளுக்கும் போட்டிகளுக்கும் எப்போதுமே பஞ்சம் இருக்காது. இந்தியாவில் இனி தயாரிப்புகளை விற்பனை செய்யப் போவதில்லை என அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. ஆனாலும் அது முதலிடத்தில் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். அதிலும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் எஸ்யுவி மாடல் கார்களை ஏற்றுமதி செய்ததில் ஜெனரல் மோட்டார்ஸுக்குத்தான் முதலிடம்.

நடப்பு நிதி ஆண்டின் (2017-18) முதல் ஆறு மாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் மொத்தம் 45,222 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்நிறுவனம் 30,613 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான கார்களை ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்துக்கு புணே அருகே தலேகான் பகுதியில் ஆலை உள்ளது. இங்கிருந்து இடது கை பழக்கம் கொண்ட பீட் (எல்ஹெச்) வாகனங்களைத் தயாரித்து சிலி, மத்தியஅமெரிக்கா, பெரு, அர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்துள்ளது.

நிசான் மைக்ரா ஒரு காலத்தில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிறுவனம் சிறிய ரகக் கார் ஏற்றுமதியில் தற்போது 10-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிறுவனம் 13,599 கார்களை நடப்பு நிதி ஆண்டின் முதல் அரை ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 39,017 கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது இந்நிறுவன ஏற்றுமதி 65 சதவீதம் சரிந்துவிட்டது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக பிரான்சில் உள்ள நிசான் ஆலையிலிருந்து மற்ற நாடுகளுக்கான ஏற்றுமதியை நிசான் செய்யத் தொடங்கி இருப்பது, ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணம்.

ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து கார்களை நிசான் ஏற்றுமதி செய்து வந்தது. 2010-ம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இதே நடைமுறையை நிசான் பின்பற்றியது. இதுவரை மொத்தம் 6.20 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்நியச் செலாவணி வரவு ரூ. 30 ஆயிரம் கோடியாக இருந்தது.

ஃபோக்ஸ்வேகன் வென்டோ 41,430 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதி ஆண்டில் இந்நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபோர்டின் தயாரிப்பான எகோ ஸ்போர்ட் 39,935 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதன் மூலம் இந்நிறுவனம் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஃபோர்டு பிகோ 26,331 கார்கள் ஏற்றுமதியானதால் நான்காமிடமும் ஃபோர்டு நிறுவனத்துக்கே கிடைத்தது.

ஹூண்டாய் கிரெடா 25,690 வாகனங்கள் ஏற்றமதியாகியுள்ளன. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 ரக கார் 19,719 என்னும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்நிறுவனம் 5-வது மற்றும் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாருதி சுஸுகி பலேனோ 18,869 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதனால் இந்நிறுவனம் 7-வது இடத்தில் உள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் 16,081 கார்கள் ஏற்றுதியானது. நிசான் சன்னி 13,847 கார்களும், மைக்ரா 13,500 கார்களும் ஏற்றுமதியானதில் இவை முறையே 8, 9 மற்றும் 10-வது இடத்தில் உள்ளன.

கொரியாவின் ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்பான கிரெடா மற்றும் கிராண்ட் ஐ10 ஆகியவற்றின் ஏற்றுமதி ஸ்திரமாக உள்ளது. இவை கடந்த ஆண்டில் இருந்த அதே 5-வது மற்றும் 6-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

மாருதி நிறுவனத்தின் பாலேனோ ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 22,997 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் தற்போது 18,869 கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ள நிசான் சன்னி 13,847 கார்கள் ஏற்றுமதியானதால் 9-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஹூண்டாய் எக்ஸென்ட் இந்தப் பட்டியலிலிருந்து வெளியேறிவிட்டது. உள்நாட்டில் விற்பனை மட்டுமின்றி வெளிநாட்டு ஏற்றுமதியும் நிறுவனங்களின் அந்தஸ்தை பறைசாற்றும் விஷயம்தானே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x