இயக்குநரின் குரல்: சீனு ராமசாமியின் தம்பி இயக்கும் படம்!

இயக்குநரின் குரல்: சீனு ராமசாமியின் தம்பி இயக்கும் படம்!
Updated on
2 min read

மனித உறவுகளையும் அவற்றின் உணர்வு நிலைகளையும் மிகையின்றிச் சித்தரிப்பதில் பெயர் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. அவருடைய உடன்பிறந்த தம்பியான ஆர்.விஜயகுமார், ‘அழகிய கண்ணே’ என்கிற தலைப்பில் தனது முதல் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவகுமார் நாயகனாகவும் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

இயக்குநர்களின் தம்பிகள் நடிக்க வருவது வழக்கம். நீங்கள் இயக்க வந்திருக்கிறீர்கள்? - அண்ணனின் அறிமுகப் படமான ‘கூடல் நகர்’ தொடங்கி ‘மாமனிதன்’ வரை அவரிடம் முதன்மை உதவியாளராகப் பணிபுரிந்து சினிமாவைக் கற்றுக்கொண்டேன். அண்ணனுடைய உதவியாளர்களுக்கு நான் அவருடைய தம்பி என்பது பல வருடங் களுக்குப் பிறகுதான் தெரிய வந்தது.

நான் அவரிடம் கடைசி அசிஸ்டெண்டாகச் சேர்ந்து, மெல்ல மெல்ல முன்னேறி அசோசியேட் என்கிற நிலைக்கு வந்தேன். அண்ணனின் கதைத் தேர்வும் கதாபாத்திர வார்ப்பும் எனக்குப் பிடிக்கும். கதைக் களத்தை உயிர்ப்புடன் காட்சியில் கொண்டு வர மெனக்கெடுவார். அப்படிப்பட்டவரின் தம்பியான எனக்கும் சினிமா இயக்கம் பிடித்துப்போனதில் வியப்பில்லை.

திண்டுக்கல் ஐ.லியோனியின் மகனை நாயகனாக்க என்ன காரணம்? - கதைதான் காரணம். ‘மாமனிதன்’ படத்தில் சிறு துணைக் கதாபாத்திரத்தில் லியோ சிவகுமார் நடித்திருந்தார். அப்போது இருவரும் நண்பர்கள் ஆனோம். அவர் ஓர் உதவி இயக்குநரும்கூட. ‘நான் ஹீரோவாக நடிக்க ஏற்ற வகையில் உங்களிடம் கதை ஏதும் இருக்கிறதா?’ என்று கேட்டார்.

இரண்டாவது படமாக எடுக்கலாம் என்று நான் எண்ணியிருந்த உதவி இயக்குநரைப் பற்றி என்னிடமிருந்த கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. இரண்டு பேரும் சேர்ந்து தயாரிப்பாளரைத் தேடிக்கொண்டிருந்தோம். அதைக் கேள்விப்பட்ட லியோனியின் பள்ளித் தோழர் சேவியர் பிரிட்டோ இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார்.

‘அழகிய கண்ணே’ என்கிற தலைப்பு கதாநாயகியை மையப்படுத்திய கதை எனச் சொல்கிறதே..? - இயக்குநர் மகேந்திரனின் நினைவாக இத்தலைப்பைச் சூட்டினேன். அவர் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரி ‘அழகிய கண்ணே’, ஒரு பெண் குழந்தையை அர்த்தப்படுத்தும்.

இது இன்றைய பெருநகரமாகப் பிதுங்கி நிற்கும் நவீனச் சென்னையில், நம்பிக்கையுடன் வாழ்க்கையைத் தொடங்கும் எளிய மனிதர்களின் கதை. இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக வேலை செய்கிறார் நாயகன். அவரது மனைவி மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.

இருவரும் மதுரையில் சந்தித்துக் காதலிக்கிறார்கள். திருமணத்துக்குப் பின் சென்னையில் குடியேறும் அவர்களுக்குப் பெண் குழந்தைப் பிறக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியைச் சந்தித்துக் கதை சொல்கிறார் நாயகன். வெற்றி அருகில் வரும்போது, வாழ்க்கை அதற்கான விலையைக் கேட்கிறது.

அதில் நாயகனும் நாயகியும் எதை இழந்து, எதைப் பெறுகிறார்கள் என்பதைக் குடும்பச் சித்திரமாகப் படைத்திருக்கிறேன். விஜய் சேதுபதியும் இயக்குநர் பிரபுசாலமனும் நட்புக்காக, அவர்கள், அவர்களாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதில் அண்ணனுடைய பாணி துளியும் இருக்காது. ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in